Published : 12 Dec 2017 03:24 PM
Last Updated : 12 Dec 2017 03:24 PM

விடைபெறும் 2017: தேசிய நிகழ்வுகள்

இந்த ஆண்டு தேசிய அளவில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் தொகுப்பு.

கல்விக்கான மத்திய பட்ஜெட்!

2017-18 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைப் பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்செய்தார். இந்தியாவின் 87-வது பட்ஜெட்டான இதில் முதன்முறையாகப் பொதுப் பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டது. அதேபோல் திட்டமிடப்பட்ட செலவுகள், திட்டமிடப்படாத செலவுகள் என்று பிரிக்கப்படாமல் அமைச்சகங்களின் மொத்தச் செலவினக் கணக்கு அறிவிக்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டைப் பொறுத்தவரை கல்வித் துறைக்கு 2016-ம் ஆண்டைவிடவும் 10 சதவீதம் கூடுதல் நிதி இம்முறை ஒதுக்கப்பட்டது. ஒ

ட்டுமொத்தமாகக் கல்வித் துறைக்கு ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. சர்வ சிக்ஷா அபியானுக்கு ரூ.1,000 கோடி, ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷ்யா அபியான், ஆசிரியர் பயிற்சி மற்றும் மேல்நிலைக் கல்விக்கு ரூ.305 கோடி எனக் கடந்த ஆண்டைவிடவும் கூடுதலாக ஒதுக்கப்பட்டன. ஆனால், மதிய உணவுத் திட்டத்துக்குக் கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை 8 சதவீதப் பள்ளிகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.

ஊரகப் பள்ளிக் கல்வியில் புதுமையைப் புகுத்தத் தனி நிதி ஒதுக்கீடு, வேலைச்சந்தை எதிர்பார்க்கும் திறன்களை 3.5 கோடி இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்க ‘சங்கல்ப்’ திட்டத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, 5 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்குக் கட்டிடப் பணி தொடர்பான பயிற்சிகளை 2022-க்குள் அளிப்பதற்கான திட்டம், ஐ.சி.டி. எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலமாக அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கற்றல் முறையை அறிமுகப்படுத்துதல் போன்ற திட்டங்கள் நம்பிக்கை அளிக்கும்விதமாக முன்வைக்கப்பட்டன.

தற்கொலை முயற்சி குற்றமில்லை: மனநல மசோதா

மனநல ஆரோக்கிய பாதுகாப்பு மசோதா 2016 மார்ச் 27 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 1987-ம் ஆண்டின் மனநல ஆரோக்கிய பாதுகாப்புச் சட்டத்தின்படி தற்கொலை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. அதை மாற்றும் விதமாக, ‘தற்கொலை முயற்சி குற்றமில்லை’ என்று இந்த மசோதாவில் தீர்மானிக்கப்பட்டது. கடுமையான மன உளைச்சலால் தற்கொலைக்கு ஒருவர் தள்ளப்படுவதால் கைது, தண்டனை ஆகியவற்றை இனி தற்கொலை முயற்சிசெய்தவர்களுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக, தன்னுடைய மனநல ஆரோக்கியத்துக்கான சிகிச்சை குறித்த முடிவெடுக்கும் உரிமை பாதிக்கப்பட்ட நபருக்கு உள்ளது என முதன்முறையாகத் திட்டவட்டமாக இதில் கூறப்பட்டது.

79-வது ஊழல் நாடு

சிறப்பாக வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலை அக்டோபர் 31 அன்று உலக வங்கி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 130-வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 100-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. தெற்காசிய மற்றும் பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா மட்டுமே இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு 27 ஆயிரத்து 600 கோடி டாலர்களுக்குப் பல்வேறு பொருள்களை ஏற்றுமதி செய்தது இந்தியா. அவற்றில் 3 ஆயிரத்து 300 கோடி டாலர்களுக்கு வேளாண் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில் உலக அளவில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் 7-வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. ஊறுகாய், சட்னி வகைகள், தேன், காய்-கனிகள் முதலான பல்வேறு இந்திய உணவுப் பண்டங்கள் வியட்னாம், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, அமெரிக்கா, ஈரான், ஈராக், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதிசெய்யப்படுகிறது.

