Published : 27 Oct 2015 10:49 AM
Last Updated : 27 Oct 2015 10:49 AM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: சைக்கிள் வாத்தியார் ஹரி

பள்ளிப்பருவத்தில் கற்றுக்கொண்ட எதுவுமே அவனுக்கு ஞாபகத்துக்கு வரவில்லை. சைக்கிள் ஓட்டக் கற்றதைத் தவிர.

-ஆர்.கே. நாராயணன்

பாடப் புத்தகத்துக்கு வெளியே நடக்கும் திறன் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது 21-ம் நூற்றாண்டின் கல்வி என்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அறிவை அன்றாட வாழ்வின் அறிவியல் தொழில் நுட்பத்துடன் இணைப்பது குறித்த சவாலாக கல்வி மாறி வருகிறது.

‘21-ம் நூற்றாண்டு திறன்களுக்கான கூட்டுப்பங்கு’ எனும் பிரகடனத்தையும் அது வெளியிட்டுள்ளது. வகுப்பறையின் திறன்களோடு அதாவது பாடங்களோடு, ஒரு மாணவர் வளர்த்துக்கொள்ள வேண்டிய இதர வகையான சுயமான திறன்களாக, 16 விஷயங்களை அது பட்டியலிடுகிறது. தொழில்நுட்பத்தைக் கையாளுதல், ஊடக நெறியாண்மை, தகவல் பரிமாற்றல் திறன் என விரியும் பட்டியலில் யந்திர மேலாண்மையும் அடக்கம். இத்தகைய திறன்களை நம்மால் கற்பிக்க முடியுமா? அது அவ்வளவு சுலபமல்ல என எனக்கு உணர்த்தியவர்தான் ஹரிகிருஷ்ணன்.

பாடத்தில் எங்கே சைக்கிள்?

எழுதப் படிக்கத் தெரிய வைப்பதைத்தான் கல்வி என்று பொதுவாகச் சொல்கிறோம். உலகில் ஒரு நாட்டின் எழுத்தறிவு எத்தனை பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதாக கணக்கிடப்படுகிறது. தங்களது பெயரை எழுதிக்காட்டினால் போதும் என அதுவும் சுருக்கப்பட்டது. வாசித்தல்,எழுதுதல் மற்றும் கணக்கிடுதல் என்பவைதான் கல்வியின் மூன்று அடிப்படை அம்சங்களாக அறிவிக்கப்பட்டன.

அதை ரஷ்ய கல்வியாளர் லெவ் வயகாட்ஸ்கி (Lev Vygotsky) எதிர்த்தார். கல்வி-அறிவு என்பதை கலாச்சாரத்தின் ஒரு கூறாக அவர் இணைத்தார். திறன் என்பதை அடிப்படை அறிவு என்று அறிவித்த அவர் அந்தந்தக் கலாச்சாரங்களின் புராதனமான திறன்களை அதன் இளம் தலைமுறையினர் கற்றறிதலை வெறும் எழுத, படிக்கத் தெரிவதை வைத்து மட்டும் முடிவு செய்யும் முறை இழிவுபடுத்துவதாக அவர் சாடினார். ‘கற்றலும் திறன் வளர்ச்சியும் ஒன்றுக்குள் ஒன்று’ என வயகாட்ஸ்கி நிறுவினார்.

தனது வயதைக் கடந்த திறன்களைக் கற்றுத் தேறிடக் குழந்தைக்கு சுயஆர்வம் இருக்க வேண்டியது அவசியம் என்பது அவரது திறன்-கல்வி கோட்பாடு. அவர் கட்டமைத்த திறன் மேம்பாட்டுக் கல்வியின் முக்கியமான படிநிலை ஒரு பள்ளி மாணவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது உள்ளிட்ட உடற்பயிற்சியையும் இணைத்ததாக இருந்தது.

நமது பள்ளிக் கல்வித் துறை மேனிலை முதலாம் ஆண்டில், மாணவர்களுக்கு (அனைவருக்கும் அல்ல) விலையில்லா சைக்கிள்களை எனக்கு தெரிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கிவருகிறது. அதிலும் குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு தமது சமூகத்தின் விடுதலைச் சிறகுகளாக நாம் சைக்கிள் ஓட்டும் திறனைக் காண முடியும்.

ஆனால் இந்த அடிப்படைத் திறனை ஏன் பள்ளிக்கூடப் பாடத்தில் நாம் இதுவரை இணைக்கவில்லை? நமது உடற்கல்வி வகுப்புகளில் நாம் அதை இணைக்க முடியும் என்றாலும் ஒரு ஆசிரியரால் மாணவர்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுத்தர முடியுமா? வகுப்பறையில் நடக்கும் கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து அது எவ்வகையில் வேறுபடுகிறது என்று எனக்குப் போதித்தவர்தான் ஹரிகிருஷ்ணன்.

ஒரு வகுப்பில் உள்ள 30, 35 பேருக்கும் சைக்கிள் ஓட்ட ஒருவர் கற்பிக்க முடியாது. மூளை, கை கால்கள், உடலசைவு என முழு உடலின் ஆளுமையும் நன்கு அறிந்த ஒரு ஆசிரியரே திறமையாக ஒருவருக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அதே சமயம் சைக்கிள் குறித்த தொழில்நுட்பமும் அவர் அறிந்திருக்க வேண்டும்.

