Published : 07 Nov 2017 10:44 AM
Last Updated : 07 Nov 2017 10:44 AM

தொழில் தொடங்கலாம் வாங்க 39: அற்புதமான ஆசான்கள் அவசியம்!

 

த்தனை தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் முகம் பார்த்து மனிதரிடம் பெறும் யோசனைக்கு நிகரில்லை. ஒரு வழிகாட்டுதல் பல தவறுகள் நடப்பதைத் தடுக்கும். பல புதிய திசைகளைக் காட்டும். ஒரு குரு உங்களுக்கு அவசியம்.

கல்வியில் நல்ல குரு கிடைப்பதே சிரமம். தொழிலில் எங்குப் போய்த் தேட, நல்ல குரு என்பதை எப்படி அறிவது, இந்தக் காலத்தில் சுயநலம் பாராமல் உதவும் குரு இருக்கிறாரா, அப்படி இருந்தாலும் நம் தேவைக்கு நினைத்த மாத்திரத்தில் கிடைப்பாரா இப்படியான கேள்விகள் நியாயமாக எழும்.

குருவா, ஆலோசகரா?

நல்ல குரு கிடைப்பதற்கு முன் ஒரு குருவின் தேவையை நீங்கள் முழுமையாக உணர வேண்டும். அதற்கு நீங்கள் பல வெற்றிகரமான தொழிலதிபர்களின் கதைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகமாகப் படித்தாலும் சரி, நேரில் கேட்டாலும் சரி, ஒரு விஷயத்தை நீங்கள் கண்டிப்பாகக் கவனிப்பீர்கள். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு முக்கியத் தருணத்தில் யாரோ ஒரு பெரிய மனிதரின் சிந்தனையில், செயலில் அல்லது அறிவுரையில் பாதிக்கப்பட்டு ஒரு தொழில் முடிவு எடுத்திருப்பார்கள். தொழிலில் தனக்கு முன் சாதித்தவர்களைக் குருவாக நினைத்து அவர்கள் அறிவுரைகளைக் கேட்பது பலருக்கு வழக்கமாக இருப்பது தெரியவரும். பல தொழில் இடர்களைத் தீர்ப்பதிலும் குருவுக்குப் பங்கு உண்டு.

பெரிய நிறுவனங்கள் தங்கள் நிர்வாகக் குழுவில் மற்ற தொழிலதிபர்களை உறுப்பினர்களாக்குவது எதனால்? ஒரு கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி இன்னொரு நிறுவனத்தில் நிர்வாகக் குழிவில் கவுரவ இயக்குநராக இருக்கலாம். காரணம் அவர்களின் அனுபவமும் விமர்சனமும் அறிவுரையும் நிர்வாகத்துக்குத் தேவை. இன்ஃபோசிஸ் போர்டில் அசோக் லேலண்ட் எம்.டி. இருந்ததும், ரிலையன்ஸில் ஐ.சி.ஐ.சி.ஐ.பங்கு கொள்வதும் இதனால்தான். சரி அப்போது குரு என்பதைவிட ஆலோசகர் என்று சொல்லலாமா? முடியாது.

ஆலோசகர்கள் நிறையப் பேர்களை நியமிக்கலாம். ஒவ்வொரு தேவைக்கு ஒவ்வோர் ஆலோசகர் இருக்கலாம். அவர்கள் ஒரு கட்டணத்தின் பேரில் சில சேவைகள் செய்யலாம். ஆனாலும், இவர்கள் நான் சொல்லும் குரு இல்லை.

குரு உங்கள் தொழிலே செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், நிரம்ப தொழில், உலக அனுபவம் பெற்றிருக்கலாம். வேறு துறையைச் சார்ந்தவராகக்கூட இருக்கலாம். ஆனால், ஒரு தொழில் நடத்துவது என்ன என்று தெரிந்திருக்கும் அவருக்கு. பிற தொழில்களை வளர்க்க வேண்டும்; புதிதாகத் தொழில் செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் முக்கியம். அதற்கான நேரத்தையும் பங்களிப்பையும் தரத் தயாராக இருக்க வேண்டும்.

