Last Updated : 08 Aug, 2017 11:08 AM

 

Published : 08 Aug 2017 11:08 AM
Last Updated : 08 Aug 2017 11:08 AM

ஆங்கிலம் அறிவோமே 172: வெளிப்படையாகப் பேசுவோமா!

கேட்டாரே ஒரு கேள்வி

அவனா இவன், என்பதை எப்படி மொழிபெயர்க்கலாம்?

*****************

“தமிழ் சினிமாக்களில் சில ஆண்கள் தங்கள் நண்பரை ‘pro’ என்கிறார்களே. அதன் பொருள் என்ன?”

அது pro அல்ல. ​bro. Brother என்பதன் சுருக்கம். அமெரிக்காவில் இப்படிக் கூப்பிடத் தொடங்க, இங்கும் பரவிவிட்டது. சொந்தச் சகோதரர்களைவிட நண்பர்கள்தான் ஒருவரையொருவர் இப்படி அழைத்துக்கொள்கிறார்கள்.

​PRO என்பது Public Relations Officer என்பதைக் குறிக்கும்.

மற்றபடி pro என்பது professional என்பதன் சுருக்கம். விளையாட்டுத் துறையில் pro என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதாவது அந்த விளையாட்டையே முழுநேரத் தொழிலாகத் ​தேர்ந்தெடுத்தவர்கள். He is a tennis pro.

ஒரு சொல்லுக்கு முன்னொட்டாகவும் (prefix) pro என்பது இருவித அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. Ahead அல்லது forward என்பது ஒரு பொருள். Propel, propose, proactive.

In favour of என்ற பொருளிலும் pro பயன்படுத்தப்படுகிறது. Pro-democracy, pro-America என்பதுபோல.

*****************

கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை அதன் அர்த்தத்தைப் பொறுத்தது Is he the same person அல்லது Is he that person?

*****************

‘F’ என்று முடியும் எந்த ஒரு சொல்லுடனும் ‘ves’ இணைத்துப் பன்மையாக்கலாம் அல்லவா? இது ஒரு வாசகரின் கேள்வி.

பெரும்பாலும். Life - lives, knife - knives, wolf-wolves.

ஆனால், இப்படி எல்லாவற்றையும் கூறிவிட முடியாது. முக்கியமாக handkerchieves என்று சிலர் எழுதுவதைப் பார்க்கிறேன். Handkerchiefs என்பதே சரி. இதேபோல வேறு சில வேறுபாடுகளையும் கவனியுங்கள்.

Proof - Proofs

Chef - Chefs

Scarf - Scarfs

Dwarf - Dwarfs

*****************

Iron out the wrinkles என்றால் என்னவென்று கேட்கிறார் ஒரு வாசகர்.

Wrinkles என்றால் சுருக்கங்கள். கஷ்டங்களையோ கருத்து வேறுபாடுகளையோ சரி செய்வது என்ற பொருளில்தான் Iron out the wrinkles பயன்படுத்தப்படுகிறது.

Iron தொடர்பான வேறு சிலவற்றையும் பார்ப்போம்.

english 2jpg

Strike while the iron is hot என்றால் சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொருள்.

Having many irons in the fire என்றால் தேர்ந்தெடுத்துக்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று பொருள்.

ஒரே சமயத்தில் பல விஷயங்களைச் செய்வதையும் இப்படிக் குறிப்பிடுவார்கள்.

 

Iron curtain என்றால் இரும்புத்திரை என்று பொருள். ஒரு காலத்தில் சோவியத் யூனியனை A country of iron curtain என்று அழைப்பதுண்டு. வின்சென்ட் சர்ச்சில் தனது ஓர் உரையில் ரஷ்யா தன்னைச் சுற்றி ஒரு இரும்புத் திரை போட்டுக்கொண்டுள்ளதாகவும், இதனால் கிழக்கு ஐரோப்பாவும் மேற்கு ஐரோப்பாவும் பிரிந்து கிடக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

Blood and iron என்றால்?

