Last Updated : 25 Apr, 2017 11:23 AM

 

Published : 25 Apr 2017 11:23 AM
Last Updated : 25 Apr 2017 11:23 AM

ஆங்கிலம் அறிவோமே 157: இப்படியெல்லாம்கூட கேள்விகளா?

கேட்டாரே ஒரு கேள்வி

புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போதும், மது அருந்துவதற்கு முன்னாலும் cheers என்று நாம் எதற்காகச் சொல்கிறோம்?

நாங்கள் தினமும் மாலை 4.00 மணிக்கு பேட்மிண்டன் விளையாடுவோம். அதை “We used to play badminton at 4.00 P.M.” என்று எழுதலாமா? இது ஒரு வாசகர் கேள்வி.

கூடாது. Present tense-ல் We play badminton at 4.00 P.M. என்று எழுதினாலே போதுமானது. Daily என்ற வார்த்தையை அந்த வாக்கியத்தில் சேர்த்துக் கொண்டால்தான் எனக்கு திருப்தி என்று நீங்கள் கூறினால் (அது அவசியமில்லை என்றாலும்) உங்கள் இஷ்டம்.

ஆனால் used to என்பது ஒரு காலத்தில் பின்பற்றப்பட்ட, பிறகு கை​விடப்பட்ட வழக்கத்தைத்தான் குறிக்கிறது. எனவே we used to play badminton at 4.00 P.M. என்றால் முன்பு அந்த நேரத்தில் பேட்மிண்டன் ஆடுவதை நீங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தீர்கள். ஆனால் இப்போது அப்படி ஆடுவதில்லை என்று அர்த்தமாகிறது.

மதுக்கடைகளை ​மூடுவதற்கு போராட்டங்கள் நடைபெறும் காலகட்டத்தில் ‘கேட்டாரே ஒரு கேள்வி’யைப் பார்த்தால் நண்பர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

மது அருந்துவதற்கு முன்னா​ல்தங்கள் மதுக் கோப்பையை ஒன்றோடொன்று இடித்தபடி ‘cheers’ என்று கூறுவதை திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்தப் பழக்கம் இருக்கிறது என்கிறார்கள்.

Chiere என்பது ஒரு பழைய பிரெஞ்சு வார்த்தை. அதற்குப் பொருள் ‘முகம்’ என்பதாகும். Cheer-உடன் இருப்பது என்றால் ‘மகிழ்ச்சியான முகத்துடன் இருப்பது’ என்று அர்த்தமாகிறதாம்.

பிரபல எழுத்தாளர் அலெக்சாண்டர் ​டூமாஸ் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார், “தங்கள் மது நிரம்பிய கோப்பையை ஒன்றோடொன்று இடிக்கும்போது ஒவ்வொன்றிலிருந்தும் ஒருசில துளிகள் பிற கோப்பைகளில் சிந்திக் கலப்பது இயல்பு. யாருடைய மதுவிலும் நஞ்சு கலந்துவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது” என்கிறார் அவர்.

புகைப்படத்துக்குப் போஸ் கொடுக்கும்போது ‘cheers’ என்று சொல்வதில்லை. ‘Cheese’ என்றுதான் கூறுவோம்.

பாலாடைக்கட்டி என்று கூறும்போது சிலருக்கு வாய் விசித்திரமாகக் காட்சி தரலாம். ஆனால் அதன் ஆங்கில வார்த்தையான Cheese என்பதைக் கூறும்போது வாய் புன்னகைப்பதுபோல் இருக்கும். புகைப்படங்களில் இனிமை கூடும்.

Wh- Question என்று ஒரு ​நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன பொருள் என்று ​கேட்கிறார் ஒரு வாசகர்.

Who, What, Whom, Why, Where, Which, When போன்ற கேள்விக்கான வார்த்தைகள் Wh என்று தொடங்குகின்றன. எனவே இந்த வார்த்தைகளில் தொடங்கும் வாக்கியங்களை ‘Wh- Question’ என்கிறார்கள். சந்தடி சாக்கில் how என்ற வார்த்தையும் இந்தப் பட்டிய​லில் இடம்பெற்றுவிட்டது! இந்த வகைக் கேள்விகளை ‘open questions’ என்பார்கள். அதாவது இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தனது விருப்பத்திற்கேற்ப கூறும் வாய்ப்பு பதிலளிப்பவருக்கு இருக்கிறது.

