Last Updated : 21 Nov, 2017 10:46 AM

 

Published : 21 Nov 2017 10:46 AM
Last Updated : 21 Nov 2017 10:46 AM

ஆங்கிலம் அறிவோமே 187: கிண்டலா இல்லை காப்பியா?

கேட்டாரே ஒரு கேள்வி

வரலாற்றுப் பாடம் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு சந்தேகம் எழுந்தது. சிந்து சமவெளி நாகரிகம் என்பதை ஆங்கிலத்தில் Indus Valley Civilization என்கின்றனர். Valley என்ற சொல்லுக்குப் பள்ளத்தாக்கு என்று பொருள். ஆனால், தமிழில் சமவெளி என்று வருகிறது. இதில் எது சரியான பதிவு?

“‘The more the merrier’ என்பதை எதுபோன்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும்?” என்று கேட்கிறார் ஒரு வாசகர். 

நீங்களும் சில நண்பர்களும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குக் கிளம்புகிறீர்கள். அப்போது உங்களுக்குத் தெரிந்த மற்றொருவர் வருகிறார். “நானும் உங்களோடு வரலாமா?” என்று கேட்கிறார். “தாராளமாக வரலாம். நீங்களும் வருவதில் எங்களுக்குச் சந்தோஷம்தான்” என்பதற்குப் பதிலாக அதே அர்த்தம் கொண்ட “Sure, the more the merrier” என்று நீங்கள் கூறலாம். 

“Do you mind if three more persons attend your party?”, “Not at all – the more the merrier”.

ஆங்கில விளையாட்டு வர்ணனை ஒன்றைக் கேட்டபோது, ‘This culture of flipism’ என்று ஒருவர் கூறினார். அதென்ன flipism? 

பூவா, தலையா போட்டுப் பார்த்து முடிவெடுப்பதுதான் flipism.ஷோலே திரைப்படத்தில் flipism உத்தியைத் தந்திரமாகப் பயன்படுத்துவார் அமிதாப் பச்சன். ஆபத்தான சூழல்க​ளில் ஈடுபட வேண்டுமென்றால், “நாணயத்தை சுண்டிவிடுவோம். தலை விழுந்தால் இந்த ஆபத்தை நான் எதிர்கொள்வேன்” என்பார் நண்பர் தர்மேந்திராவிடம். அது இருபுறமும் தலை உள்ள நாணயம் என்பது அமிதாப் செத்த பிறகுதான் தெரியவரும். 

சிவாஜி திரைப்படத்தில் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கும் ரஜினி நாணயத்தைச் சுண்டிவிட்டு “தலை விழுந்தால் சிங்க வழி” என்பார். தலை விழும். விசில் எழும். இடைவேளை வரும். 

‘டொனால்ட் டக்’ என்ற வாத்து இடம் பெற்றுள்ள ஒரு புத்தகத்தில் பேராசிரியர் பட்டி என்பவர் பூவா, தலையா போட்டுப் பார்த்து ‘டொனால்டு டக்’ தன் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பார். ஆனால், அதன்படி நடந்து கொள்வதால் வாத்துக்குச் சிக்கல்கள்தாம் உண்டாகும். Flipism என்பது (சிலர் இதை flippism என்றும் எழுதுகிறார்கள்) பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் ஒரு முறை, பகுத்தறிவைப் பயன்படுத்தாத தவறான நிலைப்பாடு என்றெல்லாம் கருதப்படுகிறது. பின் எப்படித்தான் கிரிக்கெட்டில் எந்த அணி முதலில் பேட் செய்வது என்பதைத் தீர்மானிப்பதாம்?

வட கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான்வரை, கொஞ்சம் வடமேற்கு இந்தியாவும் இணைந்த பகுதிகளில்தாம் The Indus Valley Civilization தழைத்தோங்கியது. Valley என்பது குன்றுகள் அல்லது மலைகளுக்கு நடுவே அமைந்த பகுதி. அந்த மலைகளிலிருந்து வரும் ஆறு அந்தப் பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும். Indus valley என்பதும் இப்படித்தான். பரந்துபட்ட வெளிகளும் இந்த நாகரிகத்துக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன. ஆக, Indus Valley Civilization -க்குத் தமிழில் சிந்துவெளி நாகரிகம் என்பது பொருத்தமான வார்த்தைதான். 

