Last Updated : 21 Mar, 2017 10:32 AM

 

Published : 21 Mar 2017 10:32 AM
Last Updated : 21 Mar 2017 10:32 AM

ஆங்கிலம் அறிவோமே - 152: புரிகிற மாதிரி புத்திசாலித்தனமாகப் பேசு!

கேட்டாரே ஒரு கேள்வி

PAN AMERICAN என்பதற்கும் PAN CARD-க்கும் தொடர்பு உண்டா?

“ஆங்கிலம் அறிவோமே பகுதியில் பல வார்த்தைகளுக்கு மூல மொழியாக லத்தீனைச் சொல்கிறீர்கள். ஏன் அப்படி? லத்தீன் எங்குப் பேசப்படும் மொழி?” என்பது ஒரு வாசகரின் கேள்வி.

ஆங்கிலத்தில் உள்ள 60-லிருந்து 70 சதவீத வார்த்தைகள் லத்தீனிலிருந்து வந்தவைதான் என்கிறார்கள். பிரெஞ்சு, ரோமானிய மொழி, இத்தாலியன் ஆகியவை லத்தீனை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தவை.

வாத்திகனின் முக்கிய மொழி லத்தீன்தான். தாவரவியலில் ஒவ்வொரு தாவரமும் லத்தீன் மொழி வார்த்தை களில்தான் இனம் பிரிக்கப்படுகின்றன. வெண்டைக்காய்க்கும் வேர்க்கடலைக்கும் தாவரவியல் பெயர்கள் என்ன என்பதை இந்நேரம் அறிந்து கொண்டிருப்பீர்கள். இவ்வளவு சிறப்பு கொண்ட லத்தீன் மொழி இப்போது மிகமிக குறைவானவர்களால்தான் பேசப்படுகிறது - முக்கியமாக ரோம் நகரிலுள்ள ஒரு பகுதியினரால்.

தொடக்கத்தில் இத்தாலியில்தான் லத்தீன் மொழி பேசப்பட்டது. ரோம ராஜ்யம் பரவியதால் லத்தீன் செல்வாக்கு அதிகரித்தது. இப்படித்தான் அது ஆங்கிலத்திலும் அதிகமாகப் புகுந்துகொண்டது.



‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான விடை இதோ: அவற்றுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை.

அமெரிக்கா என்ற வார்த்தையை நாம் USA என்ற நாட்டைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். ஆனால் அமெரிக்கா என்பது மேற்படி நாடு அடங்கிய ஒரு கண்டமும்கூட.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய அனைத்தையும் குறிக்கும் வார்த்தை PAN AMERICAN. பெரும்பாலும் இந்த இரண்டு வார்த்தைகளை ஒரு hyphen ஆல் இணைந்து PAN-AMERICAN என்று குறிப்பிடுகிறார்கள். சில நேரம் hyphen விடுபட்டும் எழுதுகிறார்கள். (அமெரிக்கன் என்றால் குடிமக்களைக் குறிப்பிடுவதுபோல இருக்கிறதே என நினைக்க வேண்டாம். PAN-AMERICA என்றும் இதைச் சொல்லலாம். )

அதற்காக ஒரு கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளையு ம் குறிக்கத்தான் ‘pan’ பயன்படுகிறது என்பதில்லை. Pan-India company என்றால் அந்த நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளிலும் (நான்கு திசைகளிலும்) செயலாற்றுகிறது என்று பொருள். இந்த விதத்தில் pan என்பது “ Presence Across Nation” என்று பொருள் தருகிறது.

வருமான வரித்துறை அளிக்கும் PAN என்பதன் விரிவாக்கம் Permanent Account Number.



Cold call என்றால் என்ன?

ஓரிடத்துக்குச் செல்வதற்கு முன்னதாக நாம் அங்கு வருவதை உரியவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதுதான் நயத்தகு நாகரிகம். ஆனால் நமக்கு அறிமுகமே ஆகாதவர்கள் தொலைபேசியிலோ, நேரடியாகவே திடுமென்று வந்து ஏதாவது பொருளை நம் தலையில் கட்டப் பார்ப்பதுண்டு. இதைத்தான் cold calls என்பார்கள். “We do not entertain cold calls” என்று அறிவித்தால் முன்னதாகவே appointment பெற்ற பிறகுதான் சந்திக்கலாம் என்று அர்த்தம்.



