Published : 10 Oct 2017 10:56 AM
Last Updated : 10 Oct 2017 10:56 AM

இந்திய மாணவர்களைக் கொண்டாடும் தேசம்!

 

சீ

னாவிடமிருந்து விடுதலை பெற்றுத் தனி நாடாக உருவெடுத்து 106 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் தன்னுடைய தேசிய தினத்தை அதிகாரபூர்வமாகக் கொண்டாட முடியாத நிலையில் தவிக்கிறது தைவான். முழுமையான அரசியல் விடுதலை, தைவானில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல சென்னையில் உள்ள தைவானியர்களுக்கும் கிடைக்கவில்லை என்பதைக் கடந்த வாரம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தைவானின் தேசிய தினமான அக்டோபர் 10-ம் தினக் கொண்டாட்டத்தை அக்டோபர் 6 அன்று சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ‘டபுள் டென்த் டே’ எனக் கொண்டாடினார்கள் சென்னையில் வாழும் தைவானியர்கள் சிலர்.

எங்கு திரும்பினாலும் தைவான் முகங்கள் கண்களை நிறைக்க, மெலடி மொழியான மேண்டரின் காதுகளை நனைக்க சில நொடிகள் இது சென்னையா அல்லது தைவானா என்று புரியவில்லை. வருடாந்திரக் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் இந்த முறை அதில் கூடுதல் அர்த்தமும் சேர்க்கப்பட்டிருந்தது.

விடுதலைக்கு வழி கல்வி

தைவானின் முதல் பெண் அதிபரான சாங் இங்க் வென் கடந்த ஆண்டு பிறப்பித்த ‘நியூ சவுத்பவுண்ட் பாலிஸி’ என்ற புதிய கொள்கைதான் அதற்குக் காரணம். சீனாவின் பிடியிலிருந்து முழுவதுமாக விடுபட தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆஸ்திரலேசியாவைச் சேர்ந்த 18 நாடுகளுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் திட்டம்தான் ‘நியூ சவுத்பவுண்ட் பாலிஸி’. அதில் முக்கிய நகர்வாக இந்தியாவுடன் கல்வி உடன்படிக்கைகளை மேற்கொண்டுவருகிறது தைவான். ஏற்கெனவே தைவான் பல்கலைக்கழகங்களுடன் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சில ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருந்தாலும் தற்போது முதன்முறையாக இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் சென்னையைத் தேடி வந்துவிட்டன.

8CH_Taiwan1 சார்லஸ் சி.லீ. rightஉலகச் சந்தையில் பீடுநடை

சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் சில தனியார் பல்கலைக்கழகங்களுடன் மாணவர், ஆசிரியர் பரிமாற்றத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தைவானில் உதவித்தொகையுடன் படிக்கலாம், படித்தவுடன் வேலையும் நிச்சயம். இதன் மூலம் உலகக் கல்வி மற்றும் பணிச் சந்தையில் இந்தியாவுடன் கைகோத்து முன்னேற தைவான் எத்தனிக்கிறது.

இதற்காக, தைவான் கல்வி அமைச்சர் யாவ், தைவான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டுமின்றி தைவானில் சிறப்பாக மேற்படிப்பு முடித்த இந்திய மாணவர்களும் உடன் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூரைச் சேர்ந்த வசந்தன் திருநாவுக்கரசு. இவர் தைவானின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்த தேசிய சிங்குவா பல்கலைக்கழகத்தில் நானோ எலெக்ட்ரானிக்ஸில் முனைவர் பட்டம் முடித்திருக்கிறார். தற்போது தைவானின் இந்திய மாணவப் பிரதிநிதியாக இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உரையாற்றிவருகிறார்.

எல்லாமே டிஜிட்டல்

“உலகின் எலக்ட்ரானிக் தேசம் தைவான். அத்தகைய நாடு நம் கல்வி நிறுவனங்களைத் தேடி வருவது இந்தியா தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்துக்கு நகரப்போகிறது என்பதற்கான சமிக்ஞை. இதுவரைக்கும் நம்முடைய ஃபோனும் டிவியும்தான் ‘ஸ்மார்ட்’ ஆக மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது டிவியை இன்று வயர்லெஸ் கணினி, வைஃபை தொழில்நுட்பம், ப்ளூடூத் ஆகியவற்றுடன் இணைத்துப் பயன்படுத்துகிறோம் அல்லவா!

