Last Updated : 24 Apr, 2018 10:15 AM

 

Published : 24 Apr 2018 10:15 AM
Last Updated : 24 Apr 2018 10:15 AM

ஆங்கிலம் அறிவோமே 210: நான் எங்கே இருந்தேன்?

கேட்டாரே ஒரு கேள்வி

“’Angry young man’ என்றால் என்ன, முன்பு அமிதாப் பச்சனை இப்படிக் கூறக் கேட்டிருக்கிறேன். எந்த வயதுவரை ஒருவரை angry young man எனலாம்?”

---------------------

“ஒரு நாளிதழில், This is the alpha & omega of the issue என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதற்குப் பொருள் என்ன?”

கிரேக்க மொழியில் Alpha என்பது முதல் எழுத்து. Omega என்பது கடைசி எழுத்து. எனவே, alpha and omega என்பதன் மூலம் ‘ஒட்டுமொத்தமாக’ என்பதை உணர்த்துகிறார்கள். உங்கள் வாக்கியத்தின் பொருள் ‘பிரச்சினையின் மொத்தக் கோணங்களும் இவைதான்’.

சில நேரம் ஒன்றின் முக்கியப் பகுதிகளை மட்டுமே Alpha & Omega என்று குறிப்பிடுவதுண்டு.

ஏசுநாதரை alpha and omega என்றும் கூறுவதுண்டு.

---------------------

வாசகரே, கேட்டீர்களே ஒரு கேள்வி. Angry young man என்பதற்குக் குறிப்பிட்ட வயது என்று எதுவுமில்லை. எனினும், senior citizen-ஐ இப்படிச் சொல்வதில்லை. சமூகத்தில் காலங்காலமாக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவரை angry young man என்று குறிப்பிடுவதுண்டு. அமிதாப் தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்காக இப்படி அறியப்பட்டார்.

---------------------

“Where was I?” இதற்கு என்ன பொருள் என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். கேள்வியின் எளிமையைப் பார்த்து முதலில் கொஞ்சம் வியப்பாக இருந்தாலும், சற்று யோசித்தபோது அதற்கு வேறொரு பொருள் இருப்பது புரிந்தது.

பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் “Where was I?” என்று கேட்டால் அதற்கான மறைமுகப் பொருள் இதுதான். “நான் பேசும்போது ஏதோ இடையூறு வந்துவிட்டது. அல்லது எனக்கு மறந்து விட்டது. என்ன பேசிக் கொண்டிருந்தேன் என்பது நினைவில்லை. ஞாபகப்படுத்தி எனக்கு உதவுங்கள்”.

---------------------

“Comprehensible என்பதற்கும், Comprehensive என்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?”

Comprehensible என்றால் தெளிவாகப் புரியக்கூடிய வகையில் என்று அர்த்தம். His writing skill is evident through his comprehensible style.

Comprehensive என்றால் ஒன்றின் அத்தனை பகுதிகளையும் உள்ளடக்கியது என்று பொருள். They found a comprehensive list of nearly 500 projects and selected 80 projects for further analysis.

Comprehensive victory என்றால் மாபெரும் வெற்றி என்று அர்த்தம். மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் பெறும் வெற்றியை “A comprehensive victory” என்று கூறுவதை அறிந்திருக்கலாம்.

வண்டிக் காப்பீடுகளில் Comprehensive Policy என்று கூறுவதுண்டு. அனைத்து அல்லது பெரும்பாலான காப்பீடுகளையும் இது உள்ளடக்கியது என்று பொருள்.

---------------------

Little, a little இரண்டில் எது மிகக் குறைவானது எனக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Little என்றால் கிட்டத்தட்ட இல்லை என்று பொருள். அதாவது very very little என்று கூறலாம். ஃபிரிட்ஜைத் திறந்து பார்க்கிறீர்கள். இரண்டே இரண்டு பிஸ்கட் துண்டுகள் மட்டுமே காணப்படுகின்றன. There is little food in the fridge என்று நீங்கள் கூறலாம்.

A little என்றால் அதிகமாக இல்லை ஆனால், ஓரளவு இருக்கிறது என்று பொருள்.

பொதுவாக little என்பதை எதிர்மறை அர்த்தத்திலும், a little என்பதை நேர்மறை அர்த்தத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

They have little money என்பது அவர்கள் மிகவும் ஏழை என்பதைக் குறிக்கிறது. They have a little money என்றால் அவர்கள் ஏழையில்லை என்ற அர்த்தத்தை அது அளிக்கிறது. அதாவது அவர்களிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது.

english 2jpg100 

“Prima donna என்பது பெருமைக்குரிய ஒரு பட்டமா?”

ஓர் இசைக்குழுவின் முக்கியப் பாடகியைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். என்றாலும், அது வேறொரு பொருளில்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிலர் தாங்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்று அவர்களாகவே எண்ணிக்கொள்வார்கள். தனக்குரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று அலட்டிக்கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை prima donna என்கிறார்கள்.

Stop behaving like a prima donna. You are not the only person around here.

தொடக்கம் இப்படித்தான்

ஃபிரிஸ்பீ (Frisbee) என்ற விளையாட்டை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பறக்கும் தட்டு (Flying disc) என்றும் கூறுவதுண்டு. இதைச் சுழலவிட்டபடியே தூக்கி எறிந்து விளையாடலாம்.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கனெக்டிகட் மாகாணத்தில் இயங்கிவந்தது ஃபிரிஸ்பீ பை (Frisbee pie) நிறுவனம். இந்த நிறுவனத்தின் காரோட்டிகள் உணவு இடைவேளைகளின்போது கேக்குகள் அடைக்கப்பட்டு வந்த தகர டின்களின் மேலிருந்த தட்டுகளைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள். தன்னை நோக்கி வரும் இந்தத் தட்டைப் பிடிப்பதுதான் இதற்கான சவால்.

இதைப் பார்த்த யேல் பல்கலைக்கழக மாணவர்கள் தாங்களும் இதை விளையாடிப் பிரபலப்படுத்தினர். ‘பறக்கும் தட்டு’ விளையாட்டு பரவலானது. தகரத்தின் இடத்தைப் பிளாஸ்டிக் பிடித்துக்கொண்டது. என்றாலும் முதன்முதலில் இதை விளையாடிய காரோட்டிகளின் நிறுவனமான Frisbee என்பது இந்த விளையாட்டின் பெயராக நிலைத்துவிட்டது.

சிப்ஸ்

# Would you like a cup of coffee என்று கேட்கப்படும்போது Thank you என்றால் அது ‘No thanks’ என்பதுபோல் தோன்றிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

நண்பரே. “Thank you. That would be nice” என்று கூறிவிடுங்களேன். மற்றபடி Yes என்ற நேரடி வார்த்தையும் இருக்கிறதே.

# Woman என்பதை உமன் என்று உச்சரிக்க வேண்டுமா அல்லது விமன் என்று உச்சரிக்க வேண்டுமா?

Woman என்பதை ‘உமன்’ என்றும் Women என்பதை ‘விமன்’ என்றும் உச்சரிக்க வேண்டும்.

# -ise என்று முடியும் வார்த்தைகளை அமெரிக்க ஆங்கிலத்தில் - ize என்று மாற்றிவிடுகிறார்கள். இது என்ன பழக்கம்?

எல்லா வார்த்தைகளையும் அப்படி மாற்றிவிட முடியாது. Promise.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x