Last Updated : 13 Feb, 2018 11:23 AM

 

Published : 13 Feb 2018 11:23 AM
Last Updated : 13 Feb 2018 11:23 AM

ஆங்கிலம் அறிவோமே 200: சொன்னது வேறு, புரிந்தது வேறு!

கேட்டாரே ஒரு கேள்வி

Sportsmanship, Gamesmanship ஆகிய இரண்டும் ஒன்றுதானே?

**************

Sportsmanship என்பதும் gamesmanship என்பதும் நிச்சயம் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள் அல்ல.

Sportsmanship என்பது பெருந்தன்மையைக் குறிக்கிறது.

கிரிக்கெட் ஆடும்போது தான் அவுட் ஆனதாக பேட்ஸ்மேனுக்குத் தெரிகிறது. அம்பயருக்குச் சந்தேகம் ஏற்பட்டு மூன்றாவது அம்பயரின் ஆலோசனையைக் கோருகிறார். இந்த நிலையில் பேட்ஸ்மேன் தான் அவுட்தான் என்று கூறி வெளியேறினால் அது sportsmanship. விளையாட்டு தொடங்கும்போது எதிரணியினரைச் சேர்ந்தவர்களுக்குக் கை கொடுத்து All the best சொல்வது கூட sportsmanshipதான்.

Gamesmanship என்ற வார்த்தை பிரிட்டிஷ் நகைச்சுவை எழுத்தாளர் ஸ்டீபன் பாட்டரால் உருவாக்கப்பட்டது. இது Sportsmanship என்பதற்கு நேரெதிரானது. குள்ளநரித்தனமாக எதிர்பாராத விதத்தில் நடந்துகொண்டு அதன் மூலம் வெற்றி பெறும் போக்கை Gamesmanship என்பார்கள்.

Bodyline என்கிற உத்திகூட Gamesmaship-தான். இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் 1932-33-ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் சில பந்து வீச்சாளர்கள் பந்தை ஷாட் பிட்ச்சாக வீசி பேட்ஸ்மேனுக்கு கிலி உண்டாக்கி, அவரை நிதானமற்று பேட் செய்ய வைத்து அவுட் ஆக்கும் போக்கைக் கடைப்பிடித்தார்கள். இது Gamesmanship.

**************

Straighten up என்றால் என்ன? ஒன்றை நிமிர்த்துவதா அல்லது பிரச்சினைகளைச் சரி செய்வதா?

நேராக்குவது என்ற பொருளில் straighten என்பது பயன்படுத்தப்படுகிறது. I helped him straighten his tie.

Straighten up என்றால ஓர் இடத்தைச் சுத்தமாக வைப்பது என்று பொருள்.

**************

Stirrups, reins, bridle ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்ன எனக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Stirrup என்றால் குதிரையில் சவாரி செய்யும்போது பாதங்களை வைத்துக்கொள்ள உதவும் பகுதி. இது பெரும்பாலும் உலோகத்தில் செய்யப்பட்ட வளையமாக இருக்கும். இப்படிப் பாதங்களை வைத்துக்கொள்வதால் உறுதியாக அமர்ந்துகொள்ள முடியும். குதிரையை வேகமாகச் செலுத்தவும் இது உதவுகிறது.

Bridle என்றால் கடிவாள வடம். Reins என்றால் கடிவாளம். இதை லகான் என்றும் கூறுவார்கள்.

இந்த இடத்தில் bridal என்பதற்கான ஒரு சிறு விளக்கத்தையும் அளித்தல் பொருத்தமாக இருக்கும். Bride என்றால் மணமகள் Bridegroom என்றால் மணமகன். Bridal makeup என்பது மணமகளுக்கான ஒப்பனை. ஆனால், bridal என்பது பெரும்பாலும் ‘மணமகளுக்குரிய’ என்பதை மட்டுமே குறிக்கிறது என்றாலும் அந்த வார்த்தை ‘சமீபத்தில் திருமணமான ஜோடி தொடர்பான’ என்பதையும் குறிக்கக்கூடியது. The bridal party was cancelled.

**************

Encoding என்பதற்கும், decoding என்பதற்கும் விளக்கம் கோருகிறார் ஒரு வாசகர்.

ஒரு தகவலை எந்த விதத்தில் அளிக்கிறோம் என்பது encoding. அதை எந்த விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது decoding. இரண்டும் சரியாக இருக்கும்போது தகவல் பரிமாற்றம் சிறப்பாக இருக்கும். ஒரு எழுத்தாளர், ஒரு வாசகர் என்கிற கோணத்தில் இதை மனதில் கொண்டால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

கணினிகளைப் பொறுத்தவரை கேரக்டர்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் உட்செலுத்துவதை encoding என்பார்கள். இவை எழுத்து, எண், நிறுத்தக்குறி, வேறு ஏதாவது குறியீடு போன்ற எதுவாகவும் இருக்கலாம். Decoding என்பது இதற்கு எதிரான செயல்முறை. Encoding செய்யப்பட்டுவந்த தகவல் அதன் மூல வடிவத்துக்கு மாற்றுவது.

எதிராளி பேசுகிறார். அவர் தனது பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறீர்கள். உங்கள் விரல்களை எடுத்து உங்கள் வாயின்மீது வைத்துக்கொள்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலம் அவர் தன் பேச்சை நிறுத்திக்கொள்வார் என எண்ணுகிறீர்கள். உங்கள் செய்கை encoding.