வர்த்தகத்திலும் ஏற்றுமதியிலும் ஏறுமுகம் கண்டுவரும் இந்தியா ஊழலில் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? 2016-ம் ஆண்டின் ஊழல் மலிந்து கிடக்கும் நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனம் ஜனவரி 25 அன்று வெளியிட்டது. 176 நாடுகளின் பொதுத் துறை நிர்வாகத்தில் மலிந்துகிடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்திய இந்த ஆய்வில் ஊழல் அற்ற நாடாக டென்மார்க் அறியப்பட்டது. ஊழலின் உச்சமாகச் சோமாலியா இருப்பது தெரியவந்தது. 79-வது இடத்தில் இந்தியா ஊழலில் உழலுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே ஆறுதல் கடந்த ஆண்டைவிட தற்போது 3 படி இந்தியா உயர்ந்துள்ளது!

இஸ்ரோவின் உலக சாதனை!

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 104 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி – 37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பிப்ரவரி 15 அன்று உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐ.என்.எஸ்.-1-ஏ, ஐ.என்.எஸ்.-1-பி ஆகிய 2 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 5 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக்கோள்கள் என 104 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இதன்மூலம், இதுவரை அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ஏவி உலக சாதனை படைத்திருந்த ரஷ்யாவின் சாதனையை இந்தியா முறியடித்தது. சாதனைகள் மென்மேலும் தொடர பி.எஸ்.எல்.வி.சி-38 ஜூன் 23 அன்று 31 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்டது.

ஆதாருக்கு மவுனம், அந்தரங்க உரிமைக்கு உத்திரவாதம்!

இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) என்ற அமைப்பின் கீழ் 2009-ல் தொடங்கிய ஆதார் அட்டைத் திட்டத்தில் 2017 செப்டம்பருக்குள் 114 கோடி இந்தியர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் பொருளாதாரத் தலைவர் பால் ரோமர் ‘உலகின் அதிநவீன அடையாளம் காணும் முறை ஆதார்’ என்று குறிப்பிட்டார். இருந்தாலும், தனிநபர் அந்தரங்கம், கண்காணிப்பு, நலத் திட்டங்களை மறுப்பதற்கான முகாந்தரம் என்ற அடிப்படையில் ஆதார் தொடர்பான பிரச்சினைகளும் சச்சரவுகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் மத்திய அரசு, நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் சாசனச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 24 அன்று தீர்ப்பளித்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தனிநபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஆனால், ஆதார் பிரச்சினையை 2015-ம் ஆண்டிலிருந்து உச்ச நீதிமன்றத் தனி அமர்வு விசாரித்துக்கொண்டிருப்பதால், இந்த அமர்வு ஆதார் பிரச்சினையை நேரடியாகப் பேசவில்லை.

70 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் இடம்பெயர்ந்தவர்கள் 1.4 கோடிப் பேர். அவர்களில் பலரின் அடையாள அட்டைகள், ஆடைகள், கலைப் படைப்புகள் உள்ளடக்கிய இந்தியாவின் முதல் பிரிவினை அருங்காட்சியகம் அமிர்தசரஸில் ஆகஸ்ட் 17 அன்று திறக்கப்பட்டது.

ஒடிசா புரி கடற்கரையில், 48.8 அடிகளில் உலகில் மிக உயரமான மணல் கோட்டையை பிப்ரவரி 10 அன்று உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்தார் இந்திய மணல் ஓவியக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

இந்திய மாநிலங்களின் அடிப்படை உள்கட்டமைப்பு, மனித வளர்ச்சிக்கான ஊக்கம், சமூகப் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, நீதி வழங்குதல், பொருளாதாரச் சுதந்திரம், சுற்றுச்சூழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றல் உள்ளிட்ட கருப்பொருள்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பொதுத்துறை விவகாரத் தரவரிசைப் பட்டியலில் கேரளா முதலிடத்தையும் தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம் என்ற அந்தஸ்தை அகமதாபாத்துக்கு யுனெஸ்கோ செப்டம்பர் 1 அன்று வழங்கியது.

188 நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் 131-வது இடத்தில் இந்தியா உள்ளது. அதைத் தொடர்ந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 122-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.மனிதவள மேம்பாட்டிலும் மகிழ்ச்சியிலும் உலக அளவில் முதலிடத்தில் நார்வே இருக்கிறது.

10CH_RamNathKovind ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும்

குடியரசுத் தலைவர் தேர்தலில் கிட்டத்தட்ட 65 சதவீத வாக்குகள் பெற்று ஜூலை 25 அன்று இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவரானார் பா.ஜ.க.ஆதரவு பெற்ற ராம்நாத் கோவிந்த். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் மீரா குமார் 34 சதவீத வாக்குகளைப் பெற்றார். இதை அடுத்து, ஆகஸ்ட் 11 அன்று நாட்டின் 15-வது துணைக் குடியரசுத் தலைவராக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்ய நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியைவிடவும் கூடுதல் வாக்குகள் பெற்று வெங்கைய்ய நாயுடு வெற்றிபெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x