Last Updated : 29 Dec, 2015 11:14 AM

 

Published : 29 Dec 2015 11:14 AM
Last Updated : 29 Dec 2015 11:14 AM

பேரழிவு மேலாண்மை: ரொம்ப நல்லவன்பா இந்த இந்தியா!

உலகத்தின் பேரழிவுகளைப் பொறுத்தவரை ஆசியாவுக்குக் கெட்ட காலம்.

உலக அளவில் 1991 முதல் 2000 வரை நடந்த பேரழிவுகளில் 83 சதவீதம் ஆசியாவைத்தான் தாக்கியுள்ளது. ஆசியாவைத் தவிர்த்த உலகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 159 பேர் இவற்றால் உயிரிழந்தார்கள். ஆனால், ஐந்து மடங்கு அதிகமான அளவில் ஆசியாவில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 439 பேர் உயிரிழந்தார்கள்.

பேரழிவில் இந்தியா

பேரழிவுகளின் பாதிப்புகள் விஷயத்தில் ஆசியாவுக்குக் கெட்ட காலம் என்றால் இந்தியாவுக்கு அதைவிட அதிகமான கெட்ட காலமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த ஆசியாவிலும் பேரழிவுகளால் பலியானவர்களில் 24 சதவீதம் இந்தியர்கள்தான். ஆசியாவின் வெள்ளம் மற்றும் புயல்களின் தாக்குதல்களில் கூட 60 சதவீதம் பாதிக்கப்பட்டது இந்தியாதான். எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கிக்கொள்கிற ‘ரொம்ப நல்லவங்க’ நாம்.

இந்தியாவின் 58.6 சதவீத நிலம் பூகம்பங்கள் ஏற்படும் அபாயமுள்ள பகுதி. இந்தியாவில் 4 கோடி ஹெக்டேர்களில் வெள்ளங்களும் ஆற்று மண்ணரிப்புகளும் ஏற்படுகின்றன. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 12 சதவீதம்.

மொத்த நிலப்பரப்பில் சுமார் எட்டு சதவீதம் புயல்களின் தாக்குதல்களுக்கு ஆளாகிறது. 68 சதவீதமான விளைநிலங்கள் வறட்சியின் பாதிப்புக்கு ஆட்படக்கூடியவை. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவுகள் பேரழிவுகளாக உள்ளன.

நிலம் மட்டுமா? கடலும் பேரழிவுகளைப் பிரசவிக்கிறது.

இந்தியாவுக்கு 7,516 கி.மீ. நீளமுள்ள கடலோரப் பகுதி. அதில் 5,700 கி.மீ. நீளமுள்ள பகுதி புயல்களும் சுனாமிகளும் தாக்குவதற்கு வசதியான இடத்தில் உள்ளது. இந்தியக் கடல்களும் பாரபட்சமானவைதான் போலிருக்கிறது. அரபிக் கடலில் உருவாவதைவிட 4 அல்லது 5 மடங்குகள் வரை அதிகமான எண்ணிக்கையில் புயல் காற்றுகள் வங்காள விரிகுடாக் கடலில் உருவாகின்றன.

இந்தியாவில் எட்டு வடகிழக்கு மாநிலங்கள் உள்பட 17 மாநிலங்களில் உள்ள 169 மாவட்டங்களில் பலவிதமான பேரிடர்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலமும் கடலும் மலையும் உருவாக்கும் இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்ல, மனிதரால் உருவாக்கப்படும் வேதியியல், அணுவியல், உயிரியல்ரீதியான பேரழிவுகளுக்கும் இந்தியாவில் வாய்ப்புகள் உள்ளன.

பேரழிவின் அனுபவம்

இந்தியாவில் 1999-ல் ஒடிஷாவில் பெரும் சூறாவளி அடித்தது. 10 ஆயிரம் பேருக்கு மேல் பலியானார்கள். பெரும் பொருள்சேதம் ஏற்பட்டது.

2001-ல் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் ஏறத்தாழ 20 ஆயிரம் பேரைக் கொன்று 1 லட்சத்து 67 ஆயிரம் பேரைக் காயப்படுத்தி 4 லட்சம் வீடுகளை நொறுக்கியது.

இந்தியப் பெருங்கடலில் 2004-ல் ஏற்பட்ட சுனாமி 14 நாடுகளைப் பாதித்தது. ஏறத்தாழ 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். இதில் இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிகமாகப் பாதிக்கப்பட்டது.

