Published : 15 Sep 2014 02:09 PM
Last Updated : 15 Sep 2014 02:09 PM

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?

தகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.

தன்னம்பிக்கைக்கான பண்புகள்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கீழ்க்காணும் பண்புகள் வேண்டும்.

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்.

2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.

3. சுயபச்சாதாபம் கொள்ளாதீர்கள்.

தோல்வி வந்தால் இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். சிந்திக்கத் சிந்திக்க தெளிவு பிறக்கும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சயப் பாத்திரமாக மாறும். வெற்றி உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும்.

ஆனால் தோல்வி தான் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். தோல்விக்குப் பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் அதிகமாகிறது.

அத்துடன் சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ளும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

தொடர் முயற்சி

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதையின் உள்ளே விருட்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாகப் பரிபூரண

ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அவற்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயல முயல வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும் (Technical Skills), மனித உறவுத்திறனும் (Human Relation Skills) உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்!

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு லட்சியச் சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.

கட்டுரையாளர் ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறைத்தலைவர்,
kavi@roots.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x