தெரிந்தவர்களின் அருமை தெரிவதில்லை

அற்புதமான தொழில் ஆசான்கள் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். தான் வளர வேண்டும் என்பதைவிடத் தொழில் உலகம் வளர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவர்கள். தான் பட்ட இன்னல்களைப் புதியவர்கள் பட வேண்டாம் என்ற சிந்தனை உடையவர்கள். மிகச் சிறிய தொழிலதிபர்களுக்கும் ஊக்குவிப்பும் தேவைக்கு ஏற்ற அறிவுரையையும் கொடுப்பவர்கள். தன் சொந்த நலனுக்கு மட்டுமல்லாது தொழில் உலகின் பிரச்சினைகளுக்கே குரல் கொடுப்பவர்கள்.

பல நேரங்களில் நாம் நமக்குத் தெரிந்த மனிதர்களைக் குருவாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் அருமையையும் கண்டுகொள்ளத் தவறிவிடுவோம். கேட்காமலேயே கிடைக்காது என்று முடிவு செய்துவிடுவோம். குழப்பத்தில் தனித்து எடுத்த தவறான முடிவுகளுக்குப் பிறகு நம்மை நாமே கடிந்துகொள்வோம். “என்னைக் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேனே? ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்!” என்று பிறர் நம்மிடம் சொல்லும்போது உணர்ந்து பயனில்லை. அதற்குள் காலம் கையை மீறி போயிருக்கும்.

ஒரு வரியில் சொல்ல வேண்டும்

நீங்கள் ஒரு தொழில் அமைப்பில் இருந்தால் பல அனுபவஸ்தர்களையும் வெற்றியாளர்களையும் சந்திக்க நேரிடும். அவர்களின் மன அலைவரிசை தெரிந்து நீங்கள் அருகில் செல்லலாம். உங்களின் தொழில் பற்றி அவருக்கு நன்மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டால் நீங்கள் அவரை அணுகலாம். எல்லோரும் எல்லோரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், நீங்கள் திறந்த மனதுடன் செயல்பட்டால் உங்களுக்கான குரு நிச்சயம் கிடைப்பார்.

உங்கள் தொழில் பற்றிய ஒரு அறிமுக உரை எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். ஒரு மின் தூக்கியில் செல்லும்போது சொல்லி முடிக்கும் வண்ணம் உங்கள் தொழில் தகவல் சுருக்கமாக இருக்க வேண்டும். என்ன தேவை என்பதும் ஒரு வரிக்குள் இருத்தல் நல்லது. உங்கள் தொழில் பற்றிய நன்மதிப்பை நீங்கள் பெறுதல் மிக முக்கியம்.

“ஏதாவது பிஸினஸ் பண்ணணும்; வழி சொல்லுங்க” என்று கேட்டால் யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். தெளிவான திட்டமும் கேள்வியும் அவசியம். ஒரு காலத்தில் வெறும் வங்கி அதிகாரியாக அறிமுகம் ஆன கே. வி. காமத் ரிலையன்ஸ் சொத்தை இரண்டாகப் பிரிக்கும்போது குரு ஸ்தானத்தில் இருந்து அனிலுக்கும் முகேஷுக்கும் பிரித்துக் கொடுத்தார். நம் ஊர் நேச்சுரல்ஸ் குமரவேல் தவறாமல் எல்லா நிர்வாக அமைப்பு நிகழ்ச்சிகளுக்கும் வந்து புதிய தொழிலதிபர்களை ஊக்குவிக்கிறார். சி.ஐ.ஐ. போன்ற அமைப்புகள் சிறு நிறுவனங்களுக்கு உதவியாகத் தொடர்ந்து பல பெரும் தொழிலதிபர்களுடன் சந்திப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதுபோன்ற சந்திப்புகளில் பலரது அறிமுகம் கிடைக்கும்.

பெரிய உதவியோ ஆலோசனையோ கிடைக்காவிட்டாலும் சில பரிந்துரைகள் கிடைக்கலாம். ஒரு பிரபலம் உங்களுக்கே தெரியாமல் உங்களை/ உங்கள் நிறுவனத்தைப் பெருமையாக அறிமுகப்படுத்தலாம். ஒரு குரு அவசியம். சீடன் தயாராக இருக்கும் போது குரு கண்ணுக்குத் தெரிவார். நீங்கள் தயாரா?

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x