Last Updated : 05 Sep, 2017 10:45 AM

 

Published : 05 Sep 2017 10:45 AM
Last Updated : 05 Sep 2017 10:45 AM

ஆங்கில​ம் அறிவோமே 176: எதற்கெல்லாம் கண்ணடிப்பார்கள்?

கேட்டாரே ஒரு கேள்வி

# என்ற குறியீட்டை ஒருவர் ‘Hound sign’ என்று குறிப்பிட்டார். அகராதியைப் பார்க்கும்போது hound என்றால் நாய் என்று போட்டிருக்கிறது. மேற்படி குறியீட்டுக்கும், நாய்க்கும் என்ன தொடர்பு?

*******************

“Feelers என்கிறார்களே அவர்கள் யார்?”

To put out feelers என்றால் நீங்கள் செய்த அல்லது செய்யப்போகும் ஒரு செயலைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நீங்கள் எடுக்கும் முயற்சி.

“I have been putting out a few feelers and it seems that most people are against the committee we have formed” என்றால் நீங்கள் ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறீர்கள். அது குறித்த மக்கள் கருத்து என்ன என்பதை அறியச் சில முயற்சிகளை எடுக்கிறீர்கள் (இதற்காகச் சில பேரை நீங்கள் நியமிக்கக் கூடும்). இதன் மூலம் மக்கள் அந்தக் குழுவை ஏற்கவில்லை என்பதை அறிந்துகொள்கிறீர்கள்.

கரப்பான்பூச்சி, பட்டாம்பூச்சி போன்றவற்றின் தலைப் பகுதிக்கு அருகே இரண்டு நீளமான கறுப்புக் குழாய்கள் இருக்கும். இவற்றை feelers என்பார்கள் (சில சமயம் antenna என்றும் கூறுவதுண்டு). இவற்றைக் கொண்டு எதிர்ப்படும் பொருள்களைத் தொட்டுப் பார்த்து அவற்றின் தன்மை குறித்து இந்தப் பூச்சிகள் அறிந்துகொள்ளும்).

*******************

கேட்டாரே ஒரு கேள்விக்கான பதில் இது. hound sign அல்ல. Pound sign. அதாவது எடையின் அளவீடான பவுண்ட் என்பதற்கான குறியீடுபோலவே இது அமைந்திருப்பதால் அப்படிக் கூறுகிறார்கள்.

இதை octothorpe என்றும் குறிப்பிடுகிறார்கள். Octo என்றால் 8 என்று பொருள். எண்ணிப் பார்த்தால் இந்தக் குறியீட்டில் எட்டு முனைகள் இருக்கும்.

என்றாலும் தற்காலத்தில் இந்தக் குறியீட்டை Hashtag என்றுதான் பலரும் குறிக்கின்றனர். இசைக் கலைஞர்கள் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது அதை sharp என்பதற்கான குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது அரை ​step அதிகமாக இசைக்க வேண்டும்.

புரூஃப் திருத்தும்போது இரண்டு வாக்கியங்களுக்கு நடுவே இடைவெளி வேண்டும் என எண்ணினால் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

கணினி சங்கேதக் குறியில் இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால் ‘தொடர்வதெல்லாம் கருத்துகள்தானே தவிர ஆணைகள் இல்லை’ என்று பொருள்.

*******************

Invariably என்றால் என்ன பொருள்?

Variation என்றால் மாறுபடுவது. மாறுபடாத தன்மை கொண்டிருந்தால் invariably என்று குறிக்கப்படுகிறது. அதாவது invariably என்பதன் சம வார்த்தை always.

The train is invariably late என்றால் (கிட்டத்தட்ட) எல்லா நாட்களு​மே அது தாமதமாகத்தான் வருகிறது என்று பொருள்.

For a lot of companies the biggest costs are invariably employment costs.

‘Forty winks’ என்று எதைக் குறிப்பிடுவார்கள் என்ற கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

முதலில் wink என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். வேகமாகக் கண்ணை ​மூடித் திறப்பதை wink என்பதுண்டு. ஒரு நகைச்சுவையைக் கூறிவிட்டு நாம் கண்ணடிப்பதுண்டு. அன்பு காரணமாகவோ அடையாளம் தெரிந்து கொண்டதற்கு அறிகுறியாகவோ கண்ணடிப்பதுண்டு (வேறு எதற்காவது கண்ணடிப்பார்களா என்ன?) இப்படிக் கண்ணடிப்பது என்பதும் winkதான். He winked at them as they passed.

பளபளப்பதையும் சில சமயம் winked என்ற வார்த்தையால் குறிப்பிடுவதுண்டு. The diamond in the necklace winked in the moonlight.

Forty winks என்றால் குட்டி ​தூக்கம் என்று அர்த்தம். இதற்கு forty என்ற எண்ணை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்குத் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

போட்டியில் கேட்டுவிட்டால்?

இந்த நான்கில் இலக்கணப்படியும், அர்த்தத்​ தின்படியும் சரியான வாக்கியம் எது?

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

(3) Though he worked hard he failed.

(4) He worked hard and failed.

(5) He hardly worked but failed.

இலக்கணப்படி நான்காவது வாக்கியம் சரியானதுதான். ஆனால், கடுமையாக வேலை செய்தும் அவன் தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இருக்குமளவுக்குக் கடுமையான வேலை செய்தான், தோற்றுப் போனான் என்பது பொருத்தமாக இல்லை.

Working hard என்றால் கடுமையாக வேலை செய்வது. Hardly worked என்றால் (கிட்டத்தட்ட) வேலையே செய்யவில்லை என்று அர்த்தமாகிறது. எனவே, ஐந்தாவது வாக்கியம் சரியானதல்ல.

இப்போது முதல் மூன்று வாக்கியங்களைப் பார்க்கலாம். Though என்று ஒரு வாக்கியம் தொடங்கினால் yet என்பது அந்த வாக்கியத்தின் பின்பகு​தியில் வர வேண்டும். எடுத்துக்காட்டு - Even though she spoke to me rudely, yet I will be polite to her. இப்படிப் பார்க்கும்போது முதல் இரு வாக்கியங்களுமே சரியானவையாக உள்ளன.

(1) He worked hard yet he failed.

(2) Though he worked hard yet he failed.

சிப்ஸ்

Dumbfound என்பதற்குப் பொருள் என்ன?

வியப்பின் எல்லைக்கே செல்வதை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

 

Mac என்றால் என்ன?

பேச்சு வழக்கில் mackintosh என்பதை mac என்று சுருக்கி அழைக்கிறார்கள். தண்ணீர் புகாத ரப்பரால் ஆன உடையை (Rain Coat) mackintosh என்பார்கள்.

தவறுவது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம். இதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?

To err is human. To forgive is divine.
 

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x