Last Updated : 17 Oct, 2017 10:00 AM

 

Published : 17 Oct 2017 10:00 AM
Last Updated : 17 Oct 2017 10:00 AM

வேலை வரும் வேளை 03: ஐ.ஐ.டி. கனவு இப்படியும் நனவாகலாம்!

நான் சவுதி அரேபியாவில் எலக்ட்ரிக்கல் பொறியாளராகப் பணியாற்றுகிறேன். எனக்கு இண்டர்நேஷனல் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்க விருப்பம். எனவே, எம்.பி.ஏ. குறித்த விவரங்களைச் சொல்லுங்களேன். அல்லது பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்க விரும்புகிறேன். இதைப் படிக்கலாமா?

-அப்சல்கான், சவுதி அரேபியா

எம்.பி.ஏ. படிப்பை இன்று கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் ஆகியவை வழங்குகின்றன. இப்படிப்பைத் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிப்பதுதான் நல்லது. இல்லை என்றால் இதர பட்டப்படிப்புகளைப் போல் பெயருக்குப் பின்னால் மட்டுமே போட்டுக்கொள்ள முடியும். நீங்கள் சவுதியில் வேலை பார்ப்பதால் பகுதி நேரப் படிப்பாகவோ வார இறுதி நாட்களிலோ ஆன்லைன் கோர்ஸாகவுவோ படிக்கலாம். நீங்கள் படிக்க உகந்தது, Dubai Knowledge Village என்பேன். அங்கு உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தங்களின் கிளை நிறுவனங்களை நிறுவித் தரமான கல்வி அளிக்கின்றன. இங்கு இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் முழுநேர, பகுதிநேர எம்.பி.ஏ. படிப்புகள் வழங்கப்படுகின்றன. Birla Institute of Technology, Dublin Business School, European University College Brussels, University of Wollongong, Manchester Business School, the University of Bradford, London Business School, Hult International Business School ஆகியவை உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அதிலும் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தகைய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

இதைத் தவிர உங்களுடைய வாழ்க்கைச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சொல்ல வேண்டுமானால், எம்.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பை உங்களுடைய ஆர்வத்துக்காக மட்டுமே நீங்கள் படிக்கலாம். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்கள் இதை வழங்குகின்றன. இதைத் தவிர உங்களுடைய பணிவாழ்க்கைக்கு அது கைகொடுக்காது என்றுதான் சொல்வேன்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவருகிறேன். மாணவப் பருவத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் கனவோடு வளர்ந்தேன். ஆனால், குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக அப்போது ஐ.ஐ.டி. கனவு கானல்நீராகிப் போனது. இப்போது நன்றாகச் சம்பாதித்தாலும் அங்கே படிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் மனதில் குடிகொண்டிருக்கிறது. இதைத் தீர்க்க ஏதாவது ஒரு வழி இருக்கிறதா?

-சீதாலட்சுமி, வேளச்சேரி, சென்னை

பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் முதல் பட்டயப் படிப்பு, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்வரை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உள்ளார்ந்த அறிவு பெற இன்றைய தொழில்நுட்பம் உதவிக் கரம் நீட்டுகிறது. குறிப்பிட்ட பாடப் பிரிவில் முழுமையான அறிவு பெற யாரும் இனிமேல் தயங்கத் தேவை இல்லை. உதாரணத்துக்கு, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளலாம். இதற்காக உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.டி.க்கள் ஆகியவற்றின் பேராசிரியர்களும் வல்லுநர்களும் எளிமையான வகையில் பாடத்திட்டத்தைச் சொல்லித்தரும் வீடியோக்களை உருவாக்கி உள்ளனர். ஆன்லைனில் இவற்றைப் படிக்கலாம். கட்டணம் செலுத்தித் தேர்ச்சி அடைந்து சான்றிதழும் பெறலாம்.

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பல துறைகள் இணைந்து Swayam என்கிற திட்டத்தை வழங்குகின்றன. வீடியோ விரிவுரை, பாடப் பகுதிகளின் விளக்கம், சுயமதிப்பீடு, பயிற்சி மற்றும் ஆன்லைன் விவாதம் எனத் தனித்தனிப் பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் National Programme on Technology Entered Learning எனப்படும் NPTEL பொறியியல் பிரிவுக்கும் யு.ஜி.சி. முதுகலைக்கும் சி.இ.சி. இளநிலைக் கல்விக்கும் என்.சி.இ.ஆர்.டி. மற்றும் என்.ஐ.ஓ.எஸ். பள்ளிக் கல்விக்கும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகின்றன. இதன் மூலம் பள்ளிக் கல்வியில் 43 அலகுகள், 14 சான்றிதழ் படிப்புகள் , 26 பட்டயங்கள், 385 இளங்கலைப் படிப்புகள், 242 முதுகலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

NPTEL வாயிலாகக் கிட்டத்தட்ட 159 பாட அலகுகள் பொறியியல் பிரிவில் வழங்கப்படுகின்றன. இதேபோன்று ஐ.ஐ.டி சென்னை, மும்பை, டெல்லி, ஐ.ஐ.எஸ். பெங்களூரு ஆகியவை 23 பிரிவுகளில் 900-க்கும் மேற்பட்ட இணைய வீடியோ வழி ஓபன் கோர்ஸ்களை வழங்குகின்றன. இதன் மூலம் நீங்கள் ஐ.ஐ.டி.யில் படிக்க முடியவில்லை என்கிற தாகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம். நாட்டின் தலை சிறந்த பேராசிரியர்களுடன் தொடர்புகொண்டு தெளிவுரையும் பெறலாம். குறிப்பாகப் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறக் குறிப்பிட்ட அலகுகளில் ஆழ்ந்த அறிவினைப் பெறலாம். இது தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள https://onlinecourses.nptel.ac.in.-ஐ பாருங்கள்.

quejpg

‘வேலை வரும் வேளை’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன். வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி,

தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x