Last Updated : 13 Mar, 2018 10:40 AM

 

Published : 13 Mar 2018 10:40 AM
Last Updated : 13 Mar 2018 10:40 AM

ஆங்கிலம் அறிவோமே 204: ‘கட்டளையே சாசனம்’ங்கிறது இதுதானோ!

கேட்டாரே ஒரு கேள்வி

High flyer என்பது விமானக் கேப்டனைக் குறிக்குமா அல்லது விமானப் பணிப் பெண்ணைக் குறிக்குமா?.

விமானம் தொடர்பாகத்தான் இது இருக்க வேண்டும் என்பதில்லை. தன் துறையில் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் யாரைக் குறிக்கவும் High flyer என்ற தொடர் பயன்படுத்தப்படுகிறது. இப்போது அப்படியில்லை என்றாலும் விரைவில் தன் துறையில் முன்னணிக்கு வரும் ஆற்றல் கொண்டவரையும் இப்படிக் குறிப்பிடுவதுண்டு.

**********************

Must என்ற வார்த்தைக்கும் have to என்ற வார்த்​தைக்கும் ஒரே அர்த்தம்தானா?

பொதுவாக அப்படித்தான். You must do this என்றாலும், you have to do this என்றாலும் ஒரே பொருள்தான். ‘நீ இதைச் செய்தாக வேண்டும்’.

ஆனால் எதிர்மறையாகப் பயன்படுத்தும்போது இரண்டுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

You must not do this என்பதும், you do not have to do this என்பதும் ஒன்றல்ல.

You must not do this என்றால் ‘நீ இதைச் செய்யக் கூடாது’. அதாவது செய்தால் ஏற்க மாட்டேன்.

You do not have to do this என்றால் ‘நீ இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை’. அதாவது நீ இதைச் செய்தாலும் பரவாயில்லை, செய்யாமலும் இருக்கலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

You must do as I say என்பதில் ஒரு கட்டாயம் தொனிக்கிறது. அதாவது நான் சொல்வதை நீ செய்தாக வேண்டும்.

You ought to do as I say என்றால் அதில் அவரது கடமை அல்லது மனசாட்சியை நீங்கள் தூண்டி விடுகிறீர்கள். ‘நான் சொல்வதை நீ செய்வதுதான் நியாயம்’.

**********************

‘He addressed a gathering’ என்றால் என்ன பொருள்? முகவரி என்பதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா?’’. இது ஒரு வாசகரின் சந்தேகம்.

Verb ஆகப் பயன்படுத்தப்படும்போது address என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு.

முகவரியை எழுதுவது என்பது அவற்றில் ஒன்று. She received the incorrectly addressed letter due to a clerical error.

address என்ற வார்த்தைக்கு ஒருவரிடமோ ஒரு கூட்டத்திடமோ பேசுவது என்றும் ஒரு பொருள் உண்டு. அந்த விதத்தில்தான் நீங்கள் கூறும் addressed a gathering எனும் பயன்பாடு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒருவரை அழைப்பதையும் address என்பார்கள். He addressed her as ‘Mrs.Prakash’ in front of others.

ஒரு பிரச்சினையைக் குறித்து யோசிப்பது என்பதையும்கூட address என்ற வார்த்தை குறிக்கிறது. This problem is not yet addressed.

**********************

‘But என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்த சலிப்பாக இருக்கிறது. அதே அர்த்தம் தரும் வேறு வார்த்தை உண்டா?’ என்று கேட்டிருக்கிறார் வாசக நண்பர் ஒருவர்.

அப்படி எதுவும் இல்லை என்று நான் கூறிவிடலாம்தான் but அது தவறாகிவிடுமே!

நண்பரே but என்ற வார்த்தைக்குப் பதிலாக கீழே உள்ள வார்த்தைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாமே.

Yet

However

On the other hand

Although

Nevertheless

**********************

‘அலுவலகத்தில் தேதியைக் குறிப்பிடும்போது குழப்பம் வருகிறது. தே​தியை எப்படிக் குறிப்பிடுவது?’ எனும் வாசகர் ஓரிரு எடுத்துக்காட்டுகளையும் அளித்திருக்கிறார்.

வாசகரின் குழப்பத்துக்குக் காரணம் உண்டு.

பிரிட்டிஷ் முறையில் DD/MM/YY என்ற வரிசையில் குறிப்பிடுவார்கள். (DD என்பது தேதி. MM என்பது மாதம். YY என்பது வருடம்). அதாவது 28-2-2018 என்று எழுதுவார்கள்.

அமெரிக்க முறையில் இது MM/DD/YY என்று ஆகிவிடும். அதாவது February, 28, 2018.