மேலாண்மையின் வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டபோது லட்சக்கணக்கில் மக்கள் பலியானார்கள். அவற்றை எதிர்கொள்ள விதிமுறைகளும் கையேடுகளும் உருவாக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவிலும் அவை தொடர்ந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கம்பெனியால் ஏற்பட்ட பேரழிவான விஷவாயுக் கசிவு 1984-ல் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட நெருக்கடியால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ல் உருவானது.

பேரழிவு மேலாண்மை பற்றிய பார்வை உலக அளவில் மாறிய பின்னணியில் இந்தியாவும் இவற்றை எதிர்கொள்வதற்கு ஒரு தனியான சட்டத்தையும் நிர்வாக அமைப்பையும் ஏற்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. அதனால் பேரழிவு மேலாண்மைச் சட்டம் -2005 உருவானது.

பேரழிவைப் பற்றிய இந்தியச் சட்டம் இயற்கையாலும் மனிதராலும் தற்செயலாகவும் ஏற்படுகிற பேரழிவுகளைக் கணக்கில் கொள்கிறது. அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை வருமுன் குறைப்பது, வந்த பின் காப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை; பட்டியலிடுகிறது.

அரசின் எல்லா வளர்ச்சித் திட்டங்களிலும் பேரழிவு மேலாண்மை பற்றிய புரிதலும் முன்னேற்பாடுகளும் இருக்க வேண்டும். இவற்றில் உள்ள மரபு சார்ந்த அறிவையும் பயன்படுத்த வேண்டும். பாரம்பரிய செல்வங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை வேண்டும் என்பது இன்றைய பேரழிவு மேலாண்மையின் புரிதல்.

பேரழிவு மேலாண்மை மூன்று வகைப்படும்:

1.பேரழிவுக்கு முந்திய கட்டம்

2.தாக்கும் கட்டம்

3.பேரழிவுக்குப் பிந்தைய கட்டம்

முதல் கட்டத்தில் வராமல் தடுப்பது, சேதத்தைக் குறைப்பது, தயார் நிலையிலிருப்பது. தீவிபத்துகள், நிலச்சரிவுகள், வேதியியல் மற்றும் அணுவியல் தொடர்பான விபத்துகளுக்கு வருமுன் காக்கும் நடவடிக்கைகள் வேண்டும். இரண்டாவது கட்டத்தில் பேரழிவுகள் நிகழும்போது சேதங்களைக் குறைக்க வேண்டும் என்கிறது. மூன்றாவது கட்டம் என்பது பேரழிவுக்குட்பட்ட பகுதிகளையும் மக்களையும் பழைய நிலைக்கு மீட்பது பற்றிப் பேசுகிறது.

வெள்ளத்தின் மேலாண்மை

வெள்ளம் என்பது கனமழையால் ஆறுகளில் தண்ணீர் அளவுக்கு அதிகமாகப் பாய்ந்து, கரைகள் உடைக்கப்படுவதால் ஏற்படுகிறது. மழை பெய்யுமிடங்களில் மழைநீர் வடிகால்வாய்கள் இல்லாததும் இன்னொரு காரணம்.

வெள்ளம் பற்றிய விஞ்ஞானரீதியான முன்னறிவிப்பு இந்தியாவில் 1958-ல் ஆரம்பித்தது.

14 மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் 166 வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பைத் தெரிவிக்கும் மையங்கள் உள்ளன.

ஒவ்வொரு பருவ காலத்திலும் வெள்ளம் பற்றி சராசரியாக 6,000 முன்னறிவிப்புகள் வெளியாகின்றன. 1978 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் இந்த அறிவிப்புகளின் துல்லியம் 81 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தனை வருட முன்னேற்றம் இதுதான். ஆனால் பிரச்சினையின் பிரம்மாண்ட அளவோடு இதை ஒப்பிட்டால் இது ஒரு கடுகுதான். கணிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வெள்ளம் தொடர்பான இதர விஷயங்களில் ஏற்படவில்லை.

பள்ளிப் பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு முதலாக பேரழிவு மேலாண்மை எனும் ஒரு பாடத்தைச் சமூகவியலில் சேர்க்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் முடிவு. அது அமலாகியுள்ளது. ஆனால் இந்தப் பாடம் மிகவும் மேம்போக்காக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x