Last Updated : 12 Sep, 2017 10:30 AM

 

Published : 12 Sep 2017 10:30 AM
Last Updated : 12 Sep 2017 10:30 AM

ஆங்கிலம் அறிவோமே 177: தப்பிக்க விடாத பொத்தான் துளை!

கேட்டாரே ஒரு கேள்வி

Loo என்றால் கழிப்பறையைக் குறிக்கிறது. Waterloo என்பதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா?

Waterloo என்பது நெப்போலியனுக்குத் தோல்வியை அளித்த இடம். அது பெல்ஜியத்தில் உள்ளது. 

பிரெஞ்சு மொழியில் ‘லூ’ (L’eau) என்பது நீரைக் குறிக்கும். (சிறுநீர், பிற நீர் இரண்டையும்தான்!). 

I will just go to the loo என்றால் டாய்லெட்டுக்குச் சென்று வரவிருக்கிறார் என்று அர்த்தம். Loo roll என்றால் toilet paper.

பிரிட்டனில் கழிப்பறையை latrine என்பார்கள். அமெரிக்காவில் அதை wash room என்பார்கள். 

Toilet என்பது கழிவறையைக் குறிக்கும். அதே நேரத்தில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தன் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ளும் அறையையும் குறிக்கும். அதனால்தான் சில பேர் toilet என்பதை ஒப்பனை என்று மொழிபெயர்கிறார்கள். பிரெஞ்சு மொழியில் ‘toilette’ என்றால் ‘துணி அல்லது உறை’ என்று பொருள்.

************

He was high என்றால் என்ன பொருள் என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

இங்கே high என்பது மனநிலையைக் குறிக்கிறது. அவர் எக்கச்சக்கமான சந்தோஷத்தில் இருக்கிறார் என்பதுடன் மிக மிக உற்சாகப் பெருக்கிலும் இருக்கிறார். இதன் காரணம் அவருக்குக் கிடைத்த ஏதோ மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம் அல்லது மதுவை அருந்தியதாலும் இருக்கலாம். 

He has been on a high ever since his article was published in the magazine.

************

Face value என்றால் என்ன? 

ஒரு நாணயத்திலோ அஞ்சல் தலையிலோ அச்சிடப்பட்டிருக்கும் அதன் மதிப்பு. பொதுவாக அச்சிடப்பட்டிருக்கும் மதிப்பைவிட அதன் நிஜ மதிப்பு குறைவாக இருக்கும்.

அதாவது ஒரு நாணயத்திலுள்ள உலோகத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கலாம். ஆனால் 10 ரூபாய் என்று அச்சிடப்பட்ட நாணயம் என்றால் அதன் face value 10 ரூபாய்.

The coins are sold for the metal they contain rather than their face values.

To accept something at face value என்றால் ஒன்றை அப்படியே ஏற்றுக்கொள்வது. அதாவது அது நிஜம்தானா, எந்த அளவுக்கு நிஜம் என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏற்றுக்கொள்வது. These threats should not be taken at face value என்பதன் பொருள் “இந்த எச்சரிக்கையை அப்படியே நம்பிவிடத் தேவையில்லை” என்பதாகும். I take her story at face value because I assume that she is not lying.

face valuejpg100 

“Normalcy என்பதற்கும் normality என்பதற்கும் என்ன வேறுபாடு” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். 

normality என்றாலும், normalcy என்றாலும் ஒன்றுதான். 

Normality என்றாலும் normalcy என்றாலும் normal ஆக இருக்கும் ஒரு நிலை. அதாவது வழக்கமாக இருப்பது. எதிர்பார்க்கக்கூடியது. “The place gradually returned to normality” என்றால் (இடையில் ஏதோ காரணத்தால் எதிர்பாராத சூழல் உண்டான) அந்த இடம் மெள்ள மெள்ள தன் இயல்பு நிலைக்குத் திரும்பியது” என்று பொருள்.

************

வங்கியில் காசோலைகளை நிரப்பும்போது சிலர் செய்யக்கூடிய தவறுகளைக் கண்டிருக்கிறேன். 

40 என்பதை fourty என்று சிலர் குறிப்பிடுவார்கள். Forty என்பதே சரி. 

3005 என்ற தொகையை சொற்களில் எழுதும்போது Three thousand five என்று எழுதுவார்கள். Three thousand and five என்றுதான் எழுத வேண்டும். 

வேறு சிலர் three thousands and five என்று எழுதுவார்கள். இங்கே thousands தவறு - thousandதான்.

************

தொடக்கம் இதுதான்

Buttonhole என்ற வார்த்தையைப் படித்தவுடனேயே அதன் பொருள் உங்களுக்கு விளங்கி இருக்கும், சட்டைகளில் பொத்தான் நுழைப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் துளைதான். ஆனால் Buttonhole என்ற வார்த்தையை verbஆகவும் பயன்படுத்துவதுண்டு. 

ஒருவரிடம் பேசுவதற்காக அவரைப் பிடித்து வைப்பதைத்தான் இப்படிக் கூறுவார்கள். தான் சொல்வதை முழுவதுமாக எதிராளி கேட்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அவரது சட்டை பொத்தானுக்கான துளையை விரல்விட்டுத் தன்னருகே இழுத்தபடி அதைக் கூறும் வழக்கம் 18-ம் நூற்றாண்டில் இருந்ததாம். எதிராளி அவருடைய விருப்பத்துக்கு மாறாக இந்தப் பேச்சைக் கேட்கும்படியாகிறது என்பது வெளிப்படை. 

1860-களில் தையல் கலைஞர்கள் கழுத்துப் பகுதியில் பொத்தான் இல்லாமலேயே அதற்கான ஒரு துளையையும் வைத்துத் தைப்பது வழக்கமாம். காரணம் மேலே குறிப்பிட்டதுதான். 

Buttonhold என்ற வார்த்தை நாளடைவில் Buttonhole என்ற verb ஆக மாறியது என்பதுண்டு.

சிப்ஸ்

# In due course என்றால்?

வருங்காலத்தில், சரியான சமயத்தில். பெரும்பாலும் அலுவலகக் கடிதப் போக்குவரத்தில் இதைப் பயன்படுத்துகிறோம். I will let you know my decision in due course. 

# Lessen, lesson என்ன வேறுபாடு?

முறையே குறைத்தல், பாடம்.

# Pitiable, Pitiful ஆகிய இரு வார்த்தைகள் ஒரே அர்த்தம் கொண்டவையா?

ஆமாம். பரிதாபப்படத்தக்க.

 

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x