ஆனால், தான் கூறிய தகவல்களைக் கேட்டு நீங்கள் வியப்பில் வாயடைத்து விட்டதாகவோ அல்லது ஒரு மாணவன்போல பவ்யத்துடன் அவர் கூறுவதை நீங்கள் கேட்பதாகவோ அவர் புரிந்துகொண்டால் உங்கள் encoding-ஐ அவர் வேறுவிதமாக decoding செய்துவிட்டார். எனவே அவர் பேச்சை நிறுத்திக்கொள்ள மாட்டார்.

**************

“Call spade a spade” என்பதன் பொருள் என்ன?

உள்ளதை உள்ளபடிச் சொல்வது என்று பொருள். அதாவது பிறர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று மிகவும் வெளிப்படையாக இருப்பது. பல விளம்பரங்களில் “We call spade a spade” என்ற வாசகத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அடிமைகள் முறை பரவலாக இருந்த நாடுகளில் spade என்பது கறுப்பின மக்களைக் குறிக்கவும் பயன்பட்டது.

**************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The tsunami was a -----------. It killed thousands of people.

a) terrible

b) catastrophe

c) occasion

d) phenomenon

e) boon

f) interference

Tsunami என்பது ஒரு வரமாக இருக்க முடியாது. எனவே boon என்ற விடை தவறு.

Interference என்றால் குறுக்கீடு. அது அவ்வளவாகப் பொருந்தவில்லை. Occasion என்றால் நேரம் என்பது போன்ற அர்த்தம் (right occasion என்றால் சரியான நேரம்). அதுவும் இங்கே பொருந்தவில்லை. Tsunami என்பது கொடுமையானதுதான். Terrible ஆனதுதான். ஆனால், Tsunami was என்பதைத் தொடர்ந்து a என்ற வார்த்தை இருக்கிறது. எனவே terrible என்பதும் சரியல்ல.

மீதமிருக்கும் இரண்டு வார்த்தைகள் phenomenon, catastrophe. Phenomenon என்றால் நிகழ்வு. Catastrophe என்றால் பேரழிவு. பேரழிவு என்ற வார்த்தை இங்கே அதிகம் பொருந்துகிறது.

எனவே The tsunami was a catastrophe. It killed thousands of people என்பதுதான் சரியான வாக்கியம்.

சிப்ஸ்

# Opposition party members jeered என்று அடிக்கடி ஆங்கில நாளிதழ்களில் குறிப்பிடுகிறார்களே, jeer என்றால் என்ன?

உரத்த குரலில் சத்தம் எழுப்புவது, எதிராளியின் பேச்சைக் கிண்டலடிப்பது.

# Efface என்றால்?

ஒன்றை அழித்துவிடுதல். பென்சிலில் எழுதியதை அழிப்பதைப்போல. இந்த வார்த்தையை இஃபேஸ் என்று உச்சரிக்க வேண்டும்.

# Veteran actor என்றால்?

முதுபெரும் நடிகர்.

 

ஆங்கிலம் அறிவோமே 198-வது பகுதியில் வெளியான போட்டிக்கான விடைகள்

1. மதுவகம், லாபம் - Bargain

2. விளம்பரம் என்பதன் சுருக்கம், தேர்ந்தெடுத்தல் - Adopt

3. வலை, வேலை - Network

4. இறக்குமதி, எறும்பு - Important

5. உரிமையாளர், கப்பல் - Ownership

6. வாழ்க்கை, பாணி - Lifestyle

7. ஒளி, வீடு - Lighthouse

8. ஒருவரைத் தவறாக நம்பவைத்து பணத்தைக் களவாடும் முயற்சி, தாற்காலிகமாக - Contemporarily

9. குல்லாய், அளவு - Capsize

10. ஒன்றுக்கு ஆதரவான, குழாய்கள் - Products

11. எப்படி, எப்போதும் - However

12. வெற்றி, துறைமுகம் - Passport

மேலே உள்ளபடி அமைத்தால் மட்டுமே 12 வார்த்தைகள் உருவாகும்.

சிலர் How much, success formula, temporary home, import harbour என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். இருவார்த்தைகள் கொண்ட விடைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அத்தனை (11) விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்த ஒரே வாசகர்

வி.செல்வி, செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்

10 விடைகளைக் கண்டுபிடித்த வாசகர்கள்

  • செண்பகம், எஸ்., திருச்சி 11
  • என்.ஸ்வாமிநாதன், வழக்கறிஞர், கோயம்புத்தூர்

ஒன்பது விடைகளைக் கண்டுபிடித்த வாசகர் – பி.ஷெர்ஃபுதீன், கொண்டூர், கடலூர்

எட்டு வார்த்தைகளைக் கண்டுபிடித்தவர்கள்

  • கார்த்திகா ராமச்சந்திரன்,
  • மரவணேரி, சேலம்.
  • செல்வராணி ரவிச்சந்திரன்
  • ஜனனி,சி., தாம்பரம்
  • சுமதி, சேலம்
  • சிவசண்முகம், ஒன்பதாம் வகுப்பு,
  • SVISSS, கோபி.
  • நளினாதேவி பாண்டியன்,
  • பெரும்பாக்கம், சென்னை

வாழ்த்துகள் வாசகர்களே!

 

தொடர்புக்கு:- aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x