Published : 09 Feb 2016 11:23 AM
Last Updated : 09 Feb 2016 11:23 AM

என்னைச் செதுக்கிய மாணவர்கள் 25: கேள்வி ஞானி அந்தோணி ஜோசப்

ஒருவகைத் திறனை வேறுவகை சிக்கலுக்குத் தீர்வாகப் பயன் கொள்ள வைப்பதே ஆற்றல் மிகு நுண்ணறிவு. மொழி ஆளுமையின் முதல்படியான அது மனிதருக்கு மனிதர் வேறுபடும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் நோம் சாம்ஸ்கி

வள்ளுவரும் ‘கல்வி ஞானம், கேள்வி ஞானம்’ பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளார். ஒருவர், தான் கேள்விப்படும் விஷயங்கள், எதிர்கொள்ளும் அனுபவங்கள் வழியாகவேகூட நிறைய கற்றுக்கொள்ள முடியும். பாடத்திட்டத்தின் வழியாகத் திணிக்கப்படும் ‘கல்வி ஞானம்’ நிரந்தரமானதா என்பதில் அறிஞர்களுக்குச் சந்தேகம் உண்டு.

அறிதல் நடவடிக்கை வலுக்கட்டாயமாக நடக்கும்போது பரந்துபட்டதாக இருப்பது கிடையாது. படித்து மனப்பாடம் செய்த பல விஷயங்கள் ஒருமுறை பரீட்சை எழுதி முடித்த கையோடு காற்றில் போய்விடுவதே யதார்த்தம். கற்றல் மனதில் நிறுத்துதல் வார்த்தையில் வடித்தல் மதிப்பெண் பெறுதல் என்பது ஒரு வட்டம். அதில்தான் பாடப்புத்தக ஞானம் செயல்படுவதால் அதன் கடைசி நோக்கம் (மதிப்பெண்கள் பெறுவது) நிறைவேறிய கையோடு மனதிலிருந்து அகன்றுவிடுகிறது.

கல்வி ஞானமா, கேள்வி ஞானமா எது நமது நினைவில் நீண்டகாலம் தங்குகிறது? சிக்கலான தருணங்களில் எது நமக்கு ஆபத்தில் உதவுகிறது? வேலைக்குப் போவதற்குக் கல்வி ஞானம் தரும் சான்றிதழ் வேண்டும். ஆனால் வேலை செய்வதற்குக் கேள்வி ஞானமே அதிகம் உதவுகிறது என்பது பல அறிஞர்களின் கருத்து. ஆனால் கேள்வி ஞானத்தையே கல்வி ஞானமாக மாற்ற முடியும் என்பதை எனக்குக் காட்டியவர்தான் மாணவர் அந்தோணி ஜோசப்.

ஞானத்தின் ஊற்றுக்கண்

புலனுணர்வு உளவியலின் (Cognitine Psychology) தந்தை எனப் போற்றப்படுகிறார் அல்ரிக் நெய்சர் (Ulric Neisser). ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த கல்வியாளர். மனித வாழ்வில் நினைவாற்றலின் பங்கு குறித்தும் கல்வியின் மொழிவழித் தகவல்களை நமது மனம் நிரந்தர அறிவாக மாற்றும் வழிகளைக் குறித்தும் ஆராய்ந்தவர் அவர். நினைவாற்றல் தானாகவே உருவாவது கிடையாது. அது ஒவ்வொரு குழந்தையாலும் சுயமாகக் கட்டமைக்கப்படுகிறது என்றார் நெய்சர்.

தகவல்களின் அறிவை மனதில் ஏற்ற உருப்போடுவது அதனை நிரந்தர அறிவாக மாற்றாது. ஒரு ரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள் குறித்த நினைவுகளை நம் மனம் எத்தனை நேரம் நினைவில் வைத்திருக்கும்? நமது சுற்றமாய் வாழும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களைக் குறித்த நினைவுகள் எவ்வளவு நிரந்தரத் தன்மை உடையவை? இந்த இரண்டையும் ஒப்பிடலாம். கூடவே நம் உறவாக வாழும் நம் இல்லத்து மனிதர்கள் குறித்த நினைவுகளையும் ஒப்பிடலாம். பள்ளிப்பாடங்களும் இப்படிப்பட்டவையே என்கிறார் அறிஞர் நெய்சர்.

நினைவாற்றலில் பதிந்து ஒரு விஷயம் நமக்குள் ஒரு அங்கமாக வேண்டுமானால் அதன் உட்கூறாக நாமும் இருக்க வேண்டும் என்பது அவரது உளவியல் கண்டுபிடிப்பு. தான் சம்பந்தப்பட்ட ஒரு அனுபவமாய் மாறாதவரையில் கல்வி நிரந்தரமான அறிவாக மாற வாய்ப்பே இல்லை என்றார் அவர். ‘தன் அனுபவப் பிரதிநிதித்துவ நினைவாற்றல்’ (Repisodic Memory) எனும் பதத்தைக் கல்வியில் அவர் அறிமுகம் செய்தார். பள்ளிக்கல்வியின் பெரும்பாலான தருணங்கள் தகவல்களை உருப்போடும் நடவடிக்கையில் செலவாவதைப் பார்க்கிறோம்.

