Last Updated : 20 Oct, 2015 10:52 AM

 

Published : 20 Oct 2015 10:52 AM
Last Updated : 20 Oct 2015 10:52 AM

இப்படியும் பார்க்கலாம்: உங்களிடம் மாயவிளக்கு இருக்கிறதா?

நாம் ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையை நன்கு அறிவோம். அவர் ராணுவத்தில் மனிதப் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும், ஷேவிங் செய்தல், ஷு அணிதல், மெஹந்தி வரைதல், பிரசவம் பார்த்தல் போன்ற உதவிகள் செய்வதற்காகவும் ஒரு ரோபாட்டை உருவாக்கினார்.அந்த நன்றி கெட்ட ரோபாட் அவரது காதலியின் அழகில் மயங்கி அவளை அடைய விரும்பியது. தடையாக நின்ற விஞ்ஞானியைக் கொல்லவும் துணிந்தது.

ஒரு பால்க்காரரையும் மக்கள் அறிவார்கள்.இவருக்கு நகரின் முக்கிய இடத்தில் நிலம் இருந்தது. அதை அபகரித்து, அதில் ஸ்டார் ஹோட்டல் கட்ட அவரது பணக்கார நண்பரின் தந்தை திட்டம் போடுகிறார். மகனுக்கும் பால்க் காரருக்குமான நட்பை உடைத்து, இடத்தைப் பிடுங்கிக்கொண்டு துரத்திவிட, பால்க்காரர் வெகுண்டு எழுந்து பால் பொருட்கள் தயாரித்து, பால் கொதிக்கிற நேரத்தில் நண்பனைவிட முன்னேறுகிறார்.

உங்களால் ‘டாக்டர் வசீகரனையும், அண்ணாமலை’யையும் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்கும்...!

வெண்திரைப் பாத்திரங்களான இவர்களிடமிருந்து உங்களை சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் வெள்ளரிப் பிஞ்சுகளை விற்றுக்கொண்டிருக்கும் இரண்டு சிறுமிகளிடம் அழைத்துச் செல்கிறேன். விற்பனை செய்யும்போது ஒருவரின் வெள்ளரிகள் கீழே விழ, வேண்டுமென்றே தள்ளிவிட்டதாக அவளும், “பொய்யையும் சொல்லிக்கிட்டு வைய்யிறதைப் பாரு...” என்று இவளும் குரலெழுப்ப சக வியாபார அக்காக்களும் தாத்தாக்களும் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பார்க்கிறீர்கள்.

வசீகரனுக்கும் அண்ணாமலைக்கும், இரண்டு சிறுமிகளுக்கும் தொடர்பூட்டலாம்.

வசீகரனையும் பால்காரரையும் மாற்றியமைத்தால் என்ன ஆகும்? இரண்டிலுமே நடித்தது ரஜினிதானே என்று குழம்பக் கூடாது. நான் சொல்ல வருவது கதாபாத்திரங்களை...

பால்க்காரரால் ரோபாட்டைச் சமாளிக்க முடியாது. அவர் அதற்காக உருவாக்கப்படவில்லை. எந்திரனின் நோக்கம் தன்னுடைய ‘சென்ட்ரல் ப்ராஸசிங் யூனிட்டைக்’ கவர்ந்தவளை மிசஸ் எந்திரனாக்கத் தடையாக நிற்கும் வசீகரனைக் கொல்வதுதானே தவிர, பால் மாட்டைப் பராமரிப்பது அல்ல.

சினிமா என்பதை மறந்துவிட்டால்-இதிலுள்ள உண்மை இதுதான்-ரோபாட்டின் ‘சிப்’பைக் கழற்ற வேண்டிய விஞ்ஞான அறிவு, சாதுர்யம் எல்லாம் வசீகரனிடம் உள்ளதால், எந்திர ராவணனைச் சமாளிக்கும் பிரச்சினையும் அவனுக்குத்தான் வந்து சேரும்.

அண்ணாமலைக்கும் அந்தச் சிறுமிகளுக்கும் எந்திரன் ரோபாட்டுகளை அணிவகுத்து நிற்கச் சொல்லும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டிய அவசியம் ஏன் வரப் போகிறது? எந்திரனுக்கு “அந்த இருக்கன்குடி அம்மனுக்கே இது பொறுக்காது புள்ள...” என்று பஸ்ஸில் வெள்ளரிப்பிஞ்சு விற்பதில் ஏற்படும் பிரச்சினை வரவே போவதில்லை...!

