Last Updated : 02 Jan, 2018 01:00 PM

 

Published : 02 Jan 2018 01:00 PM
Last Updated : 02 Jan 2018 01:00 PM

ஆங்கிலம் அறிவோமே 194: இதற்கெல்லாம் யார் சிரிப்பா?

கேட்டாரே ஒரு கேள்வி

On second thought என்கிறோமே அது எப்போதும் முதல் முடிவுக்கு எதிராகத்தான் இருக்குமா?

Prosthesis என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

செயற்கை மூட்டு, ஜெய்ப்பூர் கால் இப்படி உடலில் பொருத்தப்பட்ட செயற்கை உறுப்பு அல்லது பொருள் எதுவாக இருந்தாலும் அது prosthesisதான்.

கிரேக்க மொழியில் pros என்றால் ‘கூடுதலாக’. Tithenai என்றால் வைப்பது. இந்த இரண்டும் இணைந்ததுதான் ஆங்கிலத்தில் prosthesis என்று அழைக்கப்படுகிறது. இதை ‘ப்ரோஸ்தேஸிஸ்’ என்று அழைக்க வேண்டும்.

When the baby was born with a hand missing two fingers, the couple decided to look into a prosthesis.

english 2jpg100 

“Relief என்ற வார்த்தையைச் சில இடங்களில் பயன்படுத்தி இருப்பதைப் பார்த்தால் குழப்பமாக இருக்கிறதே” என்று தவிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஒரு வாசகர்.

நியாயம்தான். இதற்குக் காரணம் பல்வேறு அர்த்தங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதுதான்.

அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதை relief என்று கூறலாம். After the maths examination, I felt a sense of relief. “I will not come to your house today” என்று உங்கள் நண்பர் கூறுகிறார். பதிலுக்குக் கிண்டலாக “What a relief!” என்று நீங்கள் கூறலாம். தலை வலிக்கிறது. அதற்கான தைலத்தைத் தடவிய பிறகு வலி குறைகிறது “That’s a real relief” என்று நீங்கள் கூறலாம்.

தேவைப்படுபவர்களுக்கு உணவு, பணம் அல்லது சேவைகளின் மூலம் உதவுவதையும் relief என்பார்கள். We should raise a few crores of rupees for the famine relief. This is an international relief operation.

கட்டுமானத் துறையில் relief என்பதற்கு வேறு அர்த்தங்கள் உண்டு. சுவரின் தட்டையான பரப்பில் சில உருவங்களைச் செதுக்குகிறார்கள். அந்த உருவங்கள் சுவரிலிருந்து கொஞ்சம் மேலெழும்பி இருப்பதுபோல் தோற்றமளிக்கின்றன. இதுபோன்றவற்றையும் relief என்பார்கள். Coins have pictures on them in relief. In Egyptian temple designs, incised relief was used on the exterior walls (Incise என்றால் வெட்டுதல் அல்லது செதுக்குதல்).

பணியில் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் அமர்த்தப்பட்டதற்கும் relief என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். The relief doctor was punctual என்றால் வழக்கமாக வரும் டாக்டருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட, அந்த மாற்று டாக்டர் சரியாக நேரத்தைக் கடைப்பிடிக்கிறார் என்று பொருள்.

***********************

Though – Although

Though என்றாலும் although என்றாலும் ஒன்றுதானா?

ஒன்றுதான். Everyone enjoyed the trip though the weather was unpleasant. மேற்படி வாக்கியத்தில் though என்பதற்குப் பதிலாக although என்பதையும் பயன்படுத்தலாம்.

பேச்சுவாக்கில் though என்பதைத்தான் பயன்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் கருத்தை அழுத்தமாகச் சொல்லும் வகையில் even though என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

என்றாலும் பேசும்போது, ‘however’ என்ற அர்த்தத்தில் though என்பதைப் பயன்படுத்துகிறோம். கீழே உள்ள உரையாடலைக் கவனியுங்கள்.

“You have four hours in the railway station between the two train journeys”.

“I don’t mind though”.

“Your train journeys are very long”.

“They are pleasant, though”.

கடைசி வாக்கியத்தை “However they are nice” என்றும் கூறலாம்.

***********************

‘கேட்டாரே ஒரு கேள்விக்கு’ வருவோம். Have second thought என்றால்? ஒன்றைப் பற்றிய உங்கள் கருத்தை மாற்றிக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கும் கருத்தில் உங்களுக்குச் சந்தேகம் உண்டாகியிருக்கிறது என்று அர்த்தம்.

