Published : 01 Sep 2014 02:11 PM
Last Updated : 01 Sep 2014 02:11 PM

கஷ்டத்திலிருந்து விடுபட..

மாபெரும் விளையாட்டு வீரர்கள் தீவிரமான பயிற்சிகள் செய்வார்கள். பளு தூக்கு வார்கள். உடற்பயிற்சி செய்வார்கள். வலியை அனுபவிப்பார்கள், வியர்வை சிந்துவார்கள். சில வேளைகளில் கண்ணீரும் சிந்துவார்கள்.

ஆனால் வெற்றிக்கான அவர்களது வேட்கை அவர்களை வழிநடத்தும். வலி, காயங்கள், பின்னடைவுகள், சிக்கல்கள் ஆகியவை எத்தனைதான் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து கடினமான பயிற்சிகளைச் செய்துகொண்டேயிருப்பார்கள். இவை அனைத்தும் உடலையும் மனதையும் போட்டிக்குப் பக்குவப்படுத்தும் செயல் முறைகள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

கஷ்டங்களுக்கு நன்றி

அது போலவே நானும் வாழ்க்கையின் சுமைகளுடன் உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் பல ஆண்டுகள் போராடியு ள்ளேன். உங்களுக்குத் தெரியுமா? நான் பட்ட கஷ்டம் ஒவ்வொன்றுக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

இந்த அனுபவங்கள்தான் என் வாழ்வை வடிவமைத்திருக்கின்றன. இன்று நான் திறமையுள்ளவனாகவும் வெற்றியாளனாகவும் விளங்குவதற்கு இவையே காரணம். சாம்பியன்களின் பயிற்சிகள் மற்றவர்கள் செய்யும் பயிற்சிகளைவிடத் தீவிரமானதாக இருக்கும். என்னுடைய பயிற்சிகளும் அப்படித்தான்.

நான் ஒரு சாம்பியன். அதற்குக் காரணம் என் வாழ்வின் சுமைகளால் உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு ஏற்பட்ட வளர்ச்சிதான். அதுதான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கான வழி அதை அனுபவித்து மீண்டு வருவதுதான். நீங்கள் எங்கே செல்ல இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தற்போது இருக்கும் இடம் தீர்மானிக்கப் போவதில்லை.

ஓடிக்கொண்டிருந்த அம்மா

நான் மூன்று வயதாக இருந்தபோது, எனது அம்மா என்னுடனும் எனது இரண்டு அண்ணன்களுடன் வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டிருந்தாள். ஷூக்கள் இல்லாமல் எங்கே போகப் போகிறோம் என்று தெரியாமல் நாங்கள் டெக்சாஸில் இருந்த எங்கள் வீட்டிலிருந்து வெளியேறி ஓடிக்கொண்டிருந்தோம்.

அரசுதான் எங்களை கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோசுக்கு அனுப்பியது. உருக்குலைந்த பெண்கள் இல்லத்தில் நாங்கள் தந்தையில்லாமல் மறைந்து வாழ்ந்தோம்.

வண்ணக்காகித சாப்பாடு

“பாலுக்காக நாம் ஏன் பவுடரையும் தண்ணீரையும் கலக்கிறோம்? மற்றவர்கள் மட்டும் கடையில் வாங்கிய பாலைக் குடிக்கிறார்களே?” “மற்றவர்கள் எல்லாம் சமையலறையில் உள்ள மேசையில் சாப்பிடும்போது நாங்கள் மட்டும் ஏன் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறோம்? ”

“எங்கள் பணம் ஏன் ஒரு புத்தகத்தின் மூலம் வருகிறது? எல்லா பில்களும் வித்தியாசமான வண்ணங்களில் உள்ளன? எங்களிடம் உள்ள வேடிக்கையான வண்ணக் காகிதத்தைக் கொண்டு நாங்கள் சாப்பாடு மட்டுமே வாங்க முடிகிறது.”

அப்பா என ஒருவரை அம்மா அறிமுகப்படுத்தினார். அவரிடம் எங்களை விட்டுவிட்டு இரண்டாண்டுகள் எங்கோ அம்மா சென்று விட்டார். அம்மா இறந்துவிட்டார் என்றே நினைத்தேன்.

வாழ்க்கையின் நியாயம்

“வாழ்க்கை நியாயமானதாக இல்லை” என்பதே என் அணுகுமுறையாக இருந்திருக்க வேண்டும். உங்களுடைய அணுகுமுறையாகவும் அது இருக்கலாம். நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? வாழ்க்கை நியாயமாக இருக்கும் என்று உங்களிடம் யாராவது சொன்னார்களா?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்களா அது முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நீங்கள் முன்னேறினாலும் சரி, வீழ்ந்தாலும் சரி. உங்கள் விதி என்பது பற்றி என்ன சொன்னாலும் சரி அதுதான் உண்மை.

தொலைநோக்கு

உங்களால் அதைப் பார்க்க முடியவில்லையென்றாலோ, அதைச் சொல்ல முடியவில்லையென்றாலோ அங்கே தொலைநோக்கு இல்லை என்று அர்த்தமாகிறது. எங்கே தொலைநோக்கு இல்லையோ அங்கே மக்கள் மடிகின்றனர்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ என்னவாகப் போகிறீர்களோ அதுதான் நீங்கள். நீங்கள் எங்கிருந்து தொடங்கினீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல.

நான் இளைஞனாக இருந்தபோது பள்ளியிலும் பல்வேறு இடங்களிலும் தொந்தரவுக்குள்ளான நபராக இருந்திருக்கிறேன். நான் திறமைசாலி என்று என் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். நான் அவர்கள் பொய் சொல்வதாக நினைத்தேன். அப்படித்தான் அவர்கள் கூற வேண்டும் என்றும் புகழ்வதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது என்றும் நினைத்தேன்.

தப்பித்தல்

எனக்கு எரிச்சலாக இருந்தது. நான் அத்தனை திறமைகளை வைத்திருப்பவன், அதையெல்லாம் வீண்டிக்கிறேன் என்று அவர்கள் கூறுவதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் களைப்படைந்துவிட்டேன். நான் கடந்த விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று நான் நினைத்தேன்.

நான் அப்போது நடுநிலைப் பள்ளி படித்து முடித்திருந்தேன். அந்த வயதில் எனது வாழ்வில் நின்று நிதானித்து எனது திறன்கள் பற்றி யோசிக்க முடியவில்லை. நான் போதை மருந்துகள், மது, கொடுமையான வன்முறை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க வேண்டிய நிலையில் இருந்தேன்.

ஒரு தந்தை குழந்தைகள் மேல் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார் என்று என் ஆசிரியர்களுக்குத் தெரியுமா? அவர்களின் அம்மா உயிருடன்தான் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாத நிலை அவர்களுக்கு இருக்கிறதா?

மாற்றம்

நான் என் திறன்கள் குறித்துப் பேசவிரும்ப வில்லை. நான் உயிர் பிழைத்திருக்க விரும்பினேன்! மிகப் பெரிய வலியை மறைத்து வாழும் ஒரு சின்னஞ் சிறுவனிடம் பெரும் திறன்களை ஒருவர் எப்படிக் காண முடிந்தது? என்னிடம் உள்ள திறன்கள் என்னவென்று அவர்களால் எப்படி உணர முடிந்தது?

அவர்களால் உணர முடிந்ததை என்னாலும் உணர முடிந்தபோது என்னுள் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

கட்டுரையாளர் ஒரு அமெரிக்கர். அவர் எழுதியுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. வெளியீடு: சக்சஸ் ஞான், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x