அடுத்து நம் வீடுகளில் பயன்படுத்தும் அத்தனை பொருள்களும் டிஜிட்டலாக மாறப்போகின்றன. இதற்குப் பெயர் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ். இதுவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கூடிய சீக்கிரம் எதிரொலிக்கும். உதாரணத்துக்கு வீட்டில் இருக்கும் மின் விளக்குகளைத் தொழில்நுட்ப ரீதியாக நம்முடைய கார் அல்லது இரு சக்கர வாகனத்துடன் தொடர்புபடுத்திவிடலாம். ஆக, நீங்கள் உங்களுடைய வீட்டை விட்டு வாகனத்தில் சென்றாலே தானாக மின் விளக்குகளெல்லாம் அணைந்துவிடும்படி தகவமைத்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் மின்னாற்றலைத் திறம்படச் சேமிக்கலாம். இதுபோல பலவிதமான தொழில்நுட்ப முன்னேற்றம் நடக்கவிருக்கிறது. இதன் முதல் கட்டம்தான் இப்போது இந்தியப் பல்கலைக்கழகங்களுடன் தைவான் பல்கலைக்கழகங்கள் செய்திருக்கும் ஒப்பந்தம். இந்திய மாணவர்களின் திறனை அவர்கள் அங்கீகரிப்பதால் இதன் மூலம் நாம் கல்வியும் வேலையும் பெறலாம்” என்கிறார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மாணவர்கள் சிறப்பான உதவித் தொகையுடன் தைவானின் உலக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்து, பட்டமும் பணியும் பெறலாம் என உறுதியளிக்கிறார் சென்னையில் உள்ள தைப்பே பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் பொது இயக்குநர் சார்லஸ் சி.லீ. “ஒப்பந்தத்தில் இணைந்த பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி திறமையும் ஆர்வமும் உள்ள எல்லா மாணவர்களையும் உதவித்தொகையுடன் படிக்கவைக்க தைவான் காத்திருக்கிறது” என்றார் அவர்.

வேலை தரும் கல்வி நிலையம்

நம் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கல்வி கற்பிக்கின்றனவே தவிர வேலையை நேரடியாக உருவாக்குவதில்லை என்பதே இந்தியக் கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் பெருங்குறை. அதைப் போக்கும் நடவடிக்கையில் இறங்கிவிட்டது சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம். டைடல் பார்க்குக்கு இணையான பிரம்மாண்ட அலுவலகங்களைத் தற்போது அது கட்டமைத்துவருகிறது. தன்னுடைய மாணவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தில் கடந்த இரண்டாண்டுகளாகப் பணியாற்றிவருகிறார் சென்னையைச் சேர்ந்த பார்த்திபன்.

8CH_Taiwan2 வசந்தன்

சென்னை ஐ.ஐ.டி.யின் ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சிக்கான லெமா லாப்ஸில் (Lema Labs) பணியாற்றும் இவரது திறமையைக் கடந்த வாரம் கண்கூடாகப் பார்த்த தைவான் பல்கலைக்கழக அதிகாரிகள் அவரது ஸ்டார்ட் அப்புக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இவரது ‘ஸ்டார்ட் அப்’ திட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது? “இன்று நம்முடைய படிப்புக்கும் சந்தை தேவைக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது. தொழில்நுட்பச் சந்தை ரோபோட்டிக்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ஆகியவற்றை நோக்கி முன்நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், அதற்கான அடிப்படைகள்கூட நம் கல்வி நிறுவனங்களில் சொல்லித் தரப்படுவதில்லை. அதனால் எட்டாவது முதல் ப்ளஸ் டூ வரை படிக்கும் மாணவர்களுக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கும் 40 மணி நேரம் இண்டர்ன்ஷிப் பயிற்சியளிக்கிறோம். இதில் ரோபோட்டிக்ஸ், ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் வடிவமைப்பு, இன்டர்னெட் ஆஃப் திங்க்ஸ் ஆகியவற்றுக்கான அறிமுக வகுப்புகள் செயல்வழிக் கல்வியாகக் கற்பிக்கிறோம்” என்கிறார் பார்த்திபன்.

அடுத்த கட்டம்

நம் வீடுகளுக்குள் அதி நவீன தொழில்நுட்பங்கள் வேகமாக நுழைந்துகொண்டிருக்கின்றன. அத்தகைய வளர்ச்சி நம்முடைய கல்வி நிலையங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. அந்த வகையில் இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வியில் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீடு என முக்கிய முடிவுகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் வசந்தன், பார்த்திபன் போன்ற ஆய்வு மாணவர்களின் பங்கு பெரிதும் கைகொடுக்கிறது.

இதனை இந்தியக் கல்வி அமைப்புகள் அங்கீகரிப்பதைவிட தைவான் தேசம் அதிகமாகவே அங்கீகரித்துக் கொண்டாடுகிறது. காரணம், இந்திய இஞைர்களின் திறமை தங்களுடைய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x