“Has had, have had, had had ஆகிய பயன்பாடுகள் மிகமிக குழப்பமாக உள்ளன. எதனால் இப்படிச் சிக்கலான பயன்பாடுகள்?’’ என்று நொந்துபோன உள்ளத்தைக் கேள்வியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஒரு வாசகர்.

ஓர் அடிப்படையைப் புரிந்துகொண்டால் இந்தச் சிக்கலில் பெரும் பகுதி நீங்கிவிடும்.

Have என்ற வார்த்தை இருவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு auxiliary verb ஆக (இணைக்கும் verb) அது பயன்படுகிறது. கீ ழே உள்ள எடுத்துக்காட்டுகளைப் படியுங்கள்:

1) I have finished the lesson (Finish தொடர்பான காலகட்டத்தை have உணர்த்துகிறது Present perfect tense).

2) I have been working on the project (அதேபோல work எனும் verb-ன் present perfect continuous tense-ஐ have உணர்த்துகிறது).

அதே நேரம் have என்பது ஒரு வாக்கியத்தில் முக்கிய verb ஆகவும் இடம் பெறலாம்.

We have a car.

We have a brother.

இந்த வகை verbs வெவ்வேறு tense-களில் பயன்படும்போது பிற verbs போலவே மாறுதலுக்கு உள்ளாகும்.

He drives a car என்பது He has driven a car என்று present perfect tense-ல் மாறுகிறது. அது போலவே He has a car என்பது He has had a car என்று மாறுகிறது. I had had a bath, but I did not feel clean; so I had a shower என்பது மற்றொரு எடுத்துக்காட்டு.

He had driven a car (Had + drive என்பதன் past participle) என்பது போலவே He had had a car என்று மாறுகிறது (Had + have என்பதன் past participle).

We have driven a car (Have + drive என்பதன் past participle) என்பது போலவே We have had a car(Have + have என்பதன் past participle)



Intellect - Intelligent - Intelligible

Intellect என்றால் தர்க்க ரீதியாக ஒன்றை ஆராய்ந்து பார்த்தல். Her keen intellect is unquestionable. He is a man of action rather than of intellect.

Intelligent என்றால் புத்திசாலித்தனமான. Intelligence என்றால் புத்திசாலித்தனம்.

Intelligible என்றால் புரிந்துகொள்ளக் கூடிய என்ற அர்த்தம். Use words that are intelligible to the audience.



போட்டியில் கேட்டுவிட்டால்?

I _______ Bank of India as a graduate trainee four years ago.

a) was joined

b) joined

c) have joined

d) will join

e) join

நானாகவே அந்த வங்கியில் சேர்ந்தேனே தவிர, யாரோ என்னைச் சேர்த்துவிடவில்லை. எனவே was joined என்பது பொருந்தாது.

இது நான்கு வருடங்களுக்கு முன் நடந்தது. எனவே ‘join’ என்ற நிகழ்கால verb மற்றும் will join என்ற வருங்காலத்தைக் குறிக்கும் verb ஆகியவை இங்குப் பொருந்தவில்லை.

Have joined என்பது present perfect tense. அதாவது ஏற்கெனவே தொடங்கி இன்னமும் தொடரும் ஒன்றை இப்படிக் குறிப்பிடுவோம். ஆனால், வங்கியில் சேர்ந்தது என்பது முடிந்த ஒரு விஷயம்.

எனவே, joined என்பதே இங்குச் சரியான வாக்கியம்.

I joined Bank of India as a graduate trainee four years ago.



சிப்ஸ்

Snail mail என்றால் என்ன?

காலங்காலமாக நாம் அனுப்பும் தபால் முறையைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

Business Card என்பதற்கும் Visiting Card என்பதற்கும் என்ன வேறுபாடு?

Visiting Card-ல் பெயரும் விலாசமும் இருந்தாலே போதுமானது. Business Card-ல் உங்கள் பணியின் பெயரும் உங்கள் நிறுவனம் தொடர்பான தகவல்களும் இருக்க வேண்டும்.

Single out என்றால் தனிமைப்படுத்துவதா?

அப்படித்தான் என்றாலும், அது பெரும்பாலும் அவரைப் பாராட்டும் வகையிலோ அல்லது அவரது சிறப்பை வெளிப்படுத்தும் விதத்திலோ இருக்கும்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x