பள்ளிகளை ரஷ்யாவில் உடற்பயிற்சிக்கூடங்களாக 1920- களில் கட்டமைத்தவர் வயகாட்ஸ்கி. அதுதான் இன்று சீனா உட்பட பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அங்கெல்லாம் ஒருவர் பள்ளி முடிந்து ஓரிரு ஆண்டுகள் தங்கள் நாட்டு ராணுவத்தில் பயிற்சி பெறுதல்கூடக் கட்டாயமாக உள்ளது.

பேரிடர் மேலாண்மையிலிருந்து தீ தடுப்பு வரையிலானப் பயிற்சிகளை நேரடி உடற்பயிற்சியாகக் கல்வியை மாற்றியவர் வயகாட்ஸ்கி. நம் நாட்டில் 40- வயதில் மருத்துவரின் பயமுறுத்தல் காரணமாக நடைப்பயிற்சியை நாம் தொடங்குகிறோம். அதிர்ஷ்டமிருந்தால் 60-ஐக் கடந்தும் வாழ்கிறோம். இந்த அவலத்துக்குக் காகிதப் புலியான நம் கல்வியும்தான் பொறுப்பு. ஆனால், இந்த நிலையை மாற்ற முடியும் என எனக்குக் காட்டியவர் ஹரிகிருஷ்ணன்.

சைக்கிள் டீச்சர்

முன்பு நான் பணிசெய்த பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்தான் ஹரிகிருஷ்ணன். நான் வங்கிக் கடனில் மாதத்தவணையில் இருசக்கர வாகனம் வாங்கியிருந்த புதிது. அதை (எல்லாரையும் போல) துடைத்துத் துடைத்து வைத்திருப்பேன். மாலையில் பள்ளி முடித்து கிளம்பும்போது ‘சார்’ எனும் குரல் கேட்டுத் திரும்பினேன். ‘சார்… சார்… ஒரு ரவுண்டு சார்… ப்ளீஸ் …. ஓட்டி பார்த்துட்டுத் தரேன் சார்’ என்று அந்த அரை நிஜார் மாணவர் ஹரிகிருஷ்ணன் நின்றார்.

அவர் எனக்குக் கொடுத்த அதிர்ச்சி அது. வண்டியை அவர் லாவகமாக ஓட்டினார். ஆனாலும் ஒரு சிறுவனிடம் வண்டியை ஓட்டக் கொடுத்ததற்காகத் தலைமை ஆசிரியரிடம் எனக்கு அர்ச்சனை கிடைத்தது.

ஹரிகிருஷ்ணன் தன்னைத் தேடி வரும் அனைத்து மாணவர்களுக்கும் மிக நேர்த்தியாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பவர் என்று அடுத்த சில நாட்களில் நான் கேள்விப்பட்டேன். மாலைப்பொழுதுகளிலும் சனி, ஞாயிறுகளிலும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம். சைக்கிளின் மேலே உட்காரக்கூட பயப்படுபவரைக்கூட அவர் உட்காரவைத்து கேரியரைப் பிடித்தபடி பின்னால் ஓடினார். சைக்கிள் ஓட்ட அவருக்குத் தைரியம் ஊட்டினார்.

லெவ் வயகாட்ஸ்கி

ஹரிகிருஷ்ணன் தன்னைத் தேடி வரும் அனைத்து மாணவர்களுக்கும் மிக நேர்த்தியாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பவர் என்று அடுத்த சில நாட்களில் நான் கேள்விப்பட்டேன். மாலைப்பொழுதுகளிலும் சனி, ஞாயிறுகளிலும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம். சைக்கிளின் மேலே உட்காரக்கூட பயப்படுபவரைக்கூட அவர் உட்காரவைத்து கேரியரைப் பிடித்தபடி பின்னால் ஓடினார். சைக்கிள் ஓட்ட அவருக்குத் தைரியம் ஊட்டினார்.

பள்ளிக்கு சைக்கிளில் வந்து இறங்கும் ‘பெரிய அக்கா’க்களை ஹரிகிருஷ்ணன் ‘முன்பக்க பிரேக்கைப் பிடிக்காதீங்கனா கேட்கவே மாட்டீங்களா’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டார். யாருடைய சைக்கிளாவது மக்கர் செய்தால் தன்னிடம் வைத்திருக்கும் டூல்ஸ் கவரோடு களம் இறங்கினார்.

ஆசிரியர்களைவிட, ஒரு மாணவரே சக மாணவருக்கு பயிற்றுவிப்பது சிறப்பானது. சுலபமானது என்பார் வயகாட்ஸ்கி. படிப்பில் சுமார் என்று எல்லா ஆசிரியர்களாலும் முத்திரை குத்தப்பட்ட ஹரிகிருஷ்ணன் பல மாணவர்களுக்கு சைக்கிள் டீச்சராக இருந்தார். இது நம் கல்வி குறித்த மற்றொரு பலவீனத்தையே பறைசாற்றுகிறது. விதவிதமான வண்டிகளை ஓட்டிப் பார்க்கத் துடித்தவரான ஹரிகிருஷ்ணன் இப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநராக இருக்கிறார்.

- லெவ் வயகாட்ஸ்கி



தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x