Published : 22 Sep 2015 01:54 PM
Last Updated : 22 Sep 2015 01:54 PM

சி.ஏ. படிக்க என்ன செய்யலாம்?

நான் சி.ஏ. படிக்க விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகளைக் கூறவும்.

- என்.கோபாலகிருஷ்ணன், சென்னை.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் எம். கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம்.

சி.ஏ. எனப்படும் பட்டையக் கணக் காளர் பணிக்குப் படிக்க விரும்புபவர்கள் பள்ளியில் படிக்கும்போதே வணிகவியலை ஒரு பாடமாகக் கொண்டிருந்தால் அது ஒரு சாதகமான அம்சம்.

இடைநிலை (Inter), இறுதிநிலை (Final) என இரண்டு அடுக்குத் தேர்வு களாகச் சி.ஏ. தேர்வு நடத்தப்படுகிறது.

இடைநிலை தேர்வு எழுதுவதற்கு இரு வகைகளில் தகுதி பெறலாம்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வு (Foundation Course) எழுதி இடைநிலைத்தேர்வு எழுதுவதற்கான தகுதியைப் பெறலாம். இந்த அடிப்படைத் தேர்வை எழுதுவதற்கு ஓராண்டு காலம் படிக்க வேண்டியது அவசியம்.

அப்படியில்லை என்றால், வணிகவியல் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். வணிகவியல் இல்லாத, கணிதத்தை ஒரு பாடமாகக் கொள்ளாத பட்டப்படிப்பைப் படிப்பவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் வணிகவியல் அல்லாமல் கணிதத்தைப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் இடைநிலைத் தேர்வை எழுதலாம்.

மேற்கண்ட மூன்று பிரிவினரும் அடிப்படைத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.

பட்டப்படிப்பு படிக்கும்போதே கூடுதலாக இந்தத் தேர்வுக்கும் தயார் செய்யலாம். இடைநிலைத் தேர்வு எழுதியவர்கள் இறுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்வை நடத்துவது மட்டும் அல்லாமல் இந்தத் தேர்வு எழுதுவோருக்கு வழிகாட்டும் நோக்கில் நேரடி வகுப்புகள், தொலைதூரக் கல்வி என இரு வழிகளிலும் பயிற்சி வழங்கி Institute of Chartered Accountants of India (ICAI) என்ற அமைப்பு புது டில்லி தலைமை யகமாகக் கொண்டு செயல்படுகிறது.

சென்னையில் இந்த அமைப்பு எண்.122, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், ஐசிஏஐ பவன், சென்னை-600 034. என்ற முகவரியில் உள்ளது. அதன் இணையதளத்தில் விரிவான தகவல்களை காணலாம்.( >http://www.icai.org )

ஐ.ஏ.எஸ். தேர்வு போன்றே இந்தத் தேர்வும் இந்தியாவில் நடத்தப்படும் கடினமான தேர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இதன் தேர்ச்சி சதவீதமும் குறைவாக இருக்கும். இந்தத் தேர்வைப் பொருத்தவரை சரியான வழிகாட்டுதலும், முறையான பயிற்சியும், இடைவிடாத முயற்சியும் கட்டாயம் வெற்றிக்கு வழிவகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x