Last Updated : 09 Feb, 2016 11:32 AM

 

Published : 09 Feb 2016 11:32 AM
Last Updated : 09 Feb 2016 11:32 AM

இப்படியும் பார்க்கலாம்: எதுக்கு உன்னையே நீ குறைச்சுக்கற?

பிழைப்புக்காக அடிக்கடி மூட்டை முடிச்சுகளுடன் வேறு ஊர், வேறு ரேஷன் கடை, காஸ் ஏஜென்ஸி தேடும் நவீனப் பரதேசி நான். அதனால் ஒரு இரவல் வீட்டினுள் குடி புகுந்த சில தினங்களில் ஊரில் அம்மாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். பொதுவான விசாரிப்புகளில் “புதிய ஓனர் நல்ல டைப்; இவர் மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றேன். அப்போது அம்மா சொன்ன வார்த்தைகள்தான் இந்தக் கட்டுரையின் அடித்தளம்.

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நண்பனும் நானும் சுற்றிக்கொண்டிருந்தோம். இலக்கியம், மதம், அறிவியல், ஜோதிடம், அரசியல், இயற்கை விவசாயம், சிறுதானியச் சிற்றுண்டி, பங்குச் சந்தை, இன்னும் களைப்பில்லாமல் ஓடும் வந்தியத்தேவனின் குதிரை என விதவிதமான நூல்கள். இவை 60 சதவீதம் என்றால், ஏனையவை சுயமுன்னேற்ற நூல்கள். பார்த்துக்கொண்டிருந்தபோதே ஒரு பெண்மணி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு ‘...எப்படி?’ யை வாங்கினார்.

“இது போன்ற புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வருகின்றன. வெளிநாட்டுஎழுத்தாளர்கள் ஆராய்ந்து எழுதுகிறார்கள். அவற்றுடன் ஒப்பிடும்போது தமிழில் சுயசிந்தனையுடன் வரும் புத்தகங்கள் குறைவே. தமிழில் வெளிவரும் நூல்களும் அவற்றின் பாதிப்பாகவோ, மொழிபெயர்ப்பாகவோதான் இருக்கின்றன” என்றார் நண்பர். ஆங்கில, ஜப்பானிய, சில நம்மூர் ஆங்கில எழுத்தாளர்கள் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு “இன்றைய பரபரப்பான உலகமும் மனங்களும் இத்தகைய எழுத்து வைத்தியர்களுக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்” என்று அதிகமாகவே வியந்தார் நண்பர்.

சட்டெனப் பொறி தட்டியது. “ஆங்கிலத்திலும் நல்ல புத்தகங்கள் வருகின்றன என்பதில் உண்மை இருக்கலாம். ஆனால், அதற்காக அயல்மொழி எழுத்தாளர்கள்தான் சுயமுன்னேற்ற நூல்களின் முன்னோடி, கண்டுபிடிப்பாளர்கள் என்கிற மாதிரி நினைத்தால் அது தப்பு” என்றேன்.

“காலை முதல் இரவு வரை செய்யத்தக்கவை / தகாதவை; முதியவரை, விருந்தினரை எப்படி நடத்த வேண்டும், செல்வத்தை எப்படிப் பகிர வேண்டும், வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டியவை, வாழ்க்கையின் இயல்பு… இந்த ரீதியில் நம்மிடையே திரிகடுகம், ஏலாதி, பழமொழி, நாலடியார் என நிறைய நூல்கள் இருக்கின்றனவே?” என்றேன். “அவ்வளவு ஏன், திருக்குறள் அற்புதமான சுயமுன்னேற்ற நூல் இல்லையா?”

அன்றைய நீதி இலக்கியத்தின் இன்றைய நவீன நாமம்தான் சுயமுன்னேற்ற நூல்கள். சுயமுன்னேற்ற இலக்கியத்துக்கு நாம் நிறையவே பங்களித்திருக்கிறோம். மனநல நூல்களின் மறுக்க முடியாத பங்காளிகள் நாம்!

தலை குனிந்து நிற்க வேண்டாம்

நமது வீழ்ச்சிகளுக்கு இதுவும் ஒரு காரணம். நமது நியாயமான மதிப்பை, நற்குணங்களை நாம் அறிந்திருப்பதில்லை. அறிந்திருந் தாலும் தன்னடக்கம் என்ற நாமம் சூட்டி, அவற்றை வெளி உலகுக்குக் காட்டாமல், அநியாயத்துக்குத் தலை குனிந்து நிற்கிறோம்.

வீட்டு உரிமையாளர் பற்றிப் பேசும்போது என் அம்மா சொன்னது இதுதான்: “நீ எப்படி நடந்துக்கறியோ,அத வச்சுத்தான்உன் ஓனரும் உன்னை நடத்தறார். அவர் மாதிரி நல்ல டைப் கிடைக்கறதுக்கு நீகொடுத்து வச்சிருக்கணும்னா, உன்னை மாதிரி (!) ஒருத்தன் கிடைக்க அவரும் கொடுத்து வச்சிருக்கணும்.”

