Last Updated : 28 Jun, 2016 11:31 AM

 

Published : 28 Jun 2016 11:31 AM
Last Updated : 28 Jun 2016 11:31 AM

கண்ணுக்குத் தெரியாமல் வழிகாட்டும் கருவி

பேச்சாளர்களுக்கு நாவன்மையுடன், நல்ல நினைவாற்றலும் அவசியம். சில நேரங்களில் மறதி காரணமாக, சொல்ல வந்ததை மறந்து திண்டாடலாம். ஆனால், நவீன கால பேச்சாளர்களுக்கு இந்த கவலையே வேண்டாம். அவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தொலைஉரைக்காட்டி (டெலிப்ராம்ப்ட்டர்) சாதனம் இருக்கிறது.

பேச வேண்டியவற்றை பேச்சாளர்கள் முன் தோன்றச் செய்யும் தொழில்நுட்பம் சார்ந்த சாதனம்தான் தொலைஉரைக்காட்டி. இச்சாதனத்தை நேரடியாகப் பார்க்காதவர்கள் இருக்கலாம். ஆனால் அதன் பயன்பாட்டைப் பல இடங்களில் நம்மை அறியாமல் எதிர்கொண்டுதான் இருக்கிறோம். தொலைக்காட்சி செய்தி வாசிப்புகளில் தொடங்கி, படப் பிடிப்புகள், கருத்தரங்குகள், அரசியல் பிரச்சாரம் என்று பல இடங்களில் தொலைஉரைக்காட்டி பயன்படுத்தப்படுகிறது.

மோடியின் உரை வீச்சு

இந்தச் சாதனம் பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். அதாவது பயன்படுத்துபவர் அதைப் பார்க்க முடியும். ஆனால் அது பயன்படுத்தப்படுவதைப் பார்வையாளர்கள் உணர முடியாது. தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பின்போது, செய்தி வாசிப்பவர் எதையுமே பார்க்காமல் செய்திகளையும், புள்ளிவிவரங்களையும் வாசித்துக்காட்டுகிறார்கள் என்று நாம் சில நேரங்களில் வியப்பது உண்டு அல்லவா? இதற்கு காரணம் கேமராவின் கீழ் இருக்கும் மானிட்டரில் அவர்களுக்கான எழுத்து வடிவம் தோன்றுவதுதான்.

தொலைஉரைக்காட்டி சாதனங்கள் இன்று நவீன வடிவம் எடுத்திருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உரையாற்றியபோது, தொலைஉரைக்காட்டியை அவர் பயன்படுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன அல்லவா! பிரதமர் மோடி பயன்படுத்திய சாதனம் வெறும் கண்ணாடிப் பலகை போலதான் காட்சி அளிக்கும்.

பேச்சாளருக்கு முன்பு இரு பக்கமும் 45 டிகிரி கோணத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கண்ணாடி மீது எழுத்து வடிவம் ஓடவிடப்படும். இதைப் பேச்சாளர் மட்டுமே பார்க்க முடியும். பார்வையாளர்களுக்குக் கண்ணாடி மட்டும்தான் தெரியும்.

எத்தனை வசனங்களை மனப்பாடம் செய்ய?

ஆனால் ஆரம்ப கால தொலைஉரைக்காட்டிகள் இத்தனை நேர்த்தியாக இருக்கவில்லை. தொலைஉரைக்காட்டிகள் முதன் முதலில் 1950-ல் பயன்படுத்தப்பட்டன. தொலைக்காட்சித் துறையில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன. ஏனெனில் தொலைக்காட்சி பிரபலமாகி நேரலை நிகழ்ச்சிகள் பிரபலமான காலத்தில் அதற்கான தேவை அதிகரித்தது.

நாடகம் அல்லது திரைப்படம் என்றால் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டு பேசலாம். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தினமும் புதிய வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. கேமரா இயங்கிக் கொண்டிருக்கும்போது வசனங்களை மறந்துவிட்டு விழித்தால் பெரும் சங்கடமாகிவிடும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரெட் பார்ட்டன் எனும் நடிகர் இத்தகைய சங்கடம் தனக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என நினைத்து இதற்கு மாற்று வழி தேடினார். நாடகங்களில் துண்டுச் சீட்டுகளை எழுதி வைத்துக்கொண்டு அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் எடுத்துப் பார்ப்பது போல, கேமராவுக்குப் பின் தானாக இந்தத் துண்டுச் சீட்டுகளை ஓடச் செய்தால் என்ன என்று அவர் யோசித்தார். இந்த யோசனைக்கு, அவரது சகாவான ஹூயூபர்ட் ஸ்கால்ஃபிளை (Hubert Schlafly ) எனும் பொறியாளர் செயல் வடிவம் கொடுத்தார். இப்படி தான் முதல் தொலைஉரைக்காட்டி உருவானது.

அவர் உருவாக்கிய சாதனம், சூட்கேசின் உட்பகுதியில் காகிதங்கள் சொருகப்பட்டு அவை அடுத்தடுத்து சுழலும் வகையில் அமைக்கப் பட்டிருந்தன. சாதனம் வினோதமாக இருந்தாலும் கொட்டை எழுத்துக்கள் கேமரா அருகே தோன்றியது நடிகர்களுக்குப் பேருதவியாக இருந்தது. பின்னர் பார்ட்டன், ஸ்கால்ஃபிளை மற்றும் இர்விங்கான் ஆகியோருடன் இணைந்து தொலைஉரைக்காட்டி சாதனங்களைத் தயாரிப்பதற்கான நிறுவனத்தை உருவாக்கினார். இடையே பெரிய எழுத்துக்களைக் கொண்ட தொலைஉரைக்காட்டி கார்ப்பரேஷன் என அதன் பெயர் அமைந்திருந்தது.

கணினி முதல் தொலைக்காட்சிவரை

இந்த சாதனம் பிரபலமாகி மேலும் பலரும் வேறு வடிவங்களில் தயாரிக்கத் தொடங்கினர். 1952-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் ஹெர்பெர்ட் ஹூவர் முதல் முறையாக இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தினார். அதன் பிறகு 1954-ல் அதிபர் ஐசன்ஹோவர் நாடாளுமன்ற உரைக்காக இதைப் பயன்படுத்தினார்.

பின்னர் ‘ஐ லவ் லூசி’ தொடரின் தயாரிப்பாளரான ஜெஸ் ஓப்பன்ஹாமர் கேமரா லென்சில் எழுத்து வடிவம் பிரதிபலிக்கும் சாதனத்தை உருவாக்கினார். அதனை அடுத்து, பர்சனல் கம்ப்யூட்டர்கள் அறிமுகமான காலத்தில் கணினி சார்ந்த டெலிபிராம்ட்டர்கள் உருவாக்கப்பட்டன.

இவற்றின் மேம்பட்ட வடிவமே தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இன்று லேப்டாப்பைக்கூட இதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு வழிகாட்டும் யூடியூப் வீடியோக்களும் நிறையவே இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x