Last Updated : 15 May, 2018 11:41 AM

 

Published : 15 May 2018 11:41 AM
Last Updated : 15 May 2018 11:41 AM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: வரவேற்பு குறையாத பொறியியல்

பொறியியல் சேர்க்கையில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., அரசுக் கல்லூரிகள் போன்ற வாய்ப்புகளுக்கு அப்பால் தங்கள் முன்பாக இரைந்து கிடக்கும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பான ஒன்றை, விரும்பிய பாடப்பிரிவுடன் கண்டறிந்து சேர விழையும் மாணவர்களே எண்ணிக்கையில் அதிகம் இருக்கிறார்கள்.

பொறியியல் படிப்பில் தணியாத ஆர்வமும் சாதிக்கும் வெறியும் கொண்டவர்களுக்குப் பொறியியல் படிப்பு என்றும் கற்பகதரு. தரக்குறைவால் மாணவர்களின் வரவேற்பை இழந்தவையும் வணிக நோக்கிலான எதிர்பார்ப்பில் பொய்த்த கல்லூரிகளுமே பெரும்பாலும் மூடப்பட்டு வருவதால், அவற்றையும் இத்துறையின் ஆரோக்கியமான போக்காகவே கருதலாம்.

எதற்கு முக்கியத்துவம்: கல்லூரியா, பாடப்பிரிவா?

விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும் ஏதோவொரு கல்லூரியில் சேர்ந்து படிக்கலாமா, சிறந்த கல்லூரியில் கிடைக்கும் ஏதோவொரு பொறியியல் படிப்பில் சேர்ந்து படிப்பதா? பெரும்பாலும் பெற்றோர்கள் அருகில் அமைந்திருக்கும், அதிகம் செலவு வைக்காத கல்லூரிகளில் சேருமாறு தங்களுடைய குழந்தைகளை வற்புறுத்துவார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பமே எஞ்சும்.

இதற்குத் தீர்வு என்ன? குறிப்பிட்ட பொறியியல் பாடத்தில் மாணவர் அதீத ஆர்வம் கொண்டிருப்பின் அவரது விருப்பத்துக்குப் பெற்றோர் செவிசாய்க்கலாம். அவ்வாறு சேரும் கல்லூரி தரவரிசையில் சற்றுப் பின்தங்கியிருந்தாலும், மாணவர் தனது தனிப்பட்ட ஊக்கத்தால் சிறப்பாகத் தேறிவிடுவார். மாறாக வேலைவாய்ப்பு சார்ந்து ஏதேனும் ஒரு பட்டம் படிப்பதே அவரது நிலையாக இருப்பின் சிறப்பான கல்லூரியில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்குவது நல்லது.

சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுக்க

தரவரிசைப் பட்டியலில் சிறப்பான இடம், உள்கட்டமைப்பு வசதிகள், நவீன ஆய்வகங்கள், சர்வதேச நூல்கள் அடங்கிய மின் நூலகம், சரியான ஆசிரியர் மாணவர் விகிதம், கூடுதலாக வழங்கப்படும் கல்வி இணைச் செயல்பாடுகள், மென் திறன் பயிற்சி வகுப்புகள், தொழிற்சாலைகளில் செயல்முறைப் பார்வையிடல், பிரபல வெளிநாட்டு/உள்நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் வருகை, பாடம் சார்ந்த ஆராய்ச்சிகளில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், வளாக வேலைவாய்ப்பு உத்திரவாதங்கள், முந்தைய வருடங்களின் தேர்ச்சி விகிதம், இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் எனப் பல அம்சங்கள் இந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

இவற்றை, கல்லூரிகளின் சேர்க்கைத் தரகர்கள் தரும் இனிப்பான வாக்குறுதிகள், பளப்பான விளம்பரக் கையேடுகள், ஆர்ப்பாட்டமான இணையதளங்கள் வாயிலாக மட்டும் உறுதிசெய்வது போதாது.

நேரில் சென்று பார்வையிடுவது விசாரிப்பது, முன்னாள் மாணவர்களைக் கலந்தாலோசிப்பது, தெரிந்தவர்கள் வாயிலாக நிர்வாகத்தின் தரப்பில் விசாரித்த விவரங்களை உறுதிசெய்துகொள்வது ஆகியவையும் அவசியம். இவை அனைத்தையும்விட முக்கியமாக ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி., அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இணையதளங்கள் உதவியுடன் குறிப்பிட்ட கல்லூரியின் அதிகாரபூர்வமான அனுமதி, அங்கீகாரம், இணைவு ஆகியவற்றைச் சரிபார்த்துக்கொள்வது முக்கியம்.

பாரம்பரியத் துறைகள் Vs தனித்துவத் துறைகள்

பொறியியல் படிப்புகள் தொடங்கிய காலம்தொட்டு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட சில அடிப்படையான பாரம்பரியத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரம் நாளுக்கு நாள் புதிது புதிதாக அறிமுகமாகும் தனித்துவமான பொறியியல் துறைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. பொறியியல் துறையில் காலடி வைக்கும் மாணவருக்கு இந்த இரண்டில் எத்திசையைத் தீர்மானிப்பது என்ற குழப்பம் நீடிக்கும்.

திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘புல முதல்வரான’(‘டீன்’) முனைவர் த.செந்தில்குமார் கூறுகையில், ”பொறியியலில் பாரம்பரியப் படிப்புகளைத் தேர்வு செய்து படிப்பதே சிறப்பு. மாணவர் தான் விரும்பிய துறையில் அடிப்படை அறிவில் தன்னைத் திடமாக்கிக்கொள்ள இதுவே உதவும். தனித்துவத் துறைகளில் தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புவோர், முதுநிலைப் பொறியியலில் உரியவற்றை அடையாளம் கண்டு அவற்றில் சேரலாம்.

உதாரணத்துக்கு மெக்கானிக்கல் துறையில் இளநிலை பொறியியல் படித்தவர்கள், முதுநிலையில் ஆட்டோமொபைல், தெர்மல் இன்ஜினீயரிங், எனர்ஜி இன்ஜினீயரிங், நானோ டெக்னாலஜி, மெக்கட்ரானிக்ஸ் எனத் தங்களுக்குப் பிடித்த தனித்துவ மேற்படிப்பில் சேரலாம்” என்றார். பாரம்பரியத் துறைகளில் கடந்த 4 ஆண்டுகளாக மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் போன்றவை முதலிடத்திலும், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் &எலெக்ட்ரானிக்ஸ் துறைகள் அடுத்த இடங்களிலும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன.

கவர்ச்சிகரமான புதுப்புது தனித்துவத் துறைகளைப் பெரும்பாலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளே அறிமுகம் செய்கின்றன. அவற்றில் எதில் சேருவது என்பதைத் தீர்மானிக்க உரிய கல்வி ஆலோசகர், பொறியியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் போன்றவர்களின் உதவியை நாடலாம்.

shutterstock_1062904007rightவேலை நிச்சயம்!

தற்போதைய சூழலின் கனமான கேள்வி ‘பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா?’ என்பதாகவே இருக்கிறது. “நிச்சயம் வேலை கிடைக்கும்” என நம்பிக்கை அளிக்கிறார் த.செந்தில்குமார். “பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர் ‘சப்ஜெக்டிவ்’ தேர்வு முறையில் தயாராகிறார். படித்து முடித்ததும் வேலை வாய்ப்புக்காக அவர் எதிர்கொள்ளும் தேர்வுகள், ‘அப்ஜெக்டிவ் டைப்’பில் அமைந்திருக்கும்.

எனவே, கல்லூரித் தேர்வுகளுக்கான தயாரிப்பின்போதே அப்ஜெக்டிவ் டைப் தயாரிப்புகளையும் மாணவர்கள் மேற்கொண்டால், பின்னாளைய வேலைவாய்ப்புத் தேர்வுகள் எளிமையாவதுடன் அவரது தற்போதைய கல்வியின் தேர்ச்சி விழுக்காடும் மேலும் அதிகரிக்கும். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் அவற்றுக்கான தேர்வுகள் குறித்துப் படிக்கும் போதிருந்தே மாணவர்கள் அறிந்துவைத்திருப்பதும் தேவையான தயாரிப்புகளை இணையாகத் தொடங்குவதும் மிகவும் கைகொடுக்கும்.

மேலும் இண்டியன் இன்ஜினீயரிங் சர்வீஸ் (IES), TNPSC போன்ற தேர்வுகள் தாராளமான அவகாசத்தில் முன்கூட்டியே அறிவிக்கப்படுவதால் அவற்றுக்கான தயாரிப்புகளையும் படிக்கும் காலத்திலிருந்தே தயார் செய்யலாம். முழுமூச்சுடன், ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் பணி திருப்தியிலும் பொறியியல் துறை என்றும் பசுமையான துறையாக நீடித்திருக்கும்” என்றார்.

கலவையான படிப்புகள்

பொறியியலில் அடிப்படையான பிரிவுகள், தனித்துவப் பிரிவுகள் போலவே இரு வெவ்வேறு பிரிவுகள் கலந்துகட்டியதான பாடப்பிரிவுகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெறுகின்றன. மெக்கானிக்கலும் எலெக்ட்ரானிக்ஸும் கலந்த மெக்கட்ரானிக்ஸ் இந்த வகையில் சேரும். மருத்துவமும் பொறியியல் நுட்பம் சேர்ந்த பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி படிப்புகளில் அண்மை ஆண்டுகளாக மாணவர்கள் விரும்பி சேருகின்றனர். மருத்துவம், பொறியியல் என இரண்டு தொழிற்கல்விகளையும் ஒரு சேரப் படித்த திருப்தியும் பெருமையும் இவர்களுக்குக் கிடைப்பதும் ஒரு காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x