Last Updated : 27 Feb, 2018 10:40 AM

 

Published : 27 Feb 2018 10:40 AM
Last Updated : 27 Feb 2018 10:40 AM

ஆங்கிலம் அறிவோமே 202: கொஞ்சம் அபத்தம்தானோ!

கேட்டாரே ஒரு கேள்வி

Remote Village என்றால் டி.வி. அல்லது ஏ.சி. ஆகியவை உள்ள கிராமமா அல்லது அவை இல்லாத கிராமமா?

************

‘A nudge and a wink’ என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.

Nudge என்றால் ஒருவரை மெதுவாகத் தொட்டுக் கவனத்தை ஈர்ப்பது. நீங்களும் நண்பரும் இசைக் கச்சேரிக்குச் செல்கிறீர்கள். பாடகர் பாடிக்கொண்டிருக்கிறார். பிறர் கவனத்தைக் கலைக்கக் கூடாது எனும் எண்ணத்தில் உங்கள் நண்பரின் கையை நீங்கள் மெதுவாகத் தொடுகிறீர்கள் அல்லது விரல்களால் மெதுவாகக் குத்துகிறீர்கள். இதுதான் nudging. அதாவது, குறிப்பிட்டவரின் கவனத்தை மட்டும் ஈர்த்தல். ‘மணியாகுது. கிளம்பலாம்’ என்பதை அறிவிப்பதுகூட உங்கள் நோக்கமாக இருக்கக்கூடும்.

ஒருவரை எதையோ செய்ய வைப்பதற்காக இதமாக ஊக்குவிப்பதைக்கூட nudging என்பார்கள். We nudged him to participate in the contest.

Winking என்றால் கண்ணடித்தல்.

ஒருவரை சீண்டும் விதமாகத் தொட்டுவிட்டுக் கண்ணடித்தால் nudging and winking.

************

The Board of trustees divested dollar 20 million from the stock market என்று ஒரு வாக்கியத்தைப் படித்தேன். Divest என்றால் இழப்பா அல்லது முதலீடு செய்வதாக இருந்து பின்வாங்குவது என்று அர்த்தமா?

Divest என்றால் ஒன்றைப் பறிப்பது. அதாவது உரிமையைப் பறிப்பது, உடைமையைப் பறிப்பது, அதிகாரத்தைப் பறிப்பது என்பதுபோல. The grant of licence to occupy will not divest the owner of control.

எங்கள் எல்லா உரிமைகளையும் பறிக்கும் உரிமையை நாங்கள் அரசுக்கு அளிக்க முடியாது என்பதை We can’t give Government the unilateral right to divest us of all our rights.

************

ஒற்றை மேற்கோள் குறி (Single quotation), இரட்டை மேற்கோள் குறி (Double quotation) ஆகியவற்றை எங்கே, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு வாசகரின் ஐயம்.

நடைமுறையில் இவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

எதிலிருந்தாவது மேற்கோள் காட்டினால் அவற்றுக்கு இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும். நூலின் பெயர் எழுதும்போது அதை ஒற்றை மேற்கோள் குறிக்கு நடுவில் பயன்படுத்த வேண்டும்.

சில நேரம் முழுமையாக ஏற்க முடியாத விஷயங்களை ஒற்றை மேற்கோள் குறிக்குள் குறிப்பிடுவதுண்டு. அதாவது படிப்பவரிடம் ‘நீங்களே இது குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம்’ என்று கூறுவது போன்ற தொனி. They have cut down the trees in the interest of ‘national infrastructure’.

ஏதாவது வார்த்தை அல்லது வார்த்தைகளை வலியுறுத்த நினைத்தால் அதை ஒற்றை மேற்கோள் குறிக்குள் அளிப்பதுண்டு. Why does he use the word ‘poison’?

மேற்கோளுக்குள் மேற்கோள் இடம் பெறும்போது என்ன செய்வது?

அப்போது இரண்டு மேற்கோள் குறிகளையும் பயன்படுத்துவது வழக்கம். கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்.

‘அவனைக் கேட்டபோது “எனக்குத் தெரியாது”என்று திட்டவட்டமாகக் கூறினான்’. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இப்படிப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்க ஆங்கிலத்தில் இதற்கு நேர்மாறானது. “அவனைக் கேட்டபோது ‘எனக்குத் தெரியாது’ என்று திட்டவட்டமாகக் கூறினான்”. (இப்போதெல்லாம் பலரும் இப்படித்தான் பயன்படுத்துகிறார்கள்).

************

கேட்டாரே! Remote என்றால் தொலைவில் உள்ள என்று பொருள். Remote என்ற கருவியை இருந்த இடத்திலிருந்தே இயக்கித் தொலைவில் உள்ள டி.வி.யின் சானல்களை மாற்றுகிறோம். ஏ.சி. கருவியைக் கைகளால் இயக்காமல் தொலைவிலிருந்தே இயக்க வைக்கிறோம்.

