Last Updated : 18 Aug, 2015 12:18 PM

 

Published : 18 Aug 2015 12:18 PM
Last Updated : 18 Aug 2015 12:18 PM

இளைஞர்களுக்கான தார்மிக ஆதரவு

வீட்டுக்கு வாங்கப்பட்ட பழைய காலத்துத் தொலைபேசியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சென்னை மாநகரின் ஒரு பள்ளி மாணவர். கைவிரலால் சுழற்றிப் பேசக்கூடிய அதில் யாரோடு பேசினாலும் அந்த எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். நடமாடும் தொலைபேசி டைரக்டரியாக இருந்த அந்த மாணவர் இன்று உலகின் மிக நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் எனப்படும் திறன்பேசிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை வெளியிடும் கூகுள் நிறுவனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். அதன் கூட்டங்களில் விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு அலசுபவராக இருக்கிறார்.

அவர்தான் சுந்தர் பிச்சை. அவரது உலகளாவிய புகழ் அவர் தனது வேலையில் காட்டிய கடும் உழைப்பில் இருக்கிறது.

பாதியில் விட்ட படிப்பு

சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரின் மகன் அவர். பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்தது உலோகவியல் பொறியியல். உலோகங் களின் தன்மைகளை ஆராயும் படிப்பு அது. இந்தியாவில் அதைப் படித்தவருக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. முனைவர் பட்ட மேற்படிப்புக்காக அங்கே போனார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் போவதற்கான விமானப் பயணத்துக்கான செலவு மட்டும் அவரது அப்பாவின் ஒரு ஆண்டு வருமானத்துக்கும் மேல். அமெரிக்காவுக்குப் போய்விட்டாலும் அங்கே 400 ரூபாய் கொடுத்து (60 டாலர்) ஒரு தோள் பை வாங்க முடியாத நிலை.

பணம் போதாமையோ அல்லது படிப்பு பிடிக்கவில்லையோ தெரியவில்லை. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் வெற்றிபெற முடியவில்லை. பாதியிலேயே நின்றுவிட்டார். அதற்குப் பிறகு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார்

வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கு

படித்து முடித்ததும் எலெக்ட்ரானிக் சிப்புகளைத் தயாரிக்கும் அல்லய்ட் மெட்டீரியல் எனும் கம்பெனியின் உற்பத்திப் பிரிவில் இன்ஜினீயராகச் சேர்ந்தார், அதன் பிறகு மெக்கன்ஸி கம்பெனி எனும் நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றினார்.

2004-ல் கூகுளில் உற்பத்தி மேலாளராகச் சேர்ந்த சுந்தர், இணையத்தின் தேடுதளங்களான (பிரவுசர்) ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’, ‘பயர்பாக்ஸ்’ போன்றவற்றையே ஏன் நாம் பயன்படுத்த வேண்டும்? கூகுள் தனக்கான சொந்தமான தேடுதளத்தை ஏன் உருவாக்கக் கூடாது என்ற விவாதத்தைக் கிளப்பினார்.

அப்போதைய கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி அதை வீண் முயற்சி என்று கருதினாலும் கூகுள் க்ரோம் பிறந்தது. உலகளாவிய வெற்றியைப் பெற்றது. இன்று உலகில் உள்ள கணினிகளில் நான்கில் மூன்று பங்கில் தற்போது அதுதான் செயல்படுகிறது. ஜெர்மனி, ஜப்பான், பெரும்பாலான ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகளில் அதன் ஆதிக்கம்தான் என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள்.

விரியும் கூகுள்

அதன் பிறகு க்ரோம் இயங்குதளத்தையும் மேகக் கணினி தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவான க்ரோம் புக் கணினிகள் நல்ல விற்பனையில் உள்ளன. கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் உருவாக்கப்பட்டதில் அவரின் பங்கு முக்கியமானது. அடுத்ததாக, கைபேசிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் அறிவிக்கப்பட்டது.

கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இன்று கைபேசி நிறுவனங்கள் பலவற்றால் பயன்படுத்தப்படுகிறது. சோனி நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் டிவிகளை வெளியிட்டுள்ளது. கைபேசிகளைத் தாண்டி கார் உள்ளிட்ட மேலும் பல பொருள்களில் அது பயன்படுத்தப்படலாம்.

வெறும் கூகுள் தேடுபொறியின் பணிகளை மட்டும் செய்து கொண்டிருந்த அந்த நிறுவனம் தன்னை வேறுபல பணிகளிலும் விரித்துக்கொள்ள உதவியவராகச் சுந்தர் பிச்சை இருக்கிறார். தற்போது கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய தாக்கத்தின் மையமாக அவர் மாறியிருக்கிறார்.

ஜாம்பவான்

கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் களில் ஒருவரான லாரி பேஜ், சுந்தர் பிச்சையை “தொழில்நுட்ப அறிவில் மட்டுமல்லாமல் சந்தைப்படுத்தலிலும் திறன்படைத்தவர்” என்கிறார். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ எனும் நமது முன்னோர்களின் வணிக அறிவின் தொடர்ச்சி சுந்தர் பிச்சையின் மரபணுக்களில் ஓடுகிறது போலும்!

வன்பொருள் எனப்படும் ஹார்ட்வேர் தொடர்புடைய படிப்புகளைப் படித்த சுந்தர் மென்பொருள் எனப்படும் சாப்ட்வேர் துறையில் மிகப் பெரிய உச்சிக்குப் போயிருப்பது வேலையில் அவரது அர்ப்பணிப்பையும், கற்றல். செயல்படுத்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் செய்திருப்பதையும் காட்டுகிறது,

இன்றைய தொழில்நுட்ப உலகின் மகாஜாம்பவான்களாக இருக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வரிசையில் இதோ சுந்தர் பிச்சையும் சேர்ந்திருக்கிறார்.