தொடர்ந்து அதிகாரத்தைப் பயன்படுத்துதல் என்று பொருள். People do not like rulers who follow the policy of blood and iron.

*****************

Relented என்றால் என்ன?

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே, அதை relented என்று கூறலாம். அதாவது ஒருவரிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளும் நீங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அந்தக் கண்டிப்பைத் தளர்த்திக்கொள்கிறீர்கள். Relented.

இதற்கு முன்னால் ஒன்றை ஏற்க அல்லது அனுமதிக்க மறுத்துவந்த நீங்கள் அதில் கொஞ்சம் தாராளம் காட்டத் தொடங்குகிறீர்கள். Relented.

Her parents eventually relented and allowed her to go to the party.

They were going to refuse his request, but relented.

*****************

“நாளிதழ்களில் வணிகப் பகுதியில் cartel என்ற சொல் அவ்வப்போது தென்படுகிறது. இதற்குப் பொருள் என்ன?” எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.

பொதுவாக வியாபாரத்தில் போட்டி அதிகமானால் பொருளின் விலை குறையும். இதுதான் இயற்கை. இப்படிப் போட்டிபோடுவதால் தங்கள் அனைவருக்குமே நஷ்டம் உண்டாகும் (அல்லது லாபம் குறையும்) என்பதால் போட்டி நிறுவனங்கள் (அல்லது அவற்றில் சில) தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

“என்னதான் போட்டி என்றாலும் இந்தக் குறிப்பிட்ட விலையைவிட நாம் குறைவாக விற்கக் கூடாது” என்ற வாய்வழி ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். இந்தக் கூட்டமைப்பை cartel என்பார்கள். சில சமயம் புதிதாகத் தோன்றியுள்ள போட்டி நிறுவனத்துக்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்ற நோக்கத்துக்காகவும் cartel உருவாவதுண்டு.

ஆக cartel என்பது பெரும்பாலும் நிறுவனங்களின் நலன் தொடர்பானது; பொதுமக்களின் நலனுக்கு எதிரானது.

*****************

தொடக்கம் இதுதான்

Frank என்றால் வெளிப்படையாக, நேர்மையாக என்று பொருள். Let us have a frank talk என்பதுண்டு. Frank என்று எதனால் இதைக் குறிப்பிடுகிறோம் என்பதற்கு ஒரு பின்னணி உண்டு.

அந்தக் காலத்தில் பெரும்பாலான ஜெர்மானிய மக்கள் அவர்களது முக்கிய ஆயுதத்தைக் கொண்டு பெயரிட்டு அழைக்கப்பட்டனர். SAX என்பது ஒரு சிறிய வாள். இதைப் பயன்படுத்தும் இனத்தவர் Saxons என்று அழைக்கப்பட்டனர். Frankon என்பது ஒரு வகை ஈட்டி. இதைத் தங்களது விருப்ப ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள் Francs என்று அழைக்கப்பட்டனர்.

இவர்கள் தங்களது சுதந்திரத்தையும் - முக்கியமாக மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசும் சுதந்திரத்தையும் பெரிதும் மதித்தனர். அதில் பெருமை கொண்டனர். அப்போதிலிருந்து ‘உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாததை ‘Frank’ என்று அழைக்கத் தொடங்கினர்.

சிப்ஸ்

Supposing if he does not come what will we do என்று ஒருவர் கேட்டார்.

இது சரியா?

ஒரே வாக்கியத்தில் supposing, if ஆகிய இரண்டும் இடம்பெறுவதில்லை.

If he does not come what will we do என்பதே போதுமானது.

தொலைபேசியில் பேசும்போது ‘Can you hear me?’ என்கிறார்களே.

இதை வேறு எப்படிக் குறிப்பிடலாம்.

Am I audible?

நாவல் அல்லது புதினம் என்றால் novel. குறுநாவல் என்றால்?

Novella.

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x