Last Updated : 07 Apr, 2015 12:16 PM

 

Published : 07 Apr 2015 12:16 PM
Last Updated : 07 Apr 2015 12:16 PM

பன்முக அறிவுத் திறன்: இஷ்டப்படி படிக்கலாம்

எக்கச்சக்கமாக ஃபீஸ் கட்டிச் சிறப்பான பயிற்சி அளிக்கும் பள்ளியில் என் மகனைச் சேர்த்துள்ளேன். காலை முதல் மாலைவரை பள்ளியில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதுவும் போதாமல் மாலை முதல் இரவு உறங்கும்வரை டியூஷனுக்கும் செல்கிறான்.

அவன் படிப்புக்குத் தேவையான புத்தகங்கள், டேப்லெட், மடி கணினி இப்படி எல்லாவற்றையும் வாங்கித் தருகிறேன். அவன் நண்பர்களும் நன்றாகப் படிக்கிறார்கள். இவனும் எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள்தான் வாங்குகிறான். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் மிகக் குறைவான மதிப்பெண்கள்தான் பெறுகிறான். இதற்கு மேல் என்ன செய்வதென்றே புரியவில்லை.

இப்படிப் பரிதவிக்கும் பெற்றோர்கள் பலரைத் தினசரிச் சந்திக்க முடிகிறது. பெற்றோர்கள் மட்டுமல்ல, இதே மனநிலையில் பேசும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் உண்டு. எல்லா முயற்சிகளும் செய்தாகிவிட்டது. ஆனால் பலன் ஏதுமில்லையே எனக் கவலை கொள்கிறார்கள் இவர்கள். சொல்லப் போனால் பல தனியார் பள்ளிகள் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மூன்று விதமாக அவர்களைச் சலித்து, பிரித்து எடுக்கிறார்கள்.

புத்திக்கூர்மை கொண்ட மாணவர்கள், நடுத்தர அறிவுடைய மாணவர்கள், மந்தமான மாணவர்கள் என அடையாளம் சூட்டுகிறார்கள். அதன் பின் அவர்களுக்குத் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் புத்திக்கூர்மையான மாணவருக்கு ஒரு முறை சொல்லித்தரப்படும் அதே பாடம் மந்தமானவர் என அடையாளம் காணப்பட்டவருக்கு பல முறை சொல்லித்தரப்படுகிறது. சில பாடங்கள் தீவிரமான கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகின்றன. சில சுருக்கமான வழிகள் சொல்லித்தரப்படுகின்றன.

மீண்டும் மீண்டும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. ஆகவே அந்த மாணவர்கள் மீண்டும் அறிவிலிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அவர்கள் மனமுடையக்கூடாது என்பதற்காக மெதுவாகக் கற்கும் திறன் படைத்தவர்கள் (slow learner) என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இத்தகைய அணுகுமுறை தீர்வாகாது என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர்.

திரும்பத் திரும்ப பேசுற நீ…

குறிப்பிட்ட பாடத்தைப் படிக்க ஒரு மாணவர் திணறுகிறார் என்றால் அவருக்கு கற்கும் திறனில் குறைபாடு உள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆகவே முன்பு வகுப்பில் எந்தப் பாடத்தை, எத்தகைய வழிமுறையில் சொல்லித்தந்தார்களோ அதே அணுகுமுறையில் மீண்டும் தனிக் கவனம் செலுத்திக் கற்றுத் தருகிறார்கள்.

இதற்குச் சிறப்புப் பயிற்சி எனப் பெயர் சூட்டுகிறார்கள். ஆனால் நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, “திரும்பத் திரும்பப் பேசுற நீ. என்ன…திரும்பத் திரும்பப் பேசுற நீ” என வடிவேலு சொன்னதையே திரும்பி திரும்பி பேசி காமெடி செய்வதுபோல இது எதிர்மறையாகத்தான் வேலை செய்யும்.