தார்மிக ஆதரவு

சுந்தர் பிச்சையின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடக்கின்றன. தற்போது அமெரிக்கராக இருக்கும் அவர் இந்தியாவுக்கு என்ன செய்தார் என்ற அளவிலும் பல கருத்துகள் மோதுகின்றன. ஆனால், ஹாலிவுட் படங்களில் புரூஸ் லீ எனும் ஆசியப் போர்க்கலை நிபுணன் நடிகராக வந்த பிறகுதான் வெளிநாட்டுப் படங்களில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை மரியாதையாகச் சித்தரிக்கும் மாற்றம் வந்தது.

அதுபோல இத்தகைய மாபெரும் நிறுவனங்களின் உச்சிகளுக்கு இந்திய வம்சாவளியினர் போவதேகூட இந்திய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமான தார்மிக ஆதரவாகவே இருக்கும். அதுவே விலைமதிப்பற்றதாகும்.

இந்தியாவின் அற்புதமான மனிதர்கள் நமது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படாமல் வெளிநாடுகளில் குடியேறுகிறார்களே என்ற உணர்வு நாட்டை நேசிப்பவர்களுக்கு வரும். அந்த ஆதங்கத்தை இளைய தலைமுறைதான் சரிசெய்ய முடியும். ஏன் இந்தியாவிலேயே, அல்லது தமிழ்நாட்டிலே ஒரு கூகுள் உருவாகக் கூடாதா? அமெரிக்காவில் உள்ள சுந்தர் பிச்சையின் அனுபவங்களில் பாடம் கற்றுக்கொண்டு ஆயிரம் சுந்தர் பிச்சைகள் தமிழகத்தில் உருவாக மாட்டார்களா என்ன? நிச்சயம் உருவாகுவார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் உருவமாக சுந்தர் பிச்சை இருக்கவே செய்வார்.

ஜிமெயில் மட்டுமல்ல, ஈமெயிலும்தான்

சுந்தர் பிச்சைக்கு முன்னதாக உலகின் கவனத்தை ஈர்த்திருந்த தமிழர் வி.ஏ. சிவ அய்யாத்துரை. ‘ஈமெயில்’ தொழில்நுட்பத்தையும் அந்தச் சொல்லையும் கண்டுபிடித்தவர், பல்துறை அறிவுகொண்டவர், தொழில் முனைவோர் என்று பல முகங்களைக் கொண்டவர் அவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பவர், பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர். ஆனால், இன்று அவருடைய பெயர் உலக அளவில் அறியப்படுவதற்கு ‘ஈமெயில்’ கண்டுபிடிப்பாளர் என்பதுதான் முக்கியக் காரணம். அவர் கண்டுபிடித்த ‘ஈமெயில்’ வேறு, தற்போதைய ‘ஈமெயில்’ வேறு என்றும், அவருக்கு முன்பே டாம்லிம்ஸன் ‘ஈமெயி’லைக் கண்டுபிடித்திருந்தார் என்றும் வாதங்கள் நிலவுகின்றன. எனினும், உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளுள் ஒருவரான நோம் சாம்ஸ்கியே தனது மாணவர் சிவ அய்யாத்துரையின் பக்கம்தான் நிற்கிறார்.

வி.ஏ. சிவ அய்யாத்துரை

சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். சிவ அய்யாத் துரையின் சாதனைகள் எல்லாம் எங்கே தொடங்கின? சிறு வயது ஆர்வத்திலிருந்துதான். அவரது வாழ்க்கையில் அவருக்கு முதல் தாக்கம் அவருடைய பாட்டியிடமிருந்துதான் கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த முகவூரில் இருந்த அவருடைய பாட்டி சித்த வைத்தியத்தில் தேர்ந்தவர்; விவசாயியும் கூட. பல்வேறு துறை அறிவையும் ஒன்றுசேர்க்கும் சிவ அய்யாத்துரையின் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. சிறு வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்கா சென்ற சிவ அய்யாத்துரை அங்கேயும் கல்வியில் பிரகாசிக்கிறார். 1978-ல், அதாவது தனது 14 வயதில் ஒரு புராஜெக்டாக அவர் கண்டுபிடித்த விஷயம்தான் ‘ஈமெயில்’. அலுவலகத்துக்குள்ளேயே அனுப்பக்கூடிய வகையில் அவர் ‘ஈமெயி’லைக் கண்டுபிடித்திருந்தார்.

அவரது ஈமெயிலில், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தான் கண்டு பிடித்திருந்த புதிய வழிமுறைக்கு ‘ஈமெயில்’ என்றும் பெயர் வைத்து அதற்கு காபிரைட்டைப் பதிவுசெய்தார். அப்போது மென்பொருட்களுக்கு பேடன்ட் வழங்கும் வழக்கம் இல்லாததால் காபிரைட் மட்டுமே செய்ய முடிந்தது. 1978-ல் சிவ. அய்யாத்துரை ‘ஈமெயில்’ கண்டுபிடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘www’ என்றழைக்கப்பட்ட உலகளாவிய வலையமைப்பின் வருகை நிகழ்ந்தது. அதற்குப் பிறகு இணையத்தின் விரிவோடு சேர்ந்து ‘ஈமெயி’லும் விரிவடைந்தது. அதன் அடுத்த பரிமாணம் கூகுளின் ‘ஜிமெயில்’. இன்று நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்றுக்குப் பின்னால் தமிழர் ஒருவரும் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே!

- தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x