Published : 16 Jan 2018 11:46 AM
Last Updated : 16 Jan 2018 11:46 AM

தொழில் தொடங்கலாம் வாங்க 48: வாடிக்கையாளர்தான் உண்மையான சொத்து!

தற்போது நகரத்தில் வசித்துவருகிறேன். என்னிடம் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதனால், மீண்டும் சொந்த கிராமத்துக்குச் சென்று இன்னும் நிலத்தில் முதலீடு செய்து அங்கே தங்கித் தொழில் செய்ய நினைக்கிறேன். இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாகச் செய்ய முடியுமா?

- சேதுபதி, போடி நாயக்கனூர்.

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பண்டங்களையும் ரசாயனக் கலப்பில்லாமல் இயற்கை முறையில் தயாரித்து விற்க ஒரு மாபெரும் சந்தை உருவாகிவருகிறது. ஆகையால் நீங்கள் விளைவிக்கும் பயிர்கள் அனைத்தும் ரசாயனக் கலப்பில்லாமல் தயாரிக்கப்படுகின்றன என்பதைத் தொடர்ந்து நிரூபிப்பதன் மூலம்தான் உங்களுக்கான சந்தையை ஏற்படுத்த முடியும். அதற்குத் தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்குள் பெரிய நிறுவனங்கள் இன்னும் நுழையவில்லை. தற்போதுள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, பழங்கள் என அனைத்தையும் உற்பத்தி செய்து விற்கலாம். நகரத்தில் சந்தைப்படுத்துதலில்தான் உங்கள் வெற்றி உள்ளது. பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிவரும். நிறைய கற்றுக்கொள்ள நேரிடும். எதிர்பாராத நஷ்டங்கள் வரலாம். ஆனால், சில ஆண்டுகள் தாக்குப்பிடித்து இதை விஞ்ஞான முறையில் லாபகரமாகச் செய்ய ஆரம்பித்தால் உங்களோடு இணையப் பல முதலீட்டாளர்கள் தானாக வருவார்கள். இரண்டு ஏக்கரில் தொடங்கும் உங்கள் பயணம் இருநூறு ஏக்கர்வரை பெருகலாம். என்னைப் பொறுத்தவரை இயற்கைவழி விவசாயம் தொழில் மட்டுமல்ல, நம் பூமியையும் காப்பாற்றிக்கொள்ள நாம் செய்ய வேண்டிய தொண்டு. வாழ்த்துகள்!

டூரிஸ்ட் கேப் நிறுவனம் நடத்திவருகிறேன். தற்போது எட்டு கார்கள் வைத்திருக்கிறேன். ஓட்டுநர் கிடைப்பது சிக்கலாக உள்ளது. நானும் வண்டி ஓட்டுவதால் வேலைப்பளு மட்டுமின்றி மன அழுத்தமும் அதிகமாக உள்ளது. குறைந்த கட்டணம் வாங்கியும் எனக்குக் கிராக்கி இல்லை. வண்டிகளுக்கு வட்டி கட்டிவிட்டு, போணியாகாமல் நிற்பது வேதனையாக உள்ளது. என்ன செய்தால் பிசினஸ் கிடைக்கும்?

- சிவமணி, சென்னை.

உங்கள் தொழில் முழுக்க முழுக்க வாடிக்கையாளர் சேவையை நம்பி உள்ளது. ஆகையால், வாடிக்கையாளர்கள் உங்களை நாடி வரவைக்கக் கட்டணம் மட்டும் குறைவாக இருந்தால்போதும். கேட்ட நேரத்தில் கார் கிடைக்க வேண்டும். வண்டி இல்லை என்று ஒருமுறை சொன்னால்கூட அந்த வாடிக்கையாளரை நீங்கள் இழந்துவிடுவீர்கள். அடுத்து, வண்டியும் ஓட்டுநரும் தரமான பயணத்தை அளிக்க வேண்டும். திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக உங்களுடைய தொழில் உறுதிபெறும்.

சென்னை விமான நிலையத்துக்கு வெளியில் ஏராளமான டாக்சி கம்பெனிகள் இயங்குகின்றன. இவை தவிர ஸ்மார்ட்ஃபோன் ஆப் மூலம் அழைத்துப் பதிவுசெய்யும் கம்பெனிகளும் உண்டு. உதாரணத்துக்கு, விமான நிலையத்தில் இருந்து கோட்டூர்புரம் செல்ல ரூ. 450 முதல் ரூ. 750 வரை பல கார்கள் பல விதமான கட்டணங்கள் வசூலிக்கின்றன. இவற்றில் மிகக் குறைந்தவை ப்ரீ பெய்டு கறுப்பு கார்கள்.