“Can I have a cup of tea?” என்று கேட்டுவிட்டு சில நொடிகளிலேயே “on second thought I feel like having a cup of coffee” என்று நீங்கள் கூறலாம். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது ‘second thought’ அல்லது ‘have second thought’ என்பவை மாறுபடும், எதிரான முடிவுகளைத்தான் குறிக்கின்றன.

Second என்று இடம்பெறும் வேறு சில phrases/idioms-ஐப் பார்ப்போம்.

“She is second to none” என்றால் அவர் மற்ற அனைவரையும்விட உயர்வானவர் அல்லது குறைந்தபட்சம் யாருக்கும் குறைந்தவர் அல்ல என்று அர்த்தம்.

Second nature என்றால் ஒன்றில் மிகத் திறமைசாலியாக இருந்து அத்துறையில் சிரமப்படாமலேயே எளிதாக அனைத்தையும் செய்வது. Once I could not operate a computer. But using a computer is second nature to me now.

***********************

“He is a wet blanket என்று ஒருவரைப் பற்றி அலுவலகத்தில் குறிப்பிட்டார்கள். அப்படியென்றால் என்ன?

ஒருவரைப் பற்றி Wet blanket என்று குறிப்பிட்டால் அவரைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் ஒன்றை வைக்கிறீர்கள்.

எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் மட்டும் மிகவும் சோகமாக இருப்பார். எந்த நகைச்சுவைக்கும் சிரிக்காமல் “இதையெல்லாம் நகைச்சுவையாகவே என்னால் எடுத்துக்க முடியல்லே” என்பார். இப்படிப்பட்டவர்கள் இருந்தால் அந்த இடத்தின் கலகலப்பே குறைந்துபோகும். இப்படிப்பட்டவரை Wet blanket என்பார்கள்.

I hope he does not come to the party – he is such a wet blanket.

இப்படி அழைப்பதற்கு ஒரு பின்னணி உண்டு. அமெரிக்காவிலுள்ள பழங்குடியினர் தீமூட்டி அதைச் சுற்றி ஆடல், பாடல்களில் ஈடுபடுவார்கள். (Campfire!). கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு பெரிய போர்வைகளையும் கம்பளங்களையும் அருகிலுள்ள நதியில் நனைத்து எடுத்து வந்து அதைத் தீயின் மீது வீசி எறிந்து மூடுவதன் மூலம் அந்தத் தீயை அணைப்பார்கள். தீ அணைவது என்பது கொண்டாட்டம் ஒரு முடிவுக்கு வந்ததைக் குறிக்கிறது. இதேபோல உற்சாகத்தைக் குலைக்கும் வகையில் நடந்துகொள்பவர்களை wet blanket என்கிறார்கள்.

***********************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The passengers __________ queue at the booking counter much before a train arrives.

(a) Have queued

(b) Form

(c) Have forming

(d) Forms

(e) Forming

“ஒரு ரயில் வண்டி வந்து சேர்வதற்கு வெகு முன்பாகவே பயணச் சீட்டு விற்குமிடத்தில் பயணிகள் வரிசையில் நிற்கத் தொடங்குவார்கள்” என்பதுதான் மேற்படி வாக்கியத்தின் பொருள்.

Have queued என்பது முன்பே நடந்துவிட்ட ஒன்றைக் குறிக்கிறது. ஆனால் வாக்கியத்தில் இப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம்தான் புலப்படுகிறது. எனவே have queued என்பது தவறு. தவிர have queued queued என்று வராது.

Passengers என்பது plural. Present tense-ல் passengers என்பதைக் குறிக்கும் வார்த்தை form என்பதுதாகத்தான் இருக்க முடியும். Forms அல்ல.

Have forming என்பது தவறான பயன்பாடு. Have been forming என்று வேண்டுமானால் இருக்கலாம்.

இதே அடிப்படையில் forming என்று இருப்பதும் தவறுதான். Are forming என்று இருந்திருந்தால் அது சரியானது!

ஆக அளிக்கப்பட்டிருக்கும் ஐந்து வார்த்தைகளில் அதிகப் பொருத்தமாக உள்ள விடை form என்பதுதான். The passengers form queue at the booking counter much before a train arrives.

சிப்ஸ்

லண்டன் ரயிலில் Still Water, Fizzy Water என்று இருவித பாட்டில்களைக் கண்டேன். Fizzy Water என்றால் மதுவா?

மதுவோடு கலக்கப்படுவது! Still Water = குடிநீர். Fizzy Water = சோடா. Fizzy என்றால் கார்பன் டை ஆக்சைடு நிரப்பப்பட்டது என்று பொருள்.

Cartographer என்றால் என்ன?

உலக வரைபடங்களை உருவாக்குபவர்.

Invite என்பது verbதானே?

Invitation என்பதற்குச் சமமான noun வார்த்தையாகவும் invite பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x