அந்த முறையில் கற்பவர் அதில் ஒரு பாகமாய் இணைவதில்லை என்பதே யதார்த்தம். எனவே, அவை ஒரு ரயில் பயணத்தின் நண்பர்கள்போலப் பயணம் முடிந்ததும் நினைவிலிருந்தே விரைந்து உதிர்ந்துவிடுகின்றன. பல நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு 14 வருடங்களுமே ரயில் பயணம் போலாகிவிடுகின்றன. இது எவ்வளவு பெரிய அபத்தம். நினைவாற்றல் விஷயத்தில் இதையும் மீறிப் புதிய எல்லைகளைத் தொட முடியும் என எனக்குக் காட்டியவர் மாணவர் அந்தோணி ஜோசப்.

சினிமாப் பைத்தியம்

ஒன்பதாம் வகுப்பு மாணவராக அந்தோணி ஜோசப் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் தீவிரமான ரஜினி ரசிகர், சினிமா வெறியர் என்பது தெரிந்தபோது எனக்கு (எல்லா ஆசிரியர்களையும் போலவே ) அவர்மீது கடும் வெறுப்பு ஏற்பட்டது. வந்த படம், வராத படம்,வரப்போகும் படம் என அவருக்குத் திரைப்படங்கள் அத்துப்படி. குறிப்பாக ரஜினியின் படங்கள். ரஜினியின் அங்க அசைவு உட்பட அவரது ரத்தத்தில் கலந்திருந்தது. அவரைத் தூற்றாத ஆசிரியரே இல்லை. ரஜினி படம் தான் என்றில்லை. பொதுவாக அவர் பள்ளி வரவில்லை என்றால் அன்று ஏதோ புதுப்பட ரிலீஸ் என்று அர்த்தம். அவரது புத்தகப் பையில் சினிமா பாட்டுப்புத்தகம், தினசரிகளில் வந்த புது சினிமா விளம்பரங்கள் எனக் கொட்டிக் கிடக்கும். அவற்றுக்கிடையேதான் பாடப் புத்தகத்தைத் தேடுவார்.

ஆசிரியர் வகுப்பில் இல்லாத பொழுதுகளில் அங்கே எப்போதும் அந்தோணி ஜோசப் ராஜ்யம்தான். பல்வேறு நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வது அவருக்குக் கைவந்த கலை. அவரது கலையைப் பார்த்து முழு வகுப்பே குதூகலிப்பதை எட்ட நின்று பார்த்து நான் பொறாமைப் பட்டிருக்கிறேன்.

ஆனால் பாடங்களின் மதிப்பெண் ‘ரிலீஸ்’ ஆகும் நாளில் ரொம்ப சோகமாக இருப்பார். ஆசிரியர்கள் அவர் மீது பாய்ந்த ஒரு துயர நாளில் நான் அவரோடு பேசினேன். “எந்தத் திரைப்பட வசனம் என்றாலும் படத்தின் பெயரை உடனே சொல்ல முடிந்த அளவு நினைவாற்றல் கொண்டவரால் படிக்க முடியாதா?” என்று கேட்டேன். என்ன அற்புதம்! அடுத்த மாதாந்தரத் தேர்வில் கணிசமாகப் பாஸ் மார்க் வாங்கிய அந்தோணி ஜோசப் என் பாடமான அறிவியலில் எழுபது மதிப்பெண்கள் பெற்று எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தார்.

மிமிக்ரி வழியே கேள்வி பதில்

கண்டிப்பாகக் காப்பி அடித்திருக்கிறார் என்று வகுப்பே பேசியது. நான் “இது எப்படிச் சாத்தியப்பட்டது?” என்று அவரிடம் கேட்டேன். ‘‘அது ரொம்ப ஈசி சார்’’ என்றார். அவர் தந்த விளக்கம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘‘கேள்விகளை நடிகர் வாரியா பிரித்தேன். இது ரஜினி கேள்வி’’ மடமடவென ரஜினி மாதிரியே விடையை மிமிக்ரி செய்தார். ‘‘இது சிவாஜி கேள்வி’’ என்றார். விடை சிவாஜி குரலில் வெளிப்பட்டது. கமல் முதல் கவுண்டமணி வரை, சத்யராஜ் முதல் வடிவேல் வரை வேறுவேறு கேள்விகளுக்கு விடைகளை மிமிக்ரி செய்து வகுப்பை வியப்பில் ஆழ்த்தினார் அந்தோணி ஜோசப்.

கேள்வித்தாளில் இது ரஜினி கேள்வி என்ற புரிதல் வந்ததும் விடை தானாக ரஜினி சாயலில் கொட்டுகிற நினைவாற்றல் விந்தை அது. கேள்வி ஞானமாய் மனதில் பதியும் சினிமா ரசனையைக் கல்வி ஞானம் பெறப் பயன்படுத்த முடியும் என்று எனக்குப் புரிய வைத்தார் அந்தோணி ஜோசப். அவர் இப்போது அவர் காலத்தில் பிரபலமான சினிமாவான ‘நான் மகான் அல்ல’ படத்தின் ரஜினியைப் போல ஒரு வழக்கறிஞர் ஆகியிருக்கிறார்.

- தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x