Published : 28 Nov 2017 12:20 PM
Last Updated : 28 Nov 2017 12:20 PM

தொழில் தொடங்கலாம் வாங்க 42: யாருக்குத் தண்டனை?

பல இளைஞர்களுக்குச் சொந்தமாகத் தொழில் செய்யும் ஆர்வம் உள்ளது. முன்பைவிட நம் குடும்பங்களும் தொழில் செய்ய ஆதரவாகவே உள்ளன. அரசாங்கமும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க சுயதொழில் வளர்ச்சியும் அவசியம் எனப் புரிந்து செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆனாலும், பெரும்பாலான தொழில் எண்ணங்கள் தொடக்க கட்டத்திலேயே துவண்டுவிடுகின்றன. குறிப்பாக மாணவர்களுக்குச் சரியான சூழல் வாய்ப்பதில்லை.

மற்ற மாணவர்களின் கதி?

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்டவை அடை காக்கும் அமைப்புகளைக் கொண்டு பல ஸ்டார்ட்-அப்களை வாழவைப்பது நிஜம்தான். ஆனால், மற்ற மாணவர்களின் கதி? எல்லாப் பொறியியல் கல்லூரிகளிலும் தொழில் முனைவோருக்கான மையம் உண்டு. அது பெரும்பாலும் ஈயாடிக்கொண்டுதான் இருக்கிறது. சில கல்லூரிகளில் வெளியுலகப் பேச்சாளர்களைக்கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி பிஸ்கட், டீயுடன் மங்களம் பாடிவிடுகிறார்கள்.

வெகு சில கல்லூரிகளில் மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி, ஆராய்ச்சிவாய்ப்புகள், தனிக் கவனம் எனச் சிறப்பாக நடத்திவருகிறார்கள். இந்தக் கட்டுரைத் தொடர் ஆரம்பித்தபோது, ஒரு கல்லூரி ஆசிரியர் என்னைத் தொடர்புகொண்டு மாணவர்களிடம் உரையாட அழைத்தார். இந்தத் தொழில் முனைவு அமைப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தரையில் போட்ட மீனாய்த் துடித்துக்கொண்டிருந்தார். சிறிதும் ஆர்வமோ ஈடுபாடோ இல்லாத தன்னை ஏன் இந்தப் பொறுப்பில் போட்டார்கள் என்று நொந்துபோயிருந்தார். “பனிஷ்மெண்ட் போஸ்டிங்போல சார்!” என்று குறிப்பிட்டார். யாருக்குத் தண்டனை?

புதிதாக யோசித்தால் பித்தனா?

பல கல்லூரிகளில் மாணவர்களின் தொழில் எண்ணத்துக்கு முதல் எதிரியே ஆசிரியர்கள்தாம். நல்ல மார்க் வாங்குவதும் டிகிரி முடிக்கும் முன் கேம்பஸில் நல்ல வேலைக்குப் போவதும்தான் ஒரு மாணவனுக்குக் கொடுக்கப்பட்ட வெற்றிக்கான அளவீடுகள். வகுப்பில் எந்தக் கேள்வியும் இன்றி அமைதியாக இருந்தால் நல்ல மாணவன் என்னும் நற்சான்றிதழும் கிடைக்கும். கேள்வி கேட்டல், புதிய சிந்தனை, சோதனை முயற்சிகள் யாவும் நிராகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சூழலில் சுயதொழில் எண்ணம் எப்படி ஊக்குவிக்கப்படும்?

கற்பிக்கப்பட்டதைத் தாண்டி மாணவர்கள் வெளியில் போய்ச் சிந்திக்கக் கூடாது என்னும் மனப்பான்மை இங்கு அதிகம். துறை மாற நினைத்தாலோ பொதுப்புத்திக்கு எதிராக ஒன்றைச் செய்ய நினைத்தாலே இங்கே பித்தனைப் போலப் பார்க்கிறார்கள். ஒருமுறை நான் பேசும்போது, விற்பனைத் துறையில் பொறியாளர்களுக்கு நிறைய தேவை இருக்கிறது என்றேன். விற்பனைத் திறன்களைப் பயிற்றுவித்தால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் வலியுறுத்தினேன்.

அந்தக் கல்லூரி நிர்வாகமும் அதற்கு அனுமதி அளித்து பயிற்சியைத் தொடங்கினேன். ஆனால், பயிற்சிக்கு வரும் மாணவர்களில் சிலரை அழைத்த ஆசிரியர்கள், “அவங்கதான் மார்க் கம்மி, அரியர்ஸ் வச்சிருக்காங்கன்னு சேல்ஸ் ஜாபுக்குப் போறாங்க. நீங்க கோர் ஏரியாவை விட்டுட்டு எதுக்குப் பையைத் தூக்கிட்டு சேல்ஸ் வேலைக்குப் போறீங்க?” என்று கேட்க மாணவர்கள் பலர் பின்வாங்கினார்கள்.

இணைந்து வளர்ப்போம்

எல்லாத் தொழிற்சாலைகளிலும் பெரும்பாலும் பொறியாளர்கள்தாம் விற்பனைப் பிரிவில் இருக்கிறார்கள். அவர்களில் பலர் எம்.பி.ஏ. படித்தாலும் அடிப்படையில் அவர்கள் பொறியாளர்கள்தாம். விற்பனை என்பது மனிதவளம்போல ஒரு வர்த்தகப் பிரிவு. அடிப்படைத் தகுதியுடன் சிறப்புப் படிப்பு அல்லது அனுபவம் மூலம் இங்கே செல்லலாம். இதுபோன்ற அடிப்படைத் தகவல் அறிவு இல்லாததால் பல ஆசிரியர்கள் தொழில் உலகம் பற்றித் தவறாகப் போதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்லியும் தவறில்லை. தொழில் உலக வேலை அனுபவம் உள்ளவர்கள் கல்வித் துறையில் குறைவுதானே!

இது இப்படி இருக்க, பாதிப் படிப்பில் தொழில் ஆரம்பிக்கிறேன் என்று ஒரு மாணவர் பேச ஆரம்பித்தால் ஆசிரியர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் வேண்டாம் என்று தடுக்கிறார்கள். தொழிலின் நிச்சயமின்மை பற்றிய பயமும் காரணமாக இருக்கலாம். தனக்குப் பரிச்சயமில்லாததை யாரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என்பதும் நிஜம்தான். இதை மாற்ற ஒரே வழி ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு தொழில் வல்லுநர் உதவியுடன் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும்.

நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் முதலில் பயிற்றுவிக்க வேண்டும். நல்ல முதலீடும் கட்டுமானமும் அவசியம். அந்த அமைப்பைக் கல்லூரி நிர்வாகம், மாணவர்கள், ஆசிரியர்கள், வெளி உலகத் தொழில் வல்லுநர்கள் என்று அனைவரும் இணைந்து வளர்க்க வேண்டும். மாணவர்களில் தொழில் முனைவு ஆர்வமும் திறனும் உள்ளவர்களை முதலில் அடையாளம் காண வேண்டும்.

தொடர்புக்கு:gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x