அப்படி இருந்தும், சற்று அதிகம் கொடுத்துப் பிற சேவைகளை நாடுவது ஏன்? என் அனுபவம் இதுதான். நாம் வண்டியில் ஏறியதும் ஓட்டுநருடன் சக ஓட்டுநர் ஒருவர் வழியில் இறங்கிக்கொள்வதாகச் சொல்லி ஏறி தொண தொணவென்று பேசிக்கொண்டே வருவார்கள். குறைந்த கட்டணம் என்பதால் வண்டி சுமார் என்றாலும் பொறுத்துப் போகும் வாடிக்கையாளர்கள் உண்டு. ஆனால், ரூ.100 அதிகமாகக் கொடுத்தாலும் மரியாதையுடன் கூடிய கவனிப்பு, சவுகரியம் தனியாகச் செல்லும்போதுதான் கிடைக்கிறது. இதனால்தான் மிகக் குறைந்த கட்டணம் வசூலித்து அவர்கள் வாடிக்கையாளர்களை மேலே குறிப்பிட்ட வகையினர் இழக்கிறார்கள்.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் மிகச் சிறந்த பயண அனுபவத்தை தருகிறீர்களா? ஓர் ஓட்டுநராக இல்லாமல் முதலாளியாக யோசித்துப் பாருங்கள் உங்களுக்குப் புரியும்!

25ஆண்டுகளுக்கும் மேலாக மளிகைக் கடை நடத்திவருகிறேன். நானும் என் தம்பியும் கடையைப் பார்த்துக்கொள்கிறோம். ஆரம்பத்தில் வியாபாரம் களைகட்டியது. இப்போது கடும் போட்டி வந்துவிட்டது. தவிர, என் சொந்தச் செலவுக்கு (மனைவிக்கு உடல்நலக் குறைவு, வீட்டுப் பராமரிப்பு, மகள் திருமணம் , மகன் அட்மிஷன் ) என்று நிறைய கடன் வாங்கிவிட்டேன்.

இதனால், வரவு முழுவதும் செலவாகிவிடுகிறது. கடை நன்றாக நடந்தும் கையில் பணம் நிற்பதில்லை. முன்புபோலக் கடையிலும் தலைமை இல்லை. தம்பியிடம் கடையை விற்றுவிட்டு வேறு ஏதாவது சின்னத் தொழில் செய்யலாமா? வட்டிக்கான தொகையைக் கட்டுவதற்கே சிரமமாக உள்ள நிலையில் எந்தப் புதிய தொழில் தொடங்கலாம் என்றும் தெரியவில்லை குழப்பமாக உள்ளது.

- தமிழ்செல்வன், மதுரை.

தொழில் கணக்கும் குடும்பக் கணக்கும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பது எல்லாத் தொழில் முனைவோருக்குமான மனப்பாடப் பகுதி. முதலில் சின்ன ரொட்டேசன் என்று ஆரம்பிப்பது கடைசியில் புலிவால் பிடித்த கதையாகிவிடும். என்றுமே வியாபாரத்தில் வரும் லாபத்தை முழுவதுமாகக் குடும்பத்துக்குச் செலவு செய்யாதீர்கள்.

சொத்து ஏதாவது இருக்கும்பட்சத்தில் அதை விற்றாவது கடனிலிருந்து விடுபடுங்கள். கடையை விற்காதீர்கள். நிதிச்சுமை இல்லாதபோது கடையை இன்னுமும் தற்காலத் தேவைகேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 25 ஆண்டுகள் கடைத் தொழில் அனுபவம். இத்தனை வருடங்களாக உங்களிடம் உள்ள வாடிக்கையாளர்கள்தாம் உங்களுடைய உண்மையான சொத்து. அதை உணருங்கள்.

தொழில்தான் சிறந்த மூலதனம். அதை உணர்ந்தவர்கள் வேறொன்றில் முதலீடு செய்ய மாட்டார்கள். கோடிக்கணக்கில் பிசினஸ் செய்யும் பல வட இந்தியர்களைப் பாருங்கள் வாடகை வீட்டில்தான் வசிப்பார்கள், சாதாரணச் சின்ன கார்தான் வைத்திருப்பார்கள். அவர்கள் நேரம், பணம் அனைத்தும் தொழிலுக்கு மட்டும் அளிப்பார்கள். பலர் கூட்டுக் குடும்பமாக வசிப்பதால் அவர்களுக்கு அது கூடுதல் பலமும்கூட.

‘தொழில் தொடங்கலாம் வாங்க!’

கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன் வாசகர்கள் தங்களுடைய தொழில் முயற்சிகள் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x