Last Updated : 03 Apr, 2018 10:44 AM

 

Published : 03 Apr 2018 10:44 AM
Last Updated : 03 Apr 2018 10:44 AM

தேர்வுக்குத் தயாரா? சமூக அறிவியலிலும் சதம் சாத்தியம்! (பத்தாம் வகுப்பு)

நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் சமூக அறிவியலைச் சவாலானதாக நினைக்கிறார்கள். அதிக எண்ணிக்கையில் ஒரு மதிப்பெண் வினாக்கள் இருப்பதால் அவற்றின் மூலம் தேர்ச்சி பெறுவது எளிது என அலட்சியமாக இருக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் சவால்தான். இருப்பினும், அனைத்துத் தரப்பு மாணவர்களும் சமூக அறிவியலில் முழு மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

52 மதிப்பெண்களுக்கான ‘ஒரு மதிப்பெண் பகுதி’, 48 மதிப்பெண்களுக்கான ‘கேள்வி பதில் பகுதி’ எனச் சமூக அறிவியல் வினாத்தாள் அமைப்பை இரண்டு பிரிவாகப் பிரித்துப் படிக்கலாம்.

ஒரு மதிப்பெண்களில் கவனம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (14), பொருத்துக (10), தலைப்புவினா (8), காலக்கோடு (5), வரலாறு வரைபடம் (5), புவியியல் வரைபடம் (10) என மொத்தம் 52 மதிப்பெண்களை ஒரு மதிப்பெண் வாயிலாகவே பெறலாம். சதத்தைக் குறிவைப்பவர்களுக்கு இங்கேதான் சறுக்குகிறது. அதேநேரம் தேர்ச்சியை மட்டும் இலக்காகக் கொண்டவர்கள், இப்பகுதியில் கவனமாகத் தயாரானாலே தேர்ச்சி உறுதி.

ஒரு மதிப்பெண் பகுதியில் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களை எதிர்கொள்ள வரலாறு, புவியியல் பாடங்களில் சிவப்பு அடிக்கோடிட்ட பகுதிகள், பச்சை வண்ணத்தில் வரும் பெட்டிச் செய்திகளைக் கூர்ந்து படிக்க வேண்டும்.

வரலாற்றுப் பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும் ‘தலைப்பு வினாக்கள்’ 8 மதிப்பெண்கள் அடங்கியது. 1, 2, 4, 5, 9, 10 பாடங்களில் உள்ள தலைப்பு வினாக்கள் முக்கியமானவை. இவற்றிலும் 1, 9, 10 மிகவும் முக்கியமானவை.

காலக்கோடு (வி.எண். 52) 5 மதிப்பெண்களைக்கொண்டது. இப்பகுதியில் அளவுத் திட்டம் எழுதுவது கட்டாயம். இந்திய வரலாற்று நிகழ்வுகளை நன்கு படிப்பதுடன், 12-வது பாடத்துக்குக் கூடுதல் கவனம் தர வேண்டும்.

வரைபடங்களில் முழு மதிப்பெண்

வரலாறு:

ஆசியா, இந்திய வரைபடங்களில் இந்தியா மூலமே முழு மதிப்பெண்ணை உறுதிசெய்யலாம். எனவே, இந்திய வரைபடத்தில் கூடுதல் பயிற்சி அவசியம். குறிப்பாக ‘1857 கிளர்ச்சி’ நடைபெற்ற இடங்கள், விடுதலைப் போராட்ட நிகழ்விடங்கள் ஆகியவற்றின் புத்தகப் பயிற்சி பகுதிகளின் மூலமே 5 மதிப்பெண்களை எளிதாக அள்ளலாம். ஆசிய வரைபடத்தில் அரேபியா, பர்மா, ஜப்பான், ஹாங்காங், பசிபிக் பெருங்கடல், பார்மோசா, கொரியா, பெய்ஜிங், மங்கோலியா, செங்கடல், சீனா, காண்டன், சாகலின் தீவுகள், நான்கிங், மஞ்சூரியா, மலேசியா, சிங்கப்பூர் பகுதிகள் முக்கியமானவை.

புவியியல்:

புவியியல் வரைபடம் (வி.எண்: 54) 10 மதிப்பெண்களுக்கானது. இதற்கு இந்தியா வரைபடத்தின் மலைகள், ஆறுகள், பீடபூமிகள், கடற்கரைச் சமவெளி, வளைகுடா, நீர்ச்சந்தி, காடுகள், மண், வேளாண் பயிர்கள், பணப் பயிர், மென்பொருள் தொழிலகம், இரும்புத் தொழிலகம், துறைமுகம், தீவுகள், காற்று வீசும் திசை, மழை பெறும் பகுதி, பாலைவனம், சிகரம் போன்ற பகுதிகளில் நன்கு பயிற்சி செய்தாலே முழு மதிப்பெண்களைப் பெறலாம்.

மாணவர்கள் அதிகம் தவறிழைப்பதால் போக்குவரத்து குறித்த வினாக்களைத் தவிர்ப்பது உச்சிதம்.

புவியியலில் 1, 3, 4, 5 பாடங்களில் உள்ள இந்திய இடங்களில் கூடுதல் பயிற்சி எடுப்பது நல்லது.

‘கேள்விகளுக்குப் பதில்’ பகுதிகள்

ஒரு மதிப்பெண் பகுதி தவிர்த்துக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் ‘குறு வினாக்கள்’, ‘வேறுபடுத்திக் காட்டுதல்’, ‘விரிவான வினாக்கள்’ என 48 மதிப்பெண்கள் அடங்கியுள்ளன.