மாற்றம் தேவை

ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்வதில் பின்னடைவு ஏற்படக் காரணம் அவருடைய கற்கும் ஆற்றலில் உள்ள குறைபாடு அல்ல. அவருக்கு அந்தப் பாடம் கற்பிக்கப்பட்ட முறையில்தான் சிக்கல் உள்ளது என்கிறார் கார்டனர். கணிதம் மற்றும் தர்க்கத் திறனில் ஒரு மாணவர் பின்தங்கியிருக்கலாம். ஆனால் அவரிடம் பன்முக அறிவுத்திறனில் உள்ள வேறுவகையானத் திறன் அற்புதமாக இருக்கும். அந்தத் திறன் மூலமாக அவரால் எதையும் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியும். கேட்டல் திறனை அடிப்படையாகக் கொண்டிருப்பவரால் ஒலி வழியாகக் கற்ற விஷயங்களை நன்கு நினைவுகூரமுடியும்.

உடல் ரீதியான அறிவு படைத்தவர்களை ஒரே இடத்தில் உட்கார வைத்துப் பாடம் கற்பித்துப் பயன் இல்லை. ரோல் பிளே, உடல் அசைவு என செயலில் ஈடுபடும்போது உற்சாகமாக உணர்வார்கள். சில மாணவர்கள் வகுப்பு நடக்கும்போது இடையில் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படியானால் அவர் மனிதத் தொடர்பு அறிவாற்றல் கொண்டவராக இருக்கலாம். குழுவாக இணைந்து செயல்பட்டால் அருமையாகக் கற்றுக் கொள்வார்.

கார்டனர் அளிக்கும் பதில் இதுதான். எல்லா மாணவர்களாலும் கற்க முடியும். ஆனால் ஒரு தகவலைப் புரிந்து கொண்டு உள்வாங்கும் விதம் நபருக்கு நபர் வேறுபடும். அதே போல நாம் பார்த்து வியக்கும் பல புத்திசாலிகளிடம் எட்டு அறிவுத்திறன்களில் ஒரு சில திறன்கள்தான் அபரிமிதமாக இருக்கும். அவர்களும் மற்ற திறன்களில் பின்தங்கித்தான் இருப்பார்கள். இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டுக் கார்டனரால் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மை.

கல்விக்கு எதிரானதா?

கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.

கார்டனரின் இந்த ஆய்வு முறைப்படுத்தப்பட்ட கல்விக்கு எதிரான குரலாகத் தோன்றலாம். ஒன்று அல்லது இரண்டு அறிவுத்திறன்களைக் கற்பிப்பதே கடினம். இதில் எட்டு விதமான அறிவுத்திறன்கள் உள்ளன எனும்போது எப்படி சாத்தியப்படும் எனும் கேள்வி எழத்தான் செய்யும். இத்தகைய கேள்விக் கணைகள் கார்டனரை நோக்கி இன்றும் வீசப்படுகின்றன.

ஒரு மாணவரின் ஐ கியூ எனப்படும் மொழி, தர்க்கம் மற்றும் கணித அறிவை மட்டும் கண்டறிந்து அதன் அடிப்படையில் பயிற்றுவிக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்கிறார் கார்டனர். ஏனெனில் அவை மட்டுமின்றி இசை, உடற்கூறு மற்றும் விளையாட்டு, காட்சி மற்றும் வெளி, மனிதர்களோடு தொடர்பு கொள்ளுதல், தன்னிலை அறிதல், இயற்கை இப்படி எட்டு விதமான அறிவுத் திறன்கள் இருக்கின்றன. ஆகவே, ஒரே முறையில் கஷ்டப்பட்டு படித்தது போதும். இனி இஷ்டப்பட்ட விதங்களில் படிக்கலாம் என்பதுதான் கார்டனர் விடுக்கும் அழைப்பு.

கடந்த 25 ஆண்டுகளாக கார்டனரின் பன்முக அறிவுத்திறன் கோட்பாடு உலகெங்கிலும் பல சர்வதேசக் கல்விக் கூடங்களில் சோதிக்கப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன்? இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் உள்ள சர்வதேசப் பள்ளிகளில் பன்முக அறிவுத்திறன் கற்பித்தல் முறை அறிமுகமாகியுள்ளது. அவை செயல்படும்விதம், மக்களை சென்றடைய வேண்டிய விதம் குறித்துத் தொடர்ந்து பேசலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x