Valley பற்றி பேசும்போது Volley நினைவுக்குவருகிறது. Volley என்றால் ஒரே நேரத்தில் வீசப்படும் குண்டுகள் அல்லது அம்புகள். Barrage என்பதை இதற்கு இணையான வார்த்தையாகச் சொல்லலாம். பலரும் பலவிதக் கேள்விக் கணைகளைத் தொடுக்கும்போது “Volley of questions” என்று கூறுவதுண்டு. கால்பந்து அல்லது டென்னிஸ் விளையாட்டுகளில் தரையைத் தொடுவதற்கு முன் பந்தை அடிப்பதை ‘volley’ என்பார்கள் - It was a forehand volley. 

***************

Parody என்றால் என்ன அர்த்தம்?

நண்பரே, ஒரு பாடலைக் கிண்டலாக மாற்றிப் பாடுவதுதான் தொடக்கத்தில் parody என்று கருதப்பட்டது. பின்னர், ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர் அல்லது நடிகரை காப்பியடித்து நகைச்சுவையாக எழுதுவது /பேசுவது parody என்றும் ஆகிவிட்டது. மிமிக்ரி மட்டுமே parody அல்ல. அதில் அவர் பேசுவதை அல்லது எழுதியதைக் கிண்டல் செய்வதாகவும் இருக்க வேண்டும். விவேக், சந்தானம் போன்றவர்கள் தங்கள் காட்சிகளில் பலரை parody செய்திருக்கிறார்கள். 

சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் உண்டு. 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

காதலர் இருவர், “நம் தாய் தந்தையர் வேறு வேறு என்றாலும் இன்று நிலத்தோடு பிரிக்க முடியாதபடி மழைநீர் சேர்த்துவிட்டதைப்போல நம் உள்ளங்கள் ஒன்றாகிவிட்டன’’ என்று கூறுகின்றனராம். 

கவிஞர் மீரா, ஊசிகள் என்ற நூலில் இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். 

உனக்கும் எனக்கும் ஒரே ஊர் - வாசுதேவ நல்லூர் ...

நீயும் நானும் ஒரே மதம்...

திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட,..

உன்றன் தந்தையும் என்றன் தந்தையும்

சொந்தக்காரர்கள்...மைத்துனன்மார்கள்.

எனவே

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.

இதில் அவர் சமூகத்தை parody செய்திருக்கிறார்.

***************

“நான் மார்க்கெட்டிங் மேனேஜர். சிலநேரம் வாடிக்கையாளர்களுக்குச் சரியான முறையில் சேவை செய்யாமல் இருந்துவிடுகிறேன். எங்கள் தவறைச் சுட்டிக் காட்டி வாடிக்கையாளர்களிடமிருந்து கடிதம் வரும்போது எதுபோன்ற வாக்கியங்களை நான் பயன்படுத்தி பதில் கடிதம் எழுதலாம்?” என்று கேட்கிறார் ஒரு வாசகர். 

சில எடுத்துக்காட்டு வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மாறுதல்கள் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

 We assure that such problems will not recur. In fact we are embarrassed that the error has occurred. We would like to meet you to see how we can reconcile this problem and move forward. 

In your mail you have requested ten extra items as compensation for the mistake. We will gladly provide fifteen.

Sorry for the error. We will send you a revision promptly and provide support for the remaining implementation process at no additional charge to you. 

தொடக்கம் இப்படித்தான்

Women’s Lib என்கிறார்களே அதிலுள்ள lib என்பதன் பொருள் என்ன?

Liberty என்பதன் சுருக்கம்தான் lib. பெண் விடுதலை என்பதைத்தான் Women’s lib என்கிறோம். நியூயார்க்கிலுள்ள liberty என்பது சுதந்திரத்தின் அடையாளம்தான்.

Liberte என்ற பிரெஞ்சு வார்த்தை ஆங்கிலத்தில் liberty-ஆகி, சுருங்கி lib என்று ஆகிவிட்டது. 

அடிமைத்தளை, சிறை அல்லது கொடுங்கோல் ஆட்சி போன்றவற்றிலிருந்து மக்களை விடுவிப்பவரை Liberator என்று அழைப்பதும் வழக்கமாகிவிட்டது.

சிப்ஸ்

# Weasel என்றால்?

ஏமாற்றுப் பேர்வழி.

# Cursory glance என்றால் என்ன?

ஒன்றை மேலோட்டமாகப் பார்ப்பது அல்லது படிப்பது. 

# ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் ரயில்கள் / விமானங்கள் கிளம்பும் நேரத்தைக் குறிப்பிடப் பலகைகளை வைத்திருக்கிறார்களே அவற்றை Departure Boards எனலாமா?

அப்படித்தான் அமெரிக்கர்கள் சொல்கிறார்கள். பிரிட்டிஷாருக்கு அது Departures Board.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x