எல்லோருக்கும் பொதுப் பிரச்சினைகள் இருக்கின்றன. ராட்சச விண்கல் வழிதப்பி, காற்று மண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பூமிக்கு வந்தால்--ஓடப்பர், உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பராக அனைவரும் சுவாசிக்கும் தொழிலிருந்து விடுபட வேண்டியதுதான். கொள்ளைநோய்கள், பொருளாதார நெருக்கடிகள், போர்… போன்ற பிரச்சினைகள் அவரவர் நிலைக்கு ஏற்ப ஒரு தாக்கு தாக்கிவிட்டுத்தான் செல்லும்.

இது போன்ற விதிவிலக்குகள்தவிர-ஒருவருக்கு வரும் பிரச்சினைகளைப் பார்த்தால் அவை பெரும்பாலும் அவருக்கான பிரச்சினைகளாகவே இருக்கும். அவரைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாததாகவே இருக்கும்.

வெள்ளரிப்பிஞ்சு விற்பவர்களிடம் காய்கள் அழுகிப்போவதும், சக வியாபாரப் போட்டிகள், வெயில், மழை என அந்த உலகத்திற்கான பிரச்சினைகள் இருந்தே தீரும். அவைதான் இருக்க முடியும். அவர்களுக்கு எந்திரனின் ப்யூஸைப் பிடுங்கவோ , ‘அடேய் நண்பா, உன்னை வெல்வேன்...’ என்று லிஃப்டில் ஏறவோ தேவையில்லை.

கம்ப்யூட்டர் நிறைய வேலைகளைச் செய்கிறதுதான். அதற்காக நினைத்த மாதிரி எல்லாம் வேலை வாங்க முடியாது. அதற்கான ப்ரோக்ராம்கள் அதனுள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உங்களுக்கு உங்களுக்கேயான பிரச்சினைகள் வருகின்றன என்றால் கவலையே வேண்டாம். அதை சால்வ் செய்யும் ‘இன்பில்ட்’ வசதிகளுடன்தான் நீங்கள் படைக்கப்பட்டிருப்பீர்கள்! உங்களால் தீர்க்க முடிகிற பிரச்சினைதான் உங்களிடம் வரும்!

இதன் அர்த்தம், உங்களிடம் அலாவுதீனின் மாயவிளக்கு இருக்குமானால் உங்களின் உலகில் பூதங்களின் நடமாட்டம் இருந்தே தீரும். உங்களிடம் மோதப்போவது மந்திரவாதிகளாகத்தான் இருப்பார்கள்...! அவர்களின் ஃபோனில் உங்களின் எண்ணும் இருந்தே தீரும்! நட்பான பூதங்களுடன் கைகுலுக்க நீங்கள் ஆசைப்பட்டால் கொடிய பூதங்களையும் சந்தித்துதான் தீர வேண்டும்!

“அணுகுண்டு வேணுமாங்க?” என்பவர்களை வரவேற்றீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் ஹிரோஷிமா உறுதி என்றுதானே பொருள்?

ஆனால், வசீகரனைக் கேட்டால் “எந்திரனை அழிப்பதுதான் முக்கியமான பிரச்சினை...” என்றும், அண்ணாமலை “பால்கோவா வித்துப் பாருங்க… அது கஷ்டம்!” என்றும், சாத்தூர் சிறுமிகள் “வெள்ரிப்பிஞ்சு வாங்குங்க’ன்னு கத்தியே உயிர் போகுது...” என்றும் தங்களது பிரச்சினைகளையே பெரிதுபடுத்துவார்கள்!

நடிகர் சங்கப் பிரச்சினைகள், தொடர்பில்லாத மற்றவர்களுக்கு “ஏன் இப்படி சண்டை போடறாங்க...?” என்ற விமர்சனத்தில்தான் முடியும். வங்கிக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பிறர் “என்னதான் வேணுமாம்?” என்றுதான் கேட்பார்கள். ஊதியக் குழுவின் முரண்பாடுகளை உணர்கிறவர்கள் அரசு ஊழியராகத்தான் இருப்பார். முட்டை விலை ஐந்து காசு குறைந்தது என்ற செய்தியால் வருத்தப்பட கோழிப்பண்ணை வைத்திருக்க வேண்டும்!

அவரவர் பிரச்சினைகள் அவரவர்க்குப் பெரிது. இந்த எண்ணத்தை மாற்றவே முடியாது. ஒருவிதத்தில் அதுவே வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் தருகிறது!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x