Published : 26 Sep 2017 11:19 AM
Last Updated : 26 Sep 2017 11:19 AM

எளியவர்களின் ரோபோட் ஆசிரியர்!

டி

ஜிட்டல் பரிவர்த்தனையை பெருமையாகத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எத்தனை இந்தியப் பள்ளிகள் இணையதள வசதியுடன் செயல்பட்டுவருகின்றன என்று தெரியுமா? 2014- 2015 ஆண்டுக்கான இந்தியக் கல்விக்கான மாவட்டத் தகவல் அமைப்பின் கணக்கெடுப்பின்படி 36.6% சதவீத இந்தியப் பள்ளிகளில் மட்டுமே இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் உள்ளன.

கற்பனை அல்ல நிஜம்

இந்நிலையில் இந்தியாவின் விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் சர்வதேச அளவில் நடைபெறும் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸூக்கான பிரம்மாண்டப் போட்டிகளில் பங்குபெறுவதைக் கற்பனைசெய்துப் பார்க்க முடியுமா? முடியாது என்றே தோன்றும். ஆனால், கடந்த வருடம் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிங் நகரில் நடைபெற்ற ‘ரோபோ கப் 2016’, இந்த வருடம் ஜூலை மாதம் ஜப்பானில் உள்ள நகோயா நகரில் நடைபெற்ற ‘ரோபோ கப் 2017’ உள்ளிட்ட சர்வதேச ரோபோட் வடிவமைப்புப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்கள் பெங்களூரு சேவா பாரதி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆறு மாணவர்கள்.

கன்னட வழிக் கல்வி கற்பிக்கும் அரசுப் பள்ளியான இதில் 10-க்கு 10 அடி என்கிற அளவில் இருக்கும் சிறிய வகுப்பறை ஒன்றில்தான் 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட இந்த ஆறு சிறுவர்கள் ரோபோட்டிக்ஸை கற்றுத்தேர்ந்தார்கள். இவர்களுடைய வளர்ச்சிக்குக் காரணம் அம்மாநில அரசோ, மத்திய அரசோ அல்ல. அறிவியல் படிப்புக்குப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் நிறுவனமான ஐ.ஐ.எஸ்சி.யில் இன்ஸ்ட்ரூமெண்டல் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்ற பா. ஸ்ரீதர்தான் அது. இந்தியாவின் தலைசிறந்த கல்லூரி ஒன்றில் படித்துவிட்டுத் தன்னுடைய பணிவாழ்க்கையை பூனாவில் உள்ள பன்னாட்டு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் தொடங்கினார் ஸ்ரீதர்.

நுட்பம் அவசியம்

தான் கற்ற கல்வியினால் சமூகத்துக்கு என்ன பயன் என்கிற கேள்வி அவரைத் துளைக்கத் தொடங்கியது. மூன்றாண்டுகளுக்கு மேல் அவரால் வழக்கம்போல பணிக்குச் செல்ல முடியவில்லை. வாய்ப்பும் வசதியும் மறுக்கப்பட்ட குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு சேர்க்க முடிவெடுத்தார். கணினி அறிவியலை எளிய பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான பாடமாக மாற்ற வேண்டுமென்றால் அதை எளிமைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தார். ஐ.டி. வேலையை ராஜினாமா செய்தார்.

2014-ல், பெங்களூருவில் உள்ள அக்ஷரா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்தார். சுவாரசியமும் கேளிக்கையும் கூடிய கணினி அறிவியல் பாடத்திட்டத்தைத் தானே வடிவமைத்தார். சேவா பாரதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் ஆசிரியராகக் களம் இறங்கினார். இன்று அவர் உருவாக்கிய மாணவர்கள், ‘மாஸ்டர் மைண்ட்ஸ்’ என்கிற பதாகையோடு ரோபோட்களை அட்டகாசமாக வடிவமைத்துவருகிறார்கள்

எவ்வளவுதான் திறமை இருந்தாலும், தங்களுடைய ஆற்றலை வெளிநாட்டில் வெளிப்படுத்த வேண்டுமானால் அங்குச் செல்லச் செலவாகுமே. தினக் கூலிகளின் குழந்தைகளான இவர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கப் பெரிய தொகை தேவைப்பட்டது. இந்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நுட்பத்தைப் புத்திக்கூர்மையோடு தன்னுடைய மாணவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினார் ஸ்ரீதர். கிரவுட்ஃபண்டிங் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திரட்டி, தன்னால் முடிந்த தொகையையும் கொடுத்துத் தன்னுடைய மாணவர்களை வெற்றிகரமாக ஜப்பானுக்கு அனுப்பிவைத்தார்.

தன்னுடைய வீட்டிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேவா பாரதி அரசுப் பள்ளிக்குத் தினமும் தன்னுடைய சைக்கிளை மிதித்தபடியே இன்றும் சென்றுகொண்டிருக்கிறார் இந்த எளியவர்களின் ரோபோட் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x