மாறாக சில கேள்விகளுக்கு yes அல்லது no என்றுதான் பதிலளிக்க முடியும். வேறு சில கேள்விகளுக்கு நம் பதில் சுருக்கமாகத்தான் இருக்க முடியும். அதாவது இவற்றில் ஒன்றுதான் பதில் என்பதுபோல் கேள்வி கேட்பவர் நம் சுதந்திரத்தைச் சுருக்கி விடுவார். (Do you prefer coffee or tea? என்பது ஓர் உதாரணம்). இதுபோன்ற கேள்விகளை ‘closed questions’ என்பார்கள். ஆனால் அதற்கும் “நான் விரிவாகத்தான் பதிலளிப்பேன்” என்று தீர்மானித்து பதிலளிக்கலாம். I prefer entirely a different beverage – orange juice. என்றாலும் கேள்வியைப் பொறுத்தவரை அது closed questionதான்.

This cup is cracked, I do not want to use it என்பது சரியா? தவறு. இரண்டு தனி வாக்கியங்கள்போல் தோன்றுவதற்கு நடுவே கமா போடக் கூடாது. கீ​ழே உள்ளவற்றில் ஏதாவது ஒரு வகையில் நீங்கள் வாக்கியங்களை அமைக்கலாம்.

1. The cup is cracked. So I do not want to use it.

2. The cup is cracked​; so I do not want to use it.

3. Since the cup is cracked, I do not want to use it.

4. I do not want to use this cracked cup.

-----------------------------------------

போட்டியில் கேட்டுவிட்டால்?

The distant rumbling is a ________ of a thunderstorm.

a) potent

b) portent

c) result

d) echo

e) nearing

Rumbling என்றால் தொடர்ந்து எழும் கடகட என்ற ஓசை. Thunderstorm என்றால் இடியும், மழையும், மின்னலும் கூடிய பெரும்புயல். இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள்களையும் இணைத்துப் பார்க்கும்போது “தொலைவில் கேட்கும் கடகடவென்ற ஒலி, இடியுடன் கூடிய பெரும் புயலுக்கான எச்சரிக்கை மணியாகத் தோன்றுகிறது” என்று பொருள்படுகிறது.

Result என்பது பொருந்தவில்லை. ஏனென்றால் பெரும்புயலின் விளைவு அல்ல கடகட ஓசை.

இதே அடிப்படையில் echo என்ற வார்த்தையும் பொருந்தவில்லை. தவிர echo என்பது சரியானால் அதற்கு​ முன் இருக்க வேண்டிய வார்த்தை ‘an’ (‘a’ அல்ல).

Nearing என்பதும் சரியான வார்த்தை அல்ல. அப்படியானால்கூட nearing thunderstorm என்றுதான் வரும்.

​Potent என்றால் சக்தி மிகுந்த (powerful) என்று பொருள். அந்த வார்த்தையைப் பொருத்தும்போது வாக்கியம் சரியாக அமையவில்லை.

Portent என்றால் வருங்காலம் குறித்த ஏதோ ஒரு சகுனம். பெரும்பாலும் கெட்ட சகுனம். ஆக portent என்ற வார்த்தை இங்கே பொருந்துகிறது. பேரிடியுடன் கூடிய பெரும்புயல் வரப்போகிறது என்பதற்கான அடையாளம்தான் (சகுனம்தான்) தொலைவில் எழும் தொடர் கடகட ஒலி.

எனவே சரியான வாக்கியம் என்பது The distant rumbling is a portent of a thunderstorm.

----------------------------------------------

Fable என்றால்?

கதை. விலங்குகள் இடம்பெறும் கதை. ஒழுக்கம் ஒன்றையும் போதிக்கும்.

I couldn’t agree less என்றால் ஒத்துக்கொண்டதாக அர்த்தமா? அல்லது ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தமா?

ஒத்துக்கொள்ளவில்லை. ஒத்துக்கொள்ளாதபோது அதைக் குழப்பமில்லாமல் வேறுவிதமாகவும் கூறலாம். I am afraid I cannot agree with you. I am not sure I can agree. I am sorry but I have to disagree.

Exterminator என்றால்?

பூச்சி மருந்து அடிப்பவர்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x