Published : 20 Oct 2014 03:01 PM
Last Updated : 20 Oct 2014 03:01 PM

அதுவும் சரி, இதுவும் சரியா?

மையம் என்பதை Center என்று எழுத வேண்டுமா அல்லது Centre என்று எழுத வேண்டுமா என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

Realise, realize இரண்டில் எது சரி? இது மற்றொரு வாசகரின் கேள்வி.

“இவ்வளவு நாள் travelled என்றுதான் எழுதுவேன். இப்போதான் தெரியுது அது தப்பு, traveledதான் சரின்னு” என்று சென்ற மாதம் வருத்தப்பட்டார் என் நண்பர். திகைப்புடன் “ஏன் travelled தப்பு என்கிறீர்கள்?’’ என்று கேட்க, கணினியில் அப்படி டைப் செய்தால் அது தவறு என்று சிவப்பு வண்ண அடிக்கோடு வருகிறது என்று ஆதாரம் காட்டினார். Traveled என்று டைப் செய்தபிறகுதான் அந்த அடிக்கோடு மறைந்ததாம்.

இந்த வகைச் சிக்கல்களுக்கு மூல காரணம் பிரிட்டிஷ் ஸ்பெல்லிங்கும், அமெரிக்கன் ஸ்பெல்லிங்கும் அவ்வப்போது மாறுபடுவதுதான். ஒரே பொருளைக் குறிக்க இந்த இரு தரப்பினரும் வேறுவேறு வார்த்தைகளைப் (flat-apartment, petrol station-gas station) பயன்படுத்துவதை நாம் முன்னே பார்த்தோம். இப்போது ஸ்பெல்லிங்கிலும் உள்ள மாறுதல்களைப் பார்ப்போம்.

காரணம்

ஏன் இந்த மாறுபாடு? காரணம் இதுதான். பிற மொழிகளிலிருந்து வார்த்தைகளைக் கையாளும் போது மூல வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கை ஓரளவாவது பிரிட்டிஷ் ஆங்கிலம் தக்க வைத்துக்கொள்கிறது. அமெரிக்க ஆங்கிலமோ அந்த வார்த்தைகளைப் பேசும்போது எப்படி ஒலிக்கிறதோ, அதுபோலவே ஸ்பெல்லிங்கும் இருக்க வேண்டுமென்று முயல்கிறது.

எடுத்துக்காட்டாக, ரெகக்னைஸ் என்ற வார்த்தையை பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் “ise” என்ற எழுத்துகளிலும் முடிப்பதுண்டு. “ize” என்றும் முடிப்பதுண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை “ize” மட்டும்தான். இதனால்தான் அமெரிக்க ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள்கள் Organise என்றோ Apologise என்றோ எழுதினால் அவற்றைத் தவறாகக் கருதுகின்றன.

மாறுபட்ட ஸ்பெல்லிங்குகள் கொண்ட வார்த்தைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அடைப்புக் குறிக்குள் உள்ளவை அமெரிக்க ஸ்பெல்லிங்.

flavour (flavor)

neighbour (neighbor)

labour (labor)

colour (color)

analyse (analyse)

travelled (traveled)

fuelling (fueling)

defence (defense)

licence (license)

offence (offense)

நம்மைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகிறோம். என்றாலும் குழப்பமடையாமல் இருப்பதற்கும் (!) இப்படியும் உண்டு என்பதை அறிந்து கொள்வதற்கும் அமெரிக்க ஸ்பெல்லிங்கையும் அறிந்து கொள்ளுதல் நல்லது.

Here we are

“Here we are” என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். “நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்பதையும் தாண்டி வேறு பொருள் இதற்கு இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்ததால்தான் இப்படிக் கேட்டிருக்கிறார்.

ஒரு ப்ராஜக்டை முடித்துள்ளீர்கள் அல்லது ஒரு சாதனை செய்துவிட்டீர்கள் அல்லது தேடி அலைந்த ஒரு முகவரியைக் கண்டுபிடித்து விட்டீர்கள். அப்படிப்பட்ட சமயத்தில் “Here we are’’ என்று கூறுவதுண்டு. அதாவது “நாம நினைச்ச இந்த இடத்துக்கு வந்துட்டோம்’’ என்று அர்த்தம்.

வணிகத்தில் தொடங்கி ஆட்சியைப் பிடித்த கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை அடைந்ததும் “Here we are” என்று கூறியிருக்குமோ?

இன்னொன்று. பிரிட்டிஷ் கால்பந்து ரசிகர்கள், அவர்கள் அணி கோல் அடித்தாலோ, வெற்றி பெற்றாலோ ‘Here we are’ என்பதைப் பாடல் போல நீட்டி முழக்கிப் பாடிக்கொண்டே இருப்பார்கள்.

Genetic – Genesis – Genus – Genre - Generous

Genetic என்ற வார்த்தை Gene என்பதிலிருந்து வந்தது. Genetic என்பது தோற்றம் தொடர்பானது.

Genesis என்பதும் தோற்றம் என்பதைக் குறிக்கிறது. அதாவது ஆதி காரணம் என்றும் வைத்துக் கொள்ளலாம். The genesis for all the problems in india is over population என்று ஒருவர் கருத்துத் தெரிவிக்கலாம்.

Genesis என்பதை உருவாக்கம் என்றும் கூறலாம். Genetic abnormalities எனும்போது மரபணு (Gene)விலுள்ள கோளாறுகள் என்று அர்த்தம். இதைச் சற்றே பரவலான பொருளிலும் அர்த்தம் கொள்ளலாம். There is a genetic relationship between tamil and telugu என்பதுபோல.

Genus (ஜீனஸ்) என்பது உயிரியல் தொடர்பானது. ஒரே தன்மை அமைந்த பிரிவைக் குறிக்கும். பூக்காத செடிகள், பாலூட்டிகள் என்பதைப் போல.

தொலைக்காட்சியில் சிறந்த பாடகர்கள் மற்றும் நடனக்காரர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு கெமிஸ்ட்ரி என்பதற்கு அடுத்ததாக அதிகம் அறிமுகமான வார்த்தை Genre (ஜானர்) என்பதாக இருக்கலாம். இந்த வார்த்தை இசை அல்லது இலக்கியத்திலுள்ள தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரிவு (மெலடி, குத்துப்பாட்டு என்பது போல) அல்லது இசைநுட்பத்தைக் குறிக்கிறது எனலாம்.

Generous என்றால் தாராளமான என்ற பொருள். He made a generous offer என்பது போல.

தொடர்புக்கு:
aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x