Published : 16 Dec 2014 03:50 PM
Last Updated : 16 Dec 2014 03:50 PM

ஓப்பன் சீக்ரெட்டா, ஒரிஜினல் காப்பியா?

ஒரு வாசகர் “Acquire, abandon ஆகிய இரண்டு வார்த்தைகளுமே A என்கிற எழுத்தில் தொடங்குகின்றன. இவற்றுக்கான தமிழ் வார்த்தைகள் என்ன? அந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே தமிழ் எழுத்தில் தொடங்க வேண்டும்’’ என்று நிபந்தனையுடன் கூடிய கேள்வியைக் கேட்டுள்ளார். பக்கத்தில் உள்ள புகைப்படங்களின் கீழே உள்ள வார்த்தைகளிலிருந்து மேற்கோள் குறிகளை நீக்கிவிட்டால் அதுதான் என் விடை.

Irony என்றால் என்ன? இப்படி ஒரு கேள்வி வேறொரு வாசகரிடமிருந்து கேட்கப்பட்டிருக்கிறது. வார்த்தைகளின் அர்த்தமும் அவற்றின் நோக்கமும் மாறுபட்டிருந்தால் அது Irony. அதாவது முரண்.

பிரபல கவிஞர் காலரிட்ஜின் பிரபல கவிதை வரிகள் இவை. Water, water, everywhere, nor any drop to drink. நடுக்கடலில் மாட்டிக் கொண்ட ஒருவனுக்குத் தாகம். கண்ணுக்குத் தெரிந்த இடமெல்லாம் தண்ணீராக இருந்தாலும் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்பது என்ன ஒரு Irony!.

Irony என்பது குறிப்பிட்ட ஒரு சூழலையும் குறிக்கும். அதாவது பொதுவான எதிர்பார்ப்பிலிருந்து மிகவும் மாறுபடுவது.

இதற்கு ஓர் அற்புத உதாரணம் The gift of Maggie என்ற கதை. ஓர் இளம் தம்பதி ஏழ்மையில் வாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் வருகிறது. கணவனும், மனைவியும் ஒருவருக் கொருவர் ஏதாவது பரிசு தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இருவரிடமுமே ஒரு காசுகூட இல்லை. நீண்ட கூந்தல் கொண்ட அந்தப் பெண் சவுரிக் கடை ஒன்றில் அந்தக் கூந்தலை விற்றுவிடுகிறாள்.

கிடைத்த பணத்தில் கணவனின் கைக்கடிகாரத்துக்கு ஒரு தங்க ஸ்ட்ராப் வாங்குகிறாள். வீட்டுக்கு வந்த கணவன் திடுக்கிடுகிறான். தன் மழிக்கப்பட்ட தலைதான் அதிர்ச்சிக்குக் காரணம் என நினைக்கும் மனைவி, அவனுக்கான பரிசை நீட்ட, அவன் மேலும் நிலை குலைகிறான். காரணம் அவன் தன் கைக்கடிகாரத்தை விற்றுக் கிடைத்த தொகையில் அவளுக்கு ஒரு ஜோடி தங்க ஹேர்பின்களை வாங்கி வந்திருந்தான். என்னவொரு Irony!.

ஒரு முட்டாளைப் பற்றி “அவனுக்குத் தெரியாததே இல்லை” என்றும், ஒரு சோம்பேறியைப் பற்றி “அவனிடம் ஒரு வேலை கொடுத்தால் மறந்திடலாம்” என்றும் கூறுவது இந்த வகைதான்.

சிலர் oxymoron என்பதை irony யுடன் குழப்பிக் கொள்வார்கள். Oxymoron என்பது நேரெதிர் அர்த்தம் கொண்ட இரண்டு வார்த்தைகளின் இணைப்பு. கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை அபத்தங்கள்.

அது ஒரு open secret என்பது இப்படித்தான். It is awfully pity என்பதும் இப்படித்தான். உணர்ந்து சொன்னார்களோ, உணராமல் சொன்னார்களோ, original copies, liquid gas, same difference என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்களே. என்ன நீங்கள் இப்போது clearly confused-ஆ?

HUMAN – HUMANE

Human என்றால் அது மனிதன் தொடர்பானது. It is a human error என்றால் அது மனிதர்கள் இயல்பாகச் செய்யக் கூடிய ஒரு தவறு என்று பொருள் கொள்ளலாம்.

Humane என்றால் அது மனித இயல்பைத் தாண்டியும் விசேஷமானது. அதில் கருணை, பரிவு, பண்பாடு போன்றவை கலந்துள்ளன. ஒருவர் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். அல்லது சிலரது கல்விக்கு உதவுகிறார். இதை It is a humane action என்று கூறலாம். அதாவது ‘கடவுள் பாதி மிருகம் பாதியில்’ மிருகம் இல்லாத பகுதி. மனிதம்!

To err is human (humane அல்ல).

Humane-ஐத் தெரிந்து கொள்ளும்போதே அதன் பிற்பகுதியான, அதேசமயம் பொருளில் அதற்குச் சற்றும் தொடர்பில்லாத mane என்ற வார்த்தையைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். Mane என்றால் பிடரி. ஆனால் சிங்கத்தோடு மட்டுமே இந்த வார்த்தை தொடர்புபடுத்தப்படுவதில்லை. மிருகங்களின் கழுத்துக்குப் பின்புறம் உள்ள நீண்ட ரோமங்களைத்தான் mane என்கிறார்கள். குதிரைகளுக்குக்கூட mane உண்டு.

“நீ உன் அப்பாவுக்கு எத்தனையாவது குழந்தை?’’ கேள்வி விட்டபாடில்லை.

“Howmanyth son you are in your family?” என்று ஹிந்து ஆங்கில இதழில் முன்பொரு முறை குறிப்பிட்டிருந்ததாக ஒரு வாசகர் தெரிவித்திருக்கிறார்.

“What is your filial of your parent? என்று கேட்கலாமே’’ என்று கூறுகிறார் மற்றொருவர்.

அடடா! அவஸ்தையான மொழிபெயர்ப்புகளில் அளவில்லாத ஆர்வம் காட்டும் உங்களுக்கெல்லாம் நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

பெற்றால்தான் பிள்ளையா? இதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வீர்கள்? (எனக்கு ஒரு முழ நீள மொழிபெயர்ப்பு தோன்றுகிறது. அதைப் பிறகு சொல்கிறேன்)

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x