Published : 29 Dec 2015 11:46 AM
Last Updated : 29 Dec 2015 11:46 AM

சேதி தெரியுமா? - நிர்பயா வழக்கு: இளம் குற்றவாளி விடுதலை

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் தண்டனை முடிந்த இளம் குற்றவாளியை விடுதலை செய்ய தடை விதிக்க டிசம்பர் 21 அன்றுஉச்ச நீதிமன்றம் மறுத்தது. இளம் குற்றவாளி விடுதலையை தடுத்து நிறுத்த சட்டத்தில் இடமில்லை என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்தது. இளம் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, வெளியே வீசியெறியப்பட்ட நிர்பயா (ஜோதி சிங்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான 6 பேரில் ஒருவருக்கு அப்போது 17 வயது என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே 3 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிந்ததை அடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டார். பாதுகாப்பு கருதி அவரை ஒரு தொண்டு நிறுவனத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.

சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு அங்கீகாரம்

2015-ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியை சர்வதேச டென்னிஸ் சங்கம் டிசம்பர் 22 அன்று அறிவித்தது. சானியா-ஹிங்கிஸ் ஜோடி இந்த இந்த ஆண்டில் விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், 7 தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. மேலும் தொடர்ச்சியாக 22 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது இந்த ஜோடி. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 62 ஆட்டத்தில் விளையாடி 55-ல் வெற்றி வாகை சூடியது. இப்படிச் சாதனை வெற்றிகளைக் குவித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடியை சர்வதேச டென்னிஸ் சங்கம் சிறந்த ஜோடியாக அறிவித்தது.

சிறார் நீதிச் சட்டத் திருத்தம்

தீவிரமான குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச் சட்டத் திருத்த மசோதா டிசம்பர் 22 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், இளம் குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நிலுவையில் இருந்த இந்த மசோதா எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி குற்றங்களில் ஈடுபடும் சிறார்களைத் தண்டிக்கும் வயது வரம்பை 18லிருந்து 16-ஆகக் குறைப்பது பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி எடுத்துரைத்தார். பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

விமான விபத்தில் 10 பேர் பலி

டெல்லியின் துவாரகா பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எப்) சொந்தமான சிறிய ரக விமானம் டிசம்பர் 22 அன்று வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 10 பேரும் பலியானார்கள். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரட்டை இன்ஜின் கொண்ட சிறிய ரக சூப்பர்கிங் விமானம் ஒன்று ராஞ்சிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பதுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ரஷ்யாவில் மோடி

வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக டிசம்பர் 23 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கிடையே கடந்த 2000 ஆண்டு முதல் மாஸ்கோவிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் மாறிமாறி உச்சி மா நாடு நடைபெறுகிறது. அணு சக்தி, ஹைட்ரோகார்பன், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையிலான உறவை வலுப்படுத்த இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.

ஜேட்லிக்கு எதிராக விசாரணை ஆணையம்

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முன்னாள் தலைமை சட்ட ஆலோசகர் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஆணையத்தை அமைத்து டெல்லி ஆம் ஆத்மி அரசு டிசம்பர் 23 அன்று உத்தரவிட்டது. டெல்லி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீது நிதி முறைகேடு புகார் தொடர்பாக இந்த ஆணையம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையே இந்த விசாரணை ஆணையம் அமைக்க டெல்லி மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று டெல்லி துணை நிலை ஆளுநர் நஜப் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு மோடி திடீர் பயணம்

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, லாகூரில் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து டிசம்பர் 25 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் சென்ற பிரதமர் அங்கே இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு, தலைநகர் காபூலில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி வழியில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சென்றார். லாகூர் விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் கரங்களைப் பற்றி வரவேற்றார். நவாஸ் இல்ல விழாவில் பங்கேற்ற மோடி, இரு நாட்டு உறவுகள் பற்றியும் நவாஸுடன் உரையாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x