“அவர் நல்லவராகக்கூட இருக்கலாம். ஆனா, நீ பிரச்சினை செய்யற ஆளா இருந்தா, அத சகிச்சுக்கிட்டு அப்பவும் அவர் சிரிச்சுக்கிட்டு இருக்கப்போறதில்ல. அதுக்குத் தகுந்த மாதிரி அவரும் மாறியிருப்பார்! அவர் நல்ல ஆளா இருக்கறது உன்னாலயும்தான். இந்த நல்ல உறவுக்கு நீ நடந்துக்கற விதமும் ஒரு காரணம்னு நீ நம்பு. எதுக்கு உன்னையே நீ குறைச்சுக்கற?”

மகன் மீதான ஒரு தாயின் நம்பிக்கையாக இந்த வார்த்தைகள் இருந்தாலும், இதிலுள்ள உண்மை புறக்கணிக்கப்பட முடியாதது. பேனாவுடன் சண்டை போடும் காகிதத்தில் கடிதமோ, காவியமோ எழுதப்படுவதில்லை. வேர்கள் “ஹலோ” சொன்னால் போதுமா? மண்ணும் கை நீட்டினால்தான் விதை விழிக்கும். ஒரு உறவு நல்ல விதமாகப் பேணப்பட, இரு தரப்பின் நடத்தைகளும் அவசியம்.

இந்த இடத்தில் நான் எதை ஆர்டர் செய்தேனோ, அதுதான் எனக்குப் பரிமாறப்படும். “உங்களை மாதிரி உலகத்துலயே யாரும் கிடையாதுங்க” என்று அளவுக்கு மீறி ஒருவரை உயர்த்தினால், கண்டிப்பாக நான் அதைவிடப் பல மடங்கு தாழ்த்தப்படுவேன். தேவையற்ற இடங்களில் வெளிப்படுத்தப்படும் தன்னடக்கம் நம் சுய மரியாதையைக் குறைத்து நமது கால்களை வாரி விடுகிறது.

நான் மற்றவர்கள் முன் எப்படி நடந்துகொள்கிறேனோ, அதுதான் மற்றவர்கள் என்னை நடத்துவதற்கான அளவுகோல்! என்னை நானே மதிக்காதபோது மற்றவர்கள் என்னை நன்கு ஆராய்ந்து மதிக்க வேண்டும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? நீங்களே உங்களை மதிப்பது முன்சக்கரம் நகர்கிற மாதிரி.அது நகர்ந்தால்தான் அடுத்தவர்கள் உங்களை மதிக்கிற பின் சக்கரம் நகரும்.

எனவே அடுத்தவரை நல்ல டைப், அருமையான டைப், ஆஹா… ஓஹோ... என்று சான்றிதழ் வழங்குவதற்கு முன்னால் அவர் ‘நல்ல டைப்’ ஆக இருப்பதற்கு நீங்களும் காரணம் என்பதை உணருங்கள். அவர்களிடம் நல்ல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி நம்மைச் சிறுமை செய்துவிடும்? நம் மதிப்பைக் குறைத்துவிடும்?

அதற்காக “உரிமையாளரே! என்னை வேலைக்கு வைத்திருப்பவரே! என்னிடம் முதலாளியாக பணியாற்றுபவரே! நான் யார்னு தெரியுமா?” என்றோ, “எங்கள் இலக்கியங்கள் பங்குச் சந்தை, ம்யூச்சுவல் ஃபண்ட், பீட்சா தயாரிப்பது பற்றிக்கூட பேசுகின்றன, தெரியுமா?” என்றோ சவடால் அடிக்க வேண்டாம். ஆனால், உள்ளதைச் சொல்லுவதில் என்ன தயக்கம்?

நமது நிறைகளை நாம் அறிந்திருப்பதும், அவற்றுக்குக் கவுரவம் சேர்க்கும் விதத்தில் நடப்பதும் தற்பெருமையாகாது. தன் மதிப்பை அறிந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். பொதுவாகவே நமக்கு நம்மை மதிக்கிற பண்பு கொஞ்சம் குறைவுதான். அதனால்தான் நம் பெருமைகளை அந்நியர் சொல்லும்வரை காத்திருந்தோம். “வெள்ளைக்காரனே சொல்லீட்டானா?அப்ப சரிதான்...” என வியந்தோம். நம் பெருமை அவர் களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், யாருக்குத் தெரிந்திருக்க வேண்டும்?

இலக்கியங்கள் காலம் கடந்தவை. அவை வரும் நூற்றாண்டுகளிலும் யாராவது மதிப்பதற்காகக் காத்திருக்கும். ஆனால், நம் வாழ்வில் நமக்கான காற்று எப்போது காலாவதியாகும் என்பது தெரியாது. அதற்குள் நாம்தான் காலாகாலத்தில் நமது மதிப்பைக் காப்பாற்றியாக வேண்டும்!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x