Published : 19 Jun 2018 10:50 AM
Last Updated : 19 Jun 2018 10:50 AM

அக்கினிக்குஞ்சு 06: ஐ.டி. ஜாம்பவானை உருவாக்கிய ரயில் பயணம்!

பொ

றியியல் பட்டதாரியாக அகமதாபாத்தில் தன்னுடைய பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் இந்திய ஐ.டி. ஜாம்பவானான இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி. பிறகு உலகின் 22 நாடுகளில் லட்சக்கணக்கானோருக்கு வேலை உருவாக்கித் தரும் தொழிலதிபராக வளர்ந்தவர். மென்பொருள் துறையில் மட்டுமல்லாமல் கல்வி, சுகாதாரம், கிராமப் புற மேம்பாடு ஆகியவற்றில் பங்களித்துவருபவர். இவருடைய இன்ஃபோஸில் அறக்கட்டளையின் கீழ் தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களில் 3500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய வாழ்க்கை, பணிவாழ்க்கை அனுபவங்கள் குறித்து உலகின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து உரையாற்றிவருகிறார் நாராயண மூர்த்தி . 2007-ல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில், அவர் ஆற்றிய ஒரு உரை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் சுருக்கம்:

என் ஆளுமையில் பெருமளவில் தாக்கம் செலுத்திய அந்தச் சம்பவம் நிகழ்ந்தது 1974-ல். பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் வேலைபார்த்துகொண்டிருதவன் சொந்த ஊரான மைசூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். ஆனால், பணத் தட்டுப்பாட்டால் பார்ப்பவர்களிடம் எல்லாம் ‘லிஃப்ட்’ கேட்கும் நிலை.

என் மீது அனுதாபம் காட்டிய ஒருவர் தனது வண்டியில் என்னை ‘நிஸ்’ ரயில்நிலையத்தில் இறக்கிவிட்டார். ‘நிஸ்’ என்பது சைபீரியா, பல்கேரியா நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள சிற்றூர். அப்போது இரவு மணி 9. சனிக்கிழமை என்பதால் உணவகங்கள் பூட்டப்பட்டிருந்தன. அடுத்த நாள் காலையிலும் ஊர் வெறிச்சோடிக் கிடந்தது. உள்ளூர் நாணயம் என்னிடம் இல்லாதலால் எதுவுமே வாங்கிச் சாப்பிட முடியவில்லை. சோர்ந்துபோய் ரயில்நிலையத்தின் நடைமேடையிலேயே தூங்கிவிட்டேன். விழித்துப் பார்த்தால் இரவு 8:30 மணி. ‘சோஃபியா விரைவு ரயில்’ நடைமேடையில் வந்து நின்றது.

ரயில் பெட்டியில் ஏறி உட்கார்ந்தேன். சக பயணிகளாக ஒரு இளைஞரும் ஒரு இளம் பெண்ணும் மட்டும்தான் இருந்தார்கள். பிரெஞ்சு மொழியில் அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அந்த நாட்டில் வசிப்பது எத்தனை துயரமானது என்பதை அந்தப் பெண் விவரித்துக்கொண்டேபோனாள். திடீரென்று எங்களுடைய உரையாடலில் ஒரு போலீஸ்காரர் தலையிட்டார். பின்புதான் புரிந்தது, நானும் அந்தப் பெண்ணும் பல்கேரியாவின் கம்யூனிச அரசை விமர்சிப்பதாக நினைத்து, எங்கள் மீது போலீஸ்காரரிடம் புகார் அளித்துவிட்டார் உடன் பயணித்த அந்த இளைஞர் .

அந்தப் பெண் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார். என்னுடைய துணிப்பையும் தலையணையும் பறிமுதல் செய்யப்பட்டன. நடைமேடைக்கு இழுத்துவரப்பட்டேன். 8-க்கு 8 அளவிலான குறுகிய அறையில், ஐஸ் கட்டிபோல ஜில்லிட்ட கட்டாந்தரையில் கிடத்தப்பட்டேன். அந்த அறைக்குள் சிறுநீர் கழிப்பதற்கான ஒரு துவாரம் மட்டுமே இருந்தது. 72 மணி நேரத்துக்கும் கூடுதலாக உண்ண உணவோ, பருக நீரோ இன்றி நடுநடுங்கும் குளிரில் அந்த அறையிலேயே அடைத்துவைக்கப்பட்டிருந்தேன்.

மூன்று நாட்கள் கழித்து அந்த அறையின் கதவுகள் திறக்கப்பட்டபோது வெளியுலகை மீண்டும் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கையை முழுவதுமாக இழந்த மனநிலையில் இருந்தேன். மீண்டும் தரதரவென என்னை இழுத்துவந்து நடைமேடையிலிருந்து நகர்ந்துகொண்டிருந்த ஏதோ ஒரு ரயிலில் ஏற்றினார் அந்த போலீஸ்காரர். அங்கும் ரயில் காவலர் பெட்டியில் சிறைவைக்கப்பட்டேன். 20 மணிநேரம் கழித்து இஸ்தான்புல்லை ரயில் சென்றடைந்ததும் விடுவிக்கப்படுவேன் என்றார் அவர். அதிலும் அவர் கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன: “நட்பு பாராட்டும் நாடான இந்தியாவில் இருந்து நீ வந்திருப்பதால்தான் உன்னை விடுவிக்கிறோம்!”

பசியால் வாடி வதங்கி, குளிரில் நடுநடுங்கித் தன்னந்தனியாக இஸ்தான்புல்லை சென்றடைந்தேன். அந்தப் பயணம்தான் இனியும் நான் தொழிலாளியாக இருக்கக்கூடாது என்பதை எனக்கு ஆழமாக உணர்த்தியது. அதுவரை குழப்பம் நிறைந்த இடதுசாரியாக இருந்த என்னைப் புதிய பார்வைகொண்ட முதலாளியாக மாற்றியவர் அந்தப் பல்கேரிய போலீஸ்காரர்தான்.

அதற்கு அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதுபோன்ற சில அனுபவங்கள்தான் 1981-ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவ என்னை உந்தித்தள்ளின. இப்படி நம் வாழ்க்கையில் நிகழ்ந்துவிடும் சில எதிர்பாராத சம்பவங்கள்தான் நம்மையே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x