Last Updated : 29 Aug, 2017 10:47 AM

 

Published : 29 Aug 2017 10:47 AM
Last Updated : 29 Aug 2017 10:47 AM

ஆங்கிலம் அறிவோமே 175: இது பச்சைப் புளுகு!

கேட்டாரே ஒரு கேள்வி

Blatant என்ற சொல் நேர்மறைப் பொருள் கொண்டதா, எதிர்மறைப் பொருள் கொண்டதா?

****************

“Thesis என்றால் விளங்குகிறது. Antithesis என்றால் என்ன பொருள்?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

முதலில் thesis என்றால் என்ன என்பதைக் கொஞ்சம் விளங்கிக் கொள்வோம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து நீளமாக எழுதப்படும் கட்டுரையை thesis என்பார்கள். பெரும்பாலும் இது பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெறுவதற்காக எழுதப்படுவதாக இருக்கும். அதாவது ஒரு thesis என்பது ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டதாக இருக்கும் (இருக்க வேண்டும்).

Antithesis என்பது ஒன்றுக்கு நேர்மாறானது. Love is the antithesis of selfishness என்றால் சுயநலத்துக்கு நேரெதிரானது அன்பு என்று பொருள் (அதாவது சுயநலமே இல்லாதது அன்பு). He is very obese – the very antithesis of his brother என்றால் அவன் பருமனாக இருக்கிறார். அவர் அண்ணனுக்கு நேரெதிர் (அதாவது அண்ணன் ஒல்லியானவர் என்பது விளங்குகிறது).

ஆங்கிலத்தில் antithesis ஆக அமைந்த பல வாக்கியங்களை நாம் அறிந்திருப்போம். சந்திரனில் முதலில் காலடி வைத்தபோது நீல் ஆம்ஸ்ட்ராங் “This is one small step for many but one giant leap for mankind” என்று சொன்னதுகூட antithesisதான். வேறு சுவையான சில antithesis வாக்கியங்களை இங்கே பார்ப்போம்.

“Man proposes, God disposes.”

“Love is an ideal thing, marriage a real thing.”

“To err is human; to forgive divine.”

“Many are called, but few are chosen.”

மார்ட்டின் லூதர் கிங் கூறிய, “We must learn to live together as brothers or perish together as fools” என்பதையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

Even though the sun is shining, I can feel the rain என்ற Roger Hodgson-னின் கூற்றும் antithesis-க்கு அழகான எடுத்துக்காட்டுதான்.

அலுவலகங்களில் ‘Performance appraisals’ எழுதும்போது antithesis பயன்படுத்தினால் நீங்கள் நேர்மையாக இருப்பதாகப் பிறர் நினைக்க வாய்ப்பு உண்டு. இதோ ஒரு எடுத்துக்காட்டு.

Although this employee is punctual, he usually does not get down to work until an hour after arriving. Although courteous to managers, he has a record of ambusing more junior staff.

ஆக ஒருவரது எதிர்மறை (நெகடிவ்) விஷயங்களைச் சுட்டிக்காட்டும்போது அவரது ஆக்கப்பூர்வமான பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறார்கள். நீங்கள் எதிர்மறை எண்ணத்தை விதைக்கிறீர்கள் என்றாலும் உங்கள் நோக்கத்தைப் பிறர் சந்தேகப்படமாட்டார்கள்.

****************

நண்பர் ஒருவரிடம் நேரம் என்ன என்று கேட்டபோது “it is ten past five o’clock” என்று பதிலளித்தார். பேச்சு வழக்கில் சிலவற்றை நாம் கூறுவது சகஜம்தான். என்றாலும் இதிலுள்ள தவறை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

முழுமையான (எண்ணிக்கை கொண்ட) மணி நேரத்தைக் குறிக்க மட்டுமே o’clock என்பதைப் பயன்படுத்த வேண்டும். 4 o’clock, 5 o’clock என்பதுபோல.

5.10 என்பதைக் குறிக்க ten (minutes) past five என்றுதான் குறிப்பிட வேண்டும்.

