Published : 05 Jul 2016 11:54 AM
Last Updated : 05 Jul 2016 11:54 AM

வேலை வேண்டுமா?- படிப்பு, பயிற்சியோடு வேலையும் தரும் அரசு வங்கி

வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டியால் தனியார் துறைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அரசு வங்கிகள் பணியாளர்களையும், அதிகாரிகளையும் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தி வருகின்றன. அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும், அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS- Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதுபோன்ற நியமனங்கள் ஒருபுறம் மும்முரமாக நடக்க, ஒருசில வங்கிகள் முதலில் தகுதியான நபர்களைத் தேர்வுசெய்து அவர்களை வங்கி சம்பந்தப்பட்ட படிப்பைப் புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களில் படிக்க வைத்து அதன் பிறகு அவர்களை வங்கி அதிகாரிகளாக நியமித்துக்கொள்கின்றன.

அந்த வகையில், பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியைத் தொடர்ந்து யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியும், வங்கி மற்றும் நிதிச்சேவை குறித்த முதுகலைப் பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Banking and Finance) படிக்கவைத்துப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வங்கி அதிகாரி (Probationary Officer) பணி வழங்க முன்வந்திருக்கிறது.

அடிப்படைத் தகுதிகள்

என்ஐஐடி இன்ஸ்டிடியூட் ஆ பைனான்ஸ், பேங்கிங், இன்சூரன்ஸ் டிரெய்னிங் என்ற புகழ்பெற்ற வங்கி கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஓராண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு 100 பேர் தேர்வுசெய்யப்படுவார்கள்.

ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பட்டயப் படிப்புக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியில் நடத்தப்படும் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு (வங்கிச் சேவைத் தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம்) ஆகியவற்றில் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வை ஆகஸ்ட் 7-ம் தேதி நடத்த உத்தேசித்துள்ளனர்.

சம்பளத்தோடு பயிற்சி

இந்த ஓராண்டு கால டிப்ளமா படிப்பை முடித்து யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நேரடியாக அதிகாரி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் அந்த வங்கியின் இணையதளத்தின் (www.unitedbankofindia.com) மூலம் ஜூலை 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். (வங்கியின் இணையதளப் பக்கத்தில் “Recruitment” என்ற பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்).

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் படிப்புக் கட்டணமாக ரூ.3.20 லட்சம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியானது, மிகக் குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும். படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த பின்னர்க் கடனை மாதாந்திர தவணையில் செலுத்திவிடலாம்.

மேலும், பயிற்சிக் காலத்தில் முதல் 9 மாதங்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகையும், 3 மாத கால இன்டர்ன்ஷிப் காலத்தில் மாதம் ரூ.12 ஆயிரமும் உதவித் தொகையாகவும் வழங்குவார்கள். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவார்கள்.

அப்போது சம்பளம் ரூ.55 ஆயிரம் கிடைக்கும். 5 ஆண்டு பணியை முடித்த பின்பு இந்த கல்விக்கடன் தொகை போனஸாக திருப்பி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத்தேர்வுக்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் இலவசப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுமுறை, பாடத்திட்டம், பயிற்சி, பணி நியமனம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x