Published : 03 Oct 2017 09:42 AM
Last Updated : 03 Oct 2017 09:42 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! 34: தொழில் வருமானம் வேறு, வீட்டுச் சம்பளம் வேறு!

நிதி நிர்வாகம் பற்றி நான் எழுதிய விஷயங்களை சிலாகித்து மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார்கள் பல சிறுதொழிலதிபர்கள். அப்படியே என் கதையைப் படித்தது போலிருந்தது என்றனர் பலர். யாரையும் குறைத்து மதிப்பிட அப்படி எழுதவில்லை. தனி ஆளாய் தொழில், குடும்பம், சமூகம் என அனைத்தையும் சமாளிக்கும் சிறுமுதலாளிகளுக்கு என் சல்யூட் என்றைக்கு உண்டு. இன்னமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் இந்த சாகசப் பயணத்துக்கு என் எழுத்துக்கள் பெரும் ஊக்குவிப்பாக இருந்தால் மகிழ்ச்சி.

வாய் திறக்காத கல்வி நிறுவனங்கள்

“இதையெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக் கொடுக்கணும் சார்!” என்றார் என்னுடைய நண்பர் ஒருவர். பிளஸ் டூவில் வணிகவியல் குரூப் எடுத்தால்தான் வியாபாரம் பற்றி படிக்க முடியும். அதுவும் சுயமாகத் தொழில் முனைவோருக்கான பாடம் அதிலும் கிடையாது. கல்லூரியில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் எடுத்தால்தான் உண்டு. பல பொறியியல் கல்லூரிகளில் தொழில் முனைவோருக்கான மையங்கள் உள்ளன. ஆனால், இவை முழு வீச்சில் இயங்குவதாகச் சொல்ல முடியாது. தவிர இவை அனைத்தும் கல்வித் துறைக்குள் இயங்குவதால், அடிப்படைத் தகுதியும், வசதியும், நேரமும் உள்ளவர்களுக்குத்தான் இவை இருப்பதே தெரியும். இதையெல்லாம்விட மிகப் பெரிய சவால் தொழில் முனைவோர் பற்றி பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கே ஆரோக்கியமான எண்ணம் கிடையாது. வேலைக்குப் போவதைச் சிலாகித்துச் சொல்லும் கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்களில் எத்தனை பேர் சொந்தத் தொழில் செய்கிறார்கள் என்று எங்குமே வாய் திறப்பதில்லை.

இதில் பெரிய கொடுமை எம்.பி.ஏ. படித்தவர்களே தொழில் தொடங்க ஆர்வமோ, துணிவோ இல்லாது இருப்பதுதான். ஆனால், வேறு சூழலில் இருந்தவர்கள் படிப்பை, வேலையை உதறிவிட்டுச் சுயத்தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்த மனத்திண்மையை என்னவென்று பாராட்டுவது! அப்படித் தொழில் நடத்துபவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை வருவோர் போவோர் பேச்சுகள் எல்லாம் வேறு கேட்க வேண்டியிருக்கும்.

நிதி கட்டுமானமும் நிறுவன அமைப்பும்

என்னைப் பொறுத்தவரை தொழில் தொடங்குவது பற்றி எவ்வளவு படித்தாலும், தொழில் செய்யும்போது கற்பதுபோல வராது. அதனால்தான் தொழில் தொடங்குகையில் நல்ல வழிகாட்டுதல் அவசியம். ஒரு வளர்ந்த தொழிலதிபரின் வழிகாட்டல் புதிய தொழில் முனைவோருக்குப் பெரிதும் உதவும். எல்லாத் தொழில்முனைவோருக்கும் அடை காக்கும் அமைப்புகள் கிடைப்பது கடினம். அதனால்தான் இந்த ஆலோசனை எழுத்துக்கள்.

தொழில் தொடங்கும்போதே அதற்கான நிதி கட்டுமானமும் நிறுவன அமைப்பும் முக்கியம். நூற்றுக்குத் தொண்ணூற்றி ஐந்து பேர் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறார்கள். அல்லது தொழிலை விட்டுப் போகிறார்கள். ஐந்து பேர் மட்டும்தான் விஸ்வரூப வளர்ச்சி அடைகிறார்கள். இந்த 5% மக்கள் தொழில் அறிவிலோ அனுபவத்திலோ வசதியிலோ உயர்ந்தவர்கள் அல்ல. ஆனால், தொழில் பற்றிய பார்வையும், அதை நிர்வகிக்கும் முறையிலும்தான் சிறந்து விளங்குகிறார்கள்.

தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிப் பேசினார் அந்தப் பெரும் தொழில் நிறுவனர். “எங்க தொழிலில் கணக்கில் காட்டப்படாத பணம்தான் பிரதானம். அதேபோல வருமானத்தைக் குறைத்துக் காண்பித்து வரி ஏய்ப்பு செய்வதுதான் வழக்கம். எனக்கும் அப்படித்தான் அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் இதை ஒரு சிறு தொழிலாகப் பார்க்கவில்லை. என் ரூ. 25,000 முதலீடு சிறியது என்றாலும் நான் உருவாக்க கனவு கண்டது ஒரு ரூ. 100 கோடி வருமானம் நிறுவனம். அதனால் எதைச் செய்தாலும் அது இந்தக் குறிக்கோளுக்கு இட்டுச் செல்லுமா என்று மட்டும் பார்ப்பேன். இதனால் எல்லா வருமானத்தையும் கணக்கில் காண்பித்து வங்கியில் கடன் வாங்கினேன். அதே போல கடன் கட்டுவதில் தவறியதே இல்லை. தொடர்ந்து பெரிய கடன்கள் வாங்கி என் தொழிலை எல்லைகள் தாண்டி விஸ்தாரப்படுத்தினேன்.

பல நஷ்டங்கள் வந்தபோதும் சரியாகக் கணக்கு காட்டுவதும், சரியாகக் கடன் கட்டுவதும், தொழிலாளர்களுக்குச் சம்பளம் போடுவதில் தாமதம் செய்யாததும் எனக்கு எல்லா இடத்திலும் நல்ல பெயரைச் சம்பாதித்துத் தந்தது. என்னுடன் தொழில் செய்த முகவர்கள், பணியாளர்கள், வங்கிகள் அனைவரும் 20 ஆண்டுகள் கடந்தும் இன்று என்னுடன் இருக்க இவை அனைத்தும் உதவின. என் குடும்ப வசதி முதல் 5 ஆண்டுகள் மோசமாகவும், பிறகு படிப்படியாகவும்தான் வளர்ந்தது. ஆனால் வீட்டில் தொடர்ந்து சொல்வேன். தொழில் வருமானம் வேறு. வீட்டுச் சம்பளம் வேறு என்று. அவர்களும் அதைப் புரிந்து நடந்து கொண்டார்கள். இந்த நடவடிக்கைகள்தான் என் ரூ.100 கோடி கனவைச் சாத்தியமாக்கின. ரூ.100 கோடிக்குப் பின் தொழிலை வளர்ப்பது சுலபம். முதல் ரூ.100 கோடி வருமானம் வருவதற்குத்தான் அதிகம் பாடுபட வேண்டும்!”

மனநிறைவுதான் முக்கியம்

உங்கள் வருமானம், தொழில் மதிப்பு, வருங்காலக் கனவு இவை பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் நிகழ்காலக் கட்டுப்பாடும் தியாகமும் பெரிதாகத் தெரியாது. உங்கள் தொழில் குறிக்கோள்களை அடைவது போன்ற பேரானந்தம் எதுவுமில்லை. அந்த நிறைவுதான் வாரன் பஃபேவையும் பில் கேட்சையும் தன் செல்வத்தின் பெரும் பகுதியை தானம் கொடுக்க வைக்கிறது. பலரும் பொது வாழ்வு, சமூகச் சேவை, ஆன்மிகம் என்று தேர்ந்த மேலாளர்களிடம் கொடுத்துவிட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடிகிறது.

இன்று செய்யும் தொழிலை இதே போலச் செய்ய உங்களில் எத்தனை பேருக்குச் சம்மதம்? உங்கள் தொழில் குறிக்கோள்கள் என்ன? அதைத் தடுக்கும் சக்திகள் என்ன? அடுத்த கட்ட நகர்வு என்ன? அங்கே செல்ல என்ன செய்ய வேண்டும்?

யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x