Published : 01 May 2018 10:34 AM
Last Updated : 01 May 2018 10:34 AM

வரலாறு தந்த வார்த்தை 28: நீங்க புலியா… புலி மாதிரியா..?

ன்றைய தேதிக்கு உண்மையான ‘உலக நாயகன்’, பிரதமர் நரேந்திர மோடிதான்! இதோ… சீனாவுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு என்பது ‘புலி’க்கும் ‘பாண்டா கரடி’க்குமான உறவு. என்னதான் இருநாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்டாலும், அவர்களின் முதுகுக்குப் பின்னால் அரூப கத்தி இருந்துகொண்டே இருக்கிறது.

என்னதான் மக்கள்தொகை, பொருளாதார வளர்ச்சி, அணு ஆயுதங்கள் என சீனாவுக்கு நிகராக இந்தியா வளர்ந்தாலும், உலக அரங்கில், சீனா என்னவோ இந்தியாவை, ‘இந்தாப்பா… போ… போய் வீட்ல இருந்து பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு வா..!’ என்கிற ரீதியிலேயே, நடத்துகிறது.

அதற்கு ஒரு சின்ன உதாரணம், இந்திய சீன எல்லையில் அவ்வப்போது நடக்கும் சச்சரவுகள். அவ்வப்போது, சீனா தனது ஆளுகையை எல்லை தாண்டி விரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவும், ‘பாஸ்… பாஸ்… புதுசா செண்ட் எல்லாம் போட்டுக்கிட்டு வந்திருக்கேன் பாஸ். இன்னிக்கு நான் லெட்டர் கொடுக்கிறேன்’ என்கிற ரீதியில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியே அமுங்கிப் போகிறது.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் ‘இந்தியாவும் சீனாவும் உலக அமைதிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடும்’ என்று ‘திரும்பத் திரும்ப பேசுற நீ’ கணக்காக, அறிக்கைவிட்டிருக்கிறார்கள்.

‘சீன அதிபரே நேரில் வந்து வரவேற்ற முதல் இந்தியப் பிரதமர் நான்தான்’ என்று புளகாங்கிதம் அடையும் மோடி, சீனாவுக்குச் சென்றவுடன், அங்கிருந்த பழங்குடியினரின் வாத்தியங்களை எல்லாம் வாசித்து விளையாட்டுக் காட்டியிருக்கிறார்.

எல்லையைக் காப்பதற்குக் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில், இப்படி விளையாட்டுக் காட்டினால், ‘அட, இவரு ‘புலி’ இல்லப்பா… ‘பேப்பர்’ புலி..!’ என்று சீனாவுக்கு மேலும் குளிர்விட்டுப் போகுமே!

நிற்க… அது என்ன ‘பேப்பர்’ புலி..? பார்ப்பதற்கு அதிகாரம் மிக்கவர் போலத் தோற்றம் இருந்தாலும், உண்மையில் அவருக்கு எந்த அதிகாரமுமே இருக்காது. அல்லது நினைத்ததைவிட, மிகவும் குறைந்த அளவே அவருக்கு அதிகாரம் இருக்கும். ‘பில்டிங் ஸ்ட்ராங்… ஆனா பேஸ்மண்ட் வீக்’ என்பது மாதிரி! அரசியலில், இதுபோன்ற ஆட்களை நிறையக் காணலாம். அவர்களைக் கேலி பேச ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுவதுதான் ‘Paper Tiger’ எனும் சொற்றொடர்.

இதில் இருக்கும் சுவாரசியம் என்ன தெரியுமா? இந்த வார்த்தை சீனாவில் இருந்துதான் அறிமுகமாகிறது. தங்களை எதிர்க்கும் எதிரிகளை மட்டம்தட்ட அன்றைய சீன கம்யூனிஸ்ட்டுகள் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினார்கள். அதுவும் குறிப்பாக, அமெரிக்காவுக்கு எதிராக..! இந்தச் சொற்றொடரை சீனப் புரட்சியாளர் மாவோதான் பிரபலப்படுத்தினார். எனினும், இந்தச் சொற்றொடரை அவர் அறிமுகப்படுத்தவில்லை. அவருக்கு முன்பே சீன மொழியில் அந்தச் சொற்றொடர் இருந்து வந்திருக்கிறது.

அதை, 1836-ம் ஆண்டு வெளியான ‘தி சைனீஸ்’ எனும் தனது புத்தகத்தில், சர் ஜான் டேவிஸ் என்பவர், ஆங்கிலத்தில் முதன்முதலாகப் பதிவுசெய்தார்.

மாவோ, புரட்சிகரமான பல பொன்மொழிகளை எல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதில் ஒன்று: ‘அதிகமாகப் புத்தகங்களைப் படிப்பது ஆபத்தானது!’. அதனால்தானோ என்னவோ, இரண்டாவது முறையாக அதிபராகி, ‘நாட்டின் நிரந்தர அதிபர்’ என்ற பெருமையைப் பெற்ற ஜி ஜின்பிங், எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘அனிமல் ஃபார்ம்’ எனும் புத்தகத்தை சீனாவில் விற்பனை செய்ய தடை விதித்திருக்கிறார். காரணம், எங்கே மக்கள் அதைப் படித்துவிட்டு, தனக்கு எதிராகப் புரட்சி செய்யத் தொடங்கிவிடுவார்களோ என்ற பயம்தான்.

அட போங்க காம்ரேட்… நீங்கதான் ‘பேப்பர்’ புலி..!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x