தொலைதூரத்திலுள்ள (அதாவது மக்கள்தொகை அதிகமாக உள்ள இடத்திலிருந்து தூரத்திலுள்ள) பகுதியைக் குறிக்கவும் remote என்ற வார்த்தை பயன்படுகிறது. அந்தக் அர்த்தத்தில்தான் Remote Village என்கிறார்கள். அந்தக் கிராமத்தில் டி.வி. இருப்பதும், ஏ.சி. இருப்பதும் இந்தக் கோணத்தில் ஒரு பொருட்டே அல்ல.

************

“Double negative என்பதை positive என்கிறார்கள். கணிதம் இருக்கட்டும், ஆங்கில மொழி என்ற அடிப்படையில் இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?’’

This gem is not uncommon என்றால் அது அரிதானது அல்ல என்று பொருள்.

இரண்டு எதிர்மறைச் சொற்கள் வந்தால் அந்த இரண்டையும் நீக்கிவிட்டால் பொருள் புரிந்துவிடும். He was not irresponsible about his duties என்பதில் not, ir- ஆகியவற்றை எடுத்துவிடுங்கள். He was responsible about his duties என்று பொருள். The price of the car is not unimportant என்பதில் not, un ஆகியவற்றை நீக்கிவிட்டால் கிடைக்கும் வாக்கியமான The price of the car is important என்பதே சரியான பொருள்.

பொதுவாக, double negatives-ஐப் பயன்படுத்துவது முறையான மொழிப் பயன்பாடு அல்ல என்ற கருத்து நிலவுகிறது. என்ன இருந்தாலும் I do not know nothing about computers என்றால் I know something about computers என்பது கொஞ்சம் அபத்தமாகத்தான் தோன்றுகிறது அல்லவா?

english 2jpg100 

“நமக்கு இரண்டு கால்கள் இருப்பதால் A pair of legs என்கிறோம். ஆனால், ஒரே ஒரு கத்தரிக்கோலை A pair of scissors என்று சொல்வது சரியா?”.

நம் உடலை ஒரு கத்தரிக்கோல்போல நினைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்கள் கத்தரிக்க உதவும் இரண்டு பகுதிகள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது A pair of legs சரி என்றால், A pair of scissors என்பதும் சரிதானே?

சில வார்த்தைகளை எப்போதுமே பன்மையாகத்தான் பயன்படுத்துவோம். Trousers, binoculars, pyjamas, belongings, glasses (மூக்குக் கண்ணாடி என்ற அர்த்தத்தில்), scissors, tweezers என்பதுபோல.

************

போட்டியில் கேட்டுவிட்டால்

My brother always ----- to me when we have an argument.

a) gives up

b) gives in

c) gives off

d) gives out

Gives out என்றால் ஒன்றைப் பலருக்கும் அளிப்பது. The consultant gives out financial advice to the public.

Gives off என்றால் வெப்பம், ஒளி, வாசம் போன்ற எதையோ வெளிப்படுத்துவது. When they die, plants give off gases like carbondioxide.

Gives up என்றால் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒன்றை நிறுத்திவிடுவது. His son persuaded him to give up smoking.

Gives in என்றால் ஒரு விவாதத்திலோ, போட்டியிலோ விட்டுக்கொடுத்துவிடுவது. அதாவது தன் தோல்வியை ஏற்றுக்கொள்வது.

‘எங்களுக்குள் எப்போதும் கடும் விவாதம் ஏற்பட்டாலும் என் சகோதரன் விட்டுக் கொடுத்து விடுவான்’ என்பதுதான் கேள்வி வாக்கியத்தின் பொருள். அர்த்தத்தைப் பொருத்து gives up, gives in ஆகிய இரண்டுமே பொருந்துகின்றன. என்றாலும் கோடிட்ட இடத்துக்குப் பிறகு ‘to me’ என்ற வார்த்தைகள் இடம் பெறுவதால் gives in என்பதுதான் கச்சிதமாகப் பொருந்துகிறது.

எனவே My brother always gives in to me when we have an argument என்பதுதான் சரியான வாக்கியம்.

# Cup and saucer என்கிறோமே. இதுபோல ஜோடிப் பொருள்கள் வேறு உண்டா?

நிறைய உண்டு. உதாரணத்துக்கு, knife and fork, horse and cart, bread and butter

# Like I told you என்பது சரியா?

As I told you.

# Translation என்பதற்கும் transliteration என்பதற்கும் என்ன வித்தியாசம்? Waterfalls என்பதன் translation அருவி. Transliteration நீர்வீழ்ச்சி. இப்படிக் கூறலாமா?

கூடாது. I came என்பதன் translation ‘நான் வந்தேன்’. I came என்பதன் transliteration ‘ஐ கேம்’.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x