ஜப்பானில் இரண்டுமல்லாத வேறொரு விதத்தில் தேதி குறிப்பிடுவார்கள் அது YY/MM/DD. 2018, Feb. 28.

எந்த வகையில் நீங்கள் எழுதினாலும் சரியே. ஆனால் வேறு நாடுகளில் ஹோட்டல் புக் செய்வது, விமானத்தில் செல்ல டிக்கெட் புக் செய்வது போன்றவற்றின்போது மிகுந்த கவனம் தேவை.

இப்படி யோசியுங்கள். 03/06/18 என்பது எதைக் குறிக்கிறது?

இது பிரிட்டனில் ஜுன் 3, 2018. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை மார்ச் 6, 2018. எனவே தெளிவு தேவை.

addressjpg100 

‘Carcass’ என்றால் என்ன? என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார்.

இதற்கான விடையை இப்பகுதியில் முன்பு கூறியிருக்கிறேன். Carcass என்பது இறந்த விலங்கின் உடல். பெரும்பாலும் பிற விலங்குகளால் இது தின்னப்பட்ட நிலையில் உள்ளது.

சில வாரங்களுக்கு முன் நிறைய சிந்திக்க வைக்கும் ஆங்கிலப் பழமொழிகளை இப்பகுதியில் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளலாமா என்று கேட்டதற்கு வாசகர்கள் பலர் உற்சாகத்துடன் ‘நிச்சயம் ​பகிரலாம்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மேற்படி கேள்வியை (carcass), இறப்பு தொடர்பான சில பழமொழிகளைப் பகிர்வதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளத் தோன்றுகிறது.

Where a carcass is, there vultures will be. (மலேசியப் பழமொழி)

What is said over the dead lion’s body could not be said to him alive. (காங்கோ குடியரசு நாட்டின் பழமொழி).

There is no marriage where there is no weeping and no funeral where there is no laughing. (இத்தாலியப் பழமொழி)

The one who seeks revenge should remember to dig two graves. (சீனப் பழமொழி)

There is time enough to yawn in the grave. (எஸ்டோனியப் பழமொழி)

(Yawn என்றால் கொட்டாவி, Grave என்றால் சமாதி, Vulture என்றால் கழுகு, Revenge என்றால் பழி உணர்வு, Funeral என்றால் இறுதிச் சடங்கு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்)

போட்டியில் கேட்டுவிட்டால்?

Malayalam is a __________

(a) Homonym

(b) Homophone

(c) Palindrome

(d) Spoonerism

உச்சரிப்பு ஒன்றுபோலவே இருக்கும் வார்த்தைகளை homophone என்பார்கள். Two – too, carat – carrot, lose – loose.

Bank என்றால் அது நதிக்கரையையும் குறிக்கும், வங்கியையும் குறிக்கும். Bow என்பது வயலினை வா​சிக்கப் பயன்படும் மரக்குச்சியையும் குறிக்கும், வளைந்து வணங்குவதையும் குறிக்கும். இதுபோன்ற வார்த்தைகளை Homonym என்று குறிப்பிடுவார்கள்.

Spoonerism என்பதற்கு இரண்டு வார்த்தைகளாவது வே​ண்டும். Running Kings என்பதற்குப் பதிலாக Cunning Rings என்று வாய் தவறிச் சொல்வது அல்லது கிண்டலடிப்பது spoonerism. இன்னொரு எடுத்துக்காட்டு Crushing blow என்பதற்குப் பதிலாக Brushing clow என்பது.

ஆக Malayalam என்ற வார்த்தை மேற்குறிப்பிட்ட மூன்றுக்குமே பொருந்தவில்லை.

Palindrome என்றால் எழுத்துகளை மறுபுறத்திலிருந்து திருப்பிப்படித்தாலும் அதேபோன்று இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு:- Eve, madam. அதே போன்றுதான் Malayalam என்பதும்.

எனவே Malayalam is a ​palindrome என்பதுதான் சரி.

சில நேரம் எழுத்துகளுக்குப் பதிலாக அப்படியே வார்த்தைகளைக் கொண்டுகூட palindrome-ஐ உருவாக்குவார்கள். கீழே உள்ள வாக்கியத்தைப் படியுங்கள்.

First ladies rule the State and state the rule: ladies first.

சிப்ஸ்

# Gestation என்றால் என்ன?

சினைக் காலம் அல்லது கரு சுமக்கும் காலம்.

# Dependency culture என்றால் என்ன?

அரசு அளிக்கும் பணம் அல்லது சேவைகளை மக்கள் பெரிதும் ​சார்ந்திருக்கும் ஒரு சமூக நிலை.

# Stray dogs என்றால் வெறி நாய்களா? சொறி நாய்களா?

தெரு நாய்கள்

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x