Published : 22 Aug 2017 10:51 AM
Last Updated : 22 Aug 2017 10:51 AM

சலிப்புத்தட்டியதால் புதுமை படைப்பவர்!

லகத் தரம் வாய்ந்த பல வகையான கார்களை நம் ஊர் சாலைகளில் பார்க்கலாம். ஆனால், ஹைதராபாத்தில் சுதாகர் உருவாக்கி இருக்கும் ‘சுதா கார்’ அருங்காட்சியகத்துக்குப் போனால் இதுவரை நீங்கள் கற்பனை செய்துகூடப் பார்த்திராத கார்களைப் பார்க்கலாம். ஹைதராபாத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது சுதா கார் அருங்காட்சியகம்.

சிவப்பு நிறத்தில் நடுவில் தங்க நிறக் கோடுகள் மினுங்க மெகா சைஸ் கிரிக்கெட் பந்து. ஒரு பொத்தானை அழுத்த, கதவு ஒன்று திறந்தது. உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, “இது கிரிக்கெட் பந்து கார்!” என்று சொல்லி, சிறிது தூரம் ஓட்டிக் காட்டினார் சுதாகர். சிவப்பு நிறத்தில் மெகா சைஸ் கிரிக்கெட் பந்து ஒன்று உருண்டுபோவதுபோல மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதன் அருகில் ஒரு பிரம்மாண்டமான ஷூ. அதையும் ஓட்டிக் காட்டினார்.

பக்கத்தில் மினி தண்ணீர் தொட்டி சைசுக்கு ஒரு கப் அண்டு சாசர், ராட்சதக் கத்தரிக்காய், பிரம்மாண்ட ஹெல்மெட், ஆள் உயரக் கிளிக்கூண்டு, நிக்கான் கேமராவின் தத்ரூபமான மெகா சைஸ், தாமரைப் பூவில் ஒரு சிவலிங்கம். “இவையும் கார்கள்தான்!” என்றார் சுதாகர். இன்னும் தினுசுதினுசான கம்ப்யூட்டர் கார், சூட்கேஸ் கார், செல்போன் கார், பிரஷர் குக்கர் கார், கால்பந்து கார், குழந்தைகள் பயன்படுத்தும் ரப்பர் மாதிரியே ஒரு கார், பென்சில் சீவும் ஷார்ப்னர் மாதிரி ஒரு கார் என்று விதம்விதமான கார்களை உருவாக்கி இருக்கிறார் சுதாகர்.

பார்வையாளர்களும் காரணம்தான்!

விதம் விதமாக கார்களை உருவாக்கி அசத்தும் சுதாகர் ஒரு பொறியாளர் என்று நினைத்தால், அது தவறு. அவர் படித்தது பி.காம். “பள்ளி நாட்களிலேயே துளிர்த்த ஆர்வம் இது. அப்போ, எனக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். கொஞ்ச நாளில் சைக்கிள் சலிப்புத் தட்டியது. அதனால் சைக்கிளில் இருந்த ஹாண்டில்பாரை எடுத்துவிட்டு, கார்களில் பயன்படுத்தும் ஸ்டியரிங்கைப் பொருத்தினேன். என்னுடைய புது மாடல் சைக்கிளை ஓட்டிக்கொண்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனபோது, என் சைக்கிளை வேடிக்கை பார்க்க அநேக மாணவர்கள் கூடிவிட்டார்கள். வழியில் எல்லோரும் என் சைக்கிளை அதிசயமாகப் பார்ப்பார்கள்” என்கிறார். பள்ளி மாணவராக சைக்கிளில் வித்தியாசத்தைப் புகுத்திய சுதாகர், கல்லூரியில் படிக்கும்போது, மோட்டார் பைக்கில் சில புதுமையான மாற்றங்களைச் செய்தார்.

20CH_SudhacarBrinjal carright

“உங்கள் வீட்டில் இதற்கெல்லாம் ஆட்சேபிக்கவில்லையா?” என்றால், “இல்லை. அவர்கள் எனக்கு ஊக்கம் அளித்தார்கள். நாங்கள் பரம்பரையாக பிரிண்டிங் பிசினஸ்தான் செய்துவருகிறோம். எங்களுடைய அச்சகம் ஹைதராபாத்தின் முக்கிய அச்சகங்களில் ஒன்று. அதையும் நான் கவனித்துக் கொள்ளுகிறேன்” என்கிறார்.

புது விதமான கார்களை உருவாக்கும் ஐடியா எங்கிருந்து வந்தது எனக் கேட்டால்,

“சொந்தமாக ஒரு பட்டறையும் ஒரு மெக்கானிக் ஷெட்டும் இருக்கின்றன. என் மனதில் உருவாகும் ஐடியாவை, முதலில் மாதிரி வடிவமாக உருவாக்கி முன்னோட்டம் பார்ப்பேன். அதன் பிறகு, பெரிய அளவில் உருவாக்குவேன். மேலும், இந்த மியூசியத்தின் பார்வையாளர்கள் புத்தகத்தைப் பாருங்கள். பலர், என் முயற்சி, உழைப்பு போன்றவற்றுக்குப் பாராட்டுகள் தெரிவித்திருந்தாலும், இன்னும் சிலர் புது ஐடியாக்களைக் கொடுத்திருப்பார்கள். அதன் அடிப்படையிலும் நான் புதுமையான கார்களை உருவாக்குவது உண்டு” என்கிறார்.

புது கார்களின் காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தை நிறுவக் காரணமான சம்பவம் இன்னமும் சுவாரசியமாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹைதராபாத்தின் ஹூசைன் சாகர் ஏரியை ஒட்டிய டேங்க் பண்ட் ரோட்டில் ஒரு அணிவகுப்பு நடத்த போக்குவரத்துத் துறையிடம் அனுமதி பெற்றார் சுதாகர். தன்னுடைய கார்கள், மோட்டார் பைக்குகள், சைக்கிள்களின் அணிவகுப்பை நடத்தினார். லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதை ரசிக்கத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் இந்த வாகனங்கள் அணிவகுப்பை நடத்தினார். ஒவ்வொரு வருடமும், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேபோனது. தனது வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த பாராட்டில் உற்சாகம் பெற்று இந்த அருங்காட்சியகத்தை நிறுவினார்.

“ஹைதராபாத்தில் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தபோது, பில்லியர்ட்ஸ் ஆடும் மேஜை வடிவிலேயே ஒரு காரை உருவாக்கினேன். அந்தப் போட்டியில் கலந்துகொண்ட பல விளையாட்டு வீரர்களும் அந்த காரைப் பார்த்து அசந்துபோனார்கள். அவர்கள் அனைவரும் அந்த காரின் மேல் ஆட்டோகிராப் போட்டு என்னைக் கவுரவித்தார்கள்” என்கிறார்.

பொதுவாக அருங்காட்சியகம் என்றாலே பழமைவாய்ந்த பொருட்களைச் சேகரித்து மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். ஆனால், சுதாகர் புதுப்புது கார்களை வடிவமைத்து அருமையாகக் காட்சிக்கு வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x