Last Updated : 22 Aug, 2017 10:46 AM

 

Published : 22 Aug 2017 10:46 AM
Last Updated : 22 Aug 2017 10:46 AM

இது வேலை தேடித் தரும் நிறுவனம்!

ரு நிறுவனத்தின் சொத்து அதில் வேலை பார்க்கும் ஊழியர்கள். அதனால்தான் பல நிறுவனங்கள் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அதேபோல படித்த, அனுபவம் வாய்ந்த பல திறமைசாலிகள் தங்களுடைய திறமைக்கு ஏற்ற நிறுவனத்தைத் தேடுவதிலும் காலத்தைக் கழிக்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான பாலமாக ஏன் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘இன்டர்வியூ டெஸ்க்’.

பல பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் (ஹெச்.ஆர்.) 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்ற அனுபவத்தோடு ‘இன்டர்வியூ டெஸ்க்’ என்கிற வேலை வாய்ப்புக்கான நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் பிச்சுமணி துரைராஜ்.

உலகளாவிய இடைவெளி

“நிறுவனத்துக்கும் ஊழியருக்கும் இடையிலான வேலை தொடர்பான இடைவெளி என்பது இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில்கூட நிலவுகிறது. இதை நேர்மறையாக அணுகினால் வேலைவாய்ப்புத் துறையில் உள்ள குறைகளைச் சரி செய்யலாம். புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கலாம். அதில், நிறுவனங்களுக்கான தேவை, பங்களிப்பைப் போல, தனிப்பட்ட நபரின் திறமையைக் கண்டறிந்து அவருக்கான வேலையை ஏற்படுத்திக்கொடுப்பதும் அடங்கும். இதை ஒரு சேவையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்நிறுவனத்தைத் தொடங்கினோம்” என்கிறார் பிச்சுமணி துரைராஜ்.

நிறுவனங்களின் தேவை

ஒரு வேலைக்குப் பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுத்து பணி அமர்த்த நிறுவனங்களுக்கு அதிக நேரம் பிடிக்கிறது. தங்களிடம் வந்து சேரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைச் சரிபார்த்து, வடிகட்டி நேர்காணல் செய்ய வேண்டி உள்ளது. இந்த முறையில் பல குழப்பங்களும் எழுகின்றன. அவற்றைக் களையெடுத்து நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப சரியான நபர்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது ‘இன்டர்வியூ டெஸ்க்’. நிறுவனங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுப்பது மட்டுமில்லாமல் தரமான, திறமையான ஆட்களைப் பணியமர்த்தும் விதமாகவும் யோசிக்க முயல்கிறது.

“புது விதமான நிறுவனங்கள் வளர வளர வெவ்வேறு வேலைக்கான, ஆட்களுக்கான தேவைகளும் அதிகரித்துக்கொண்டே போகும். அதே நேரத்தில் குறிப்பிட்ட துறை சார்ந்த அனுபவமும் அதில் தேர்ந்த தேர்ச்சியும் உள்ள திறமையாளர்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. அப்போதெல்லாம் அந்தந்த துறை சார்ந்த அனுபவ அறிவு ரொம்பவும் அவசியம். அப்படி இருந்தால்தான் சரியான திறமையாளர்களைத் தேர்வு செய்ய முடியும். இது ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை பார்க்கும் மனிதவள அதிகாரிக்குச் சாத்தியமே இல்லாத விஷயம். அதைத் தெளிவாக அணுகும் முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் பிச்சுமணி.

புதியவர்களின் திறமை

கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு வேலை தேடும் இளைஞர்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக வழிகாட்டுகிறார்கள். பணி தொடர்பான எதிர்காலத் திட்டம் இல்லாமல் வரும் நபர்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுத்து, அவர்களின் திறமை எந்தத் துறையில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து வழி காட்டுகிறார்கள்.

“முதல் கட்டமாக, இன்ஜினீயரிங், ஐ.டி., ஆட்டோ மொபைல் ஆகிய துறைகள் சார்ந்த ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி, தேவைகளைச் சரிசெய்யும் வேலையைத் தொடங்கியுள்ளோம். அடுத்து கல்வி, ஊடகம், கட்டுமானம் சார்ந்த வேலைகளுக்கான தேவைகளை நோக்கிச் செல்லவிருக்கிறோம். இன்றைக்குக் கல்வித் துறை சார்ந்த வேலையில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர் வேறு எந்த வேலைக்கும் முயலாமல், அதே கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்.

அதனால் அந்தத் துறை சார்ந்த வாய்ப்புகள் குறித்து வெளியே தெரியாமலேயே போகிறது. இதெல்லாம் மாறினால்தான் அந்தத் துறை சார்ந்த வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள முதல் அடி எடுத்துவைத்திருக்கிறோம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x