****************

கேட்டாரே ஒரு கேள்விக்கான விளக்கம் இது. Blatant என்ற சொல்லைப் பழங்காலத்தில் “இரைச்சலான” என்ற பொருளில்தான் பயன்படுத்திவந்தார்கள்.

ஆனால், சமீபகாலமாக blatant என்ற சொல்லை obvious என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள்.

He told a blatant lie என்றால் அவன் கூறியது ‘சந்தேகமில்லாத பொய்’. அதாவது பச்சைப் புளுகு.

மிகப் பெரும்பாலும் எதிர்மறைப் பொருள் வரும்படிதான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். Blatant attempt to gain power, blatant provocation, blatant breach of law.

****************

Firstly, at first இரண்டும் ஒரே பொருள் கொண்டவையா? ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்த முடியுமா? இது ஒரு வாசகரின் கேள்வி.

First என்றால் முதல். Who came first in the race? Name of the first person who landed on the moon.

எழுதும்போது நாம் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டால் தொடக்கத்தில் first அல்லது firstly என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம். First I would like to welcome you all.

Firstly என்பது இந்த இடத்தில் மரபுத்தனமானது. First என்பது இங்கு இயல்பான சொல்.

At first என்றால் அது ‘முதன் முதலான’ என்பதைக் குறிப்பதைவிட ‘தொடக்கத்தில்’ என்பதைக் குறிக்கிறது. அதாவது பின்னால் இடம்பெறும் ஒன்றோடு இதை contrast செய்துகாட்டுகிறோம். He called for help. No one heard him at first. But later two men came to help him.

எனவே At first I would like to welcome you என்பது தவறு.

****************

At Loggerheads

Loggerhead என்று ஒரு சொல் உள்ளது. Loggerhead என்று அழைக்கப்படும் ஒரு சிவப்பு – பழுப்பு வண்ணம் கொண்ட ஆமை ஒன்று உண்டு. சில சமயம் முட்டாளையும் loggerhead என்று குறிப்பிடுவதுண்டு (மரமண்டை).

ஆனால், at loggerheads என்பது ஒரு phrase. இதற்குப் பொருள் மிகவும் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது அல்லது கொஞ்சம்கூட ஒத்துப்போகாத நிலை. The two countries have long been at the loggerheads over the boundary.

இந்த phrase எப்படிப் பழக்கத்துக்கு வந்தது என்பதைப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் குதிரைகளை மேயவிடும்போது அவற்றின் கால்களில் கனமான மரத்துண்டுகளைப் பொருத்தி விடுவார்கள். இதன் காரணமாக அவற்றால் வெகு தூரம் செல்ல முடியாது. முக்கியமாக, வேலிகளைத் தாண்ட முடியாது. அடிக்கடி இந்த மரத்துண்டுகள் எதிலாவது சிக்கிக்கொள்ள, சில குதிரைகள் மிக அதிக நெருக்கத்தில் தொடர்ந்து நிற்கவேண்டியிருக்கும். அப்போது அவை ஒன்றின்மீது ஒன்று கடும் கோபம் கொண்டு தாக்க முயலும். இதிலிருந்துதான் அந்த phrase வந்திருக்க வேண்டும்.

ஷேக்ஸ்பியர் தன்னுடைய ‘Taming of the shrew’ என்ற நாடகத்தில் இந்த phrase-ஐப் பயன்படுத்தியிருக்கிறார். (Shrew என்றால் மூஞ்சூறு). Taming என்றால் ஒன்றின் இயல்பான கொடூர குணங்களை மாற்றி வீட்டில் வளர்க்கும் அளவுக்கு அதைச் செய்வது. Wild rabbits can be eventually tamed.

****************

# It is the most unique book. சரியா?

It is a unique book. Unique என்ற வார்த்தை comparable அல்ல.

# He is wiser than his father என்பது சரியா? He is more wiser than his father என்பது சரியா?

Double comparatives கூடாது. More வேண்டாம். Wiser போதும்.

# Verve என்றால் என்ன?

உற்சாகம்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x