குறுவினாக்கள் (வி.எண்.16-35):

தலா 2 என மொத்தம் 20 மதிப்பெண்களுக்கானது இப்பகுதி. இவற்றில் முழு மதிப்பெண் பெற வரலாறு பகுதியின் 1-8 அல்லது 9-14 பாடங்களின் 2 மதிப்பெண் வினாக்களை முழுவதுமாகப் படிக்க வேண்டும். புவியியலின் 1, 3, 4, 5, 6, 8 குடிமையியலின் 1, 2 பொருளியியலின் 2-வது பாடம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

வேறுபாடுகள் எழுதுதல் (வி.எண்.36-43):

புவியியல் பாடப் பகுதியிலிருந்து மட்டுமே கேட்கப்படும் வேறுபாடுகள் வினா பகுதியில் கேட்கப்படும் 8 கேள்விகளில் 4-க்குப் பதில் அளிக்க வேண்டும். இப்பகுதியில் அட்டவணை வரைந்து பதிலை எழுதுவது அவசியம். குறிப்பாக இந்திய - உலக நேரம், வானிலை - காலநிலை, புதுப்பிக்கக்கூடிய வளம் - புதுப்பிக்க இயலாத வளம், ஒரு பயிர் - இரு பயிர், மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் - சமவெளிகள் போன்ற பகுதிகள் முக்கியமானவை.

விரிவான வினாக்கள் (வி.எண்.48-51):

தலா 5 என மொத்தம் 20 மதிப்பெண்களுக்கானது இப்பகுதி. வரலாற்றுப் பாடத்தில் காரணங்கள், சாதனைகள், விளைவுகள் போன்ற தலைப்புகளில் கேட்கப்படும் வினாக்கள் முக்கியமானவை. புவியியலில் காடுகள், மழைநீர் சேகரிப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு, வேளாண்மைப் பிரச்சினை, இமயமலை, அமில மழை போன்றவை முக்கியமானவை. குடிமையியல், பொருளியலுக்கு முதலிரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து அனைத்து வினாக்களையும் படிக்க வேண்டும்.

கேள்விகளைத் தெரிவு செய்வதில் கவனம்

‘சாய்ஸ்’ வினாக்களில் கவனம் தேவை. அனைத்து வினாக்களுக்குமே விடை தெரிந்திருந்தாலும் நன்கு எழுதிப் பார்த்து, வகுப்பறைத் தேர்வுகளில் முழு மதிப்பெண்கள் பெற்ற வினாவைத் தெரிவுசெய்து பதிலளிப்பது நன்று.

விருப்பத்துடன் திருப்பலாம்

> குறுகிய காலத்தில் திருப்புதலுக்கான ஆலோசனை:

> ஏப்ரல் 17: மதியத்திலிருந்து 2 மதிப்பெண் வினாக்களில் திருப்புதல்.

> ஏப்ரல் 18: 5 மதிப்பெண், புவியியல் வேறுபாடுகள், தலைப்பு வினாக்களில் திருப்புதல்.

> ஏப்ரல் 19: ஒரு மதிப்பெண் வினாக்கள், காலக்கோடு மற்றும் வரலாறு-புவியியல் வரைபடப் பயிற்சிகளில் திருப்புதல்.

> தேர்வு நெருக்கத்தில் புதிதாகப் படிப்பதைத் தவிர்க்கலாம். திருப்புதலின்போது முக்கியக் குறிப்புகளை மட்டும் பார்வையிடுவது, அவற்றை நினைவுபடுத்திப்பார்ப்பது புத்திசாலித்தனம். ஒரே வகையிலான தலைப்புகளை ஒப்பிட்டுப் படிப்பது நல்லது. முந்தைய பொதுத் தேர்வு வினாக்களில் அதிகம் கேட்கப்பட்ட வினாக்களைக் குறித்து வைத்துக்கொண்டு அவற்றுக்கு அதிகக் கவனம் தரலாம்.

தேர்வறைக்கான குறிப்புகள்

> பகுதி எண், வினா எண் எழுதுவது அவசியம்.

> ஒரு பக்கத்தில் 12 முதல் 15 வரிகள்வரை எழுதலாம். அவசியமின்றிப் பக்கம் பக்கமாக விடைகளை எழுதுவது அதிக மதிப்பெண் தராது. கருத்தான குறிப்புகள் அடங்கிய தெளிவான விடை மட்டுமே மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.

> விரிவான விடைகளுக்குத் தலைப்பிட்டு அதை அடிக்கோடிடலாம்.

> பொருத்துக பகுதியில் வினா- விடை ஒவ்வொன்றையும் நேராக எழுதுவதும் அடுத்த வரிக்குப் போதுமான இடைவெளி தருவதும் அவசியம்.

> வேறுபாடு பகுதியில் 2 அல்லது 3 குறிப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதுடன் அவற்றை அட்டவணையாக எழுத வேண்டும். எடுத்துகாட்டுகள் இருப்பின் அவற்றை எழுதுவதும் சிறப்பு.

31CH_Tenthexamது.நாகராஜ் து. நாகராஜ்

> காலக்கோடு பகுதியை பென்சில் கொண்டு வரைதல் வேண்டும்.

> அதேபோன்று வரைபடத்திலும் பென்சில் கொண்டு குறிப்பது நல்லது. இடங்களை புள்ளி வைத்துக் குறிக்க வேண்டும். புவியியல் வரைபடப் பகுதிகளில் அடையாளக் குறியீடுகளுடன் வரைந்து குறிப்பது அவசியம். வரைபடத்தில் திசைகள் வரைந்த பின் விடைகளைக் குறித்தால் எளிதாக இருக்கும்.

பாடக் குறிப்புகளை வழங்கியவர்: து.நாகராஜ், பட்டதாரி ஆசிரியர் (வரலாறு), அரசு மேல்நிலைப்பள்ளி, இராப்பூசல், புதுக்கோட்டை மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x