வெற்றி முகம்: சுதந்திரமாகப் படித்து ஐ.ஐ.டி.க்குள் நுழைந்தவர்!

அர்ஜுனை கவுரவிக்கும் தேசிய திறந்தநிலைப் பள்ளியின் சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி. அருகில் மாணவரின் தந்தை கேப்டன் பரத் நியாஸ்.

Published : 20 Jun 2017 11:32 IST
Updated : 20 Jun 2017 11:32 IST

படிப்பில் சிறந்து விளங்கும் பிளஸ் டூ மாணவர்கள் பலரது கனவு, ஐ.ஐ.டி.யில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.களில் பி.டெக். படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 11 ஆயிரத்துக்கும் குறைவுதான். ஆனால், இந்த இடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் முட்டிமோதுகிறார்கள். ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு இறுதி ஆண்டு படிக்கும்போதே முன்னணி நிறுவனங்களிலும் பன்னாட்டு கம்பெனிகளிலும் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. அதனால்தான் இந்த அளவுக்குக் கடும் போட்டி.

கனவை நிறைவேற்றும் வழி

தனியார் பயிற்சி மையங்களிலும் மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில மாணவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் நடப்புக் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் (ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு) கடந்த வாரம் வெளியானது. ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தத் தேர்வில் 50,455 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் சென்னை மாணவர் அர்ஜுன் பரத் அகில இந்திய அளவில் 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தமிழக அளவில் இவருக்குத்தான் முதலிடம். விஷயம் இதுவல்ல. அர்ஜுன் பரத், பள்ளி சென்று பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கவில்லை. இவர் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் (National Institute of Open Schooling) வழியாகப் படித்தவர். வழக்கமாகப் பள்ளி சென்று படித்த மாணவர்களுடன் போட்டிபோட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அர்ஜுன்.

“10-ம் வகுப்புவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்தேன். ஐ.ஐ.டி.யில் சேரும் கனவை நிறைவேற்ற வழி தேடினேன். அதன் நுழைவுத் தேர்வுக்குத் தயாராக நிறைய நேரம் தேவைப்படும். ஆகையால் தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டம் பற்றித் தெரியவந்தது. அதன் பாடத்திட்டத்தில் 75 சதவீதம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம். 2 ஆண்டுகளில் ஒரு புறம் பிளஸ் டூ முடித்துவிடலாம். இன்னொரு புறம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கும் தயாராகிவிடலாம் என்று திட்டமிட்டேன். எனது இந்தப் புதிய திட்டத்துக்குப் பெற்றோர் பெரிதும் ஊக்கம் அளித்ததோடு பக்கபலமாகவும் இருந்தனர்” என்கிறார் அர்ஜுன்.

அதிக நேரம் கிடைத்தது

அவருடைய தந்தை என்.எஸ். பரத், மெர்ச்சன்ட்ஸ் நேவியில் கேப்டனாகப் பணிபுரிகிறார். தாயார் அமிர்தா, இல்லத்தரசி. வழக்கமான பள்ளியில் படிக்காமல் திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்தபோது, சக மாணவர்களோடு பழகும் வாய்ப்பு போன்ற சமூகத் தொடர்புகளை இழந்தாரா எனக் கேட்டபோது, “நிச்சயம் அது இழப்புதான். இருந்தாலும் நேரடி, செய்முறை உள்ளிட்ட வகுப்புக்குச் செல்லும்போது, என்னைப் போன்று வந்த மாணவர்களுடன் பேசிப் பழக முடிந்தது. தேசிய திறந்தநிலைப் பள்ளித் திட்டத்தில் படித்ததன் காரணமாக எனக்கு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயாராக அதிக நேரம் கிடைத்தது. பள்ளி சென்று படித்திருந்தால் இந்த அளவுக்குக் கூடுதல் நேரம் கிடைத்திருக்காது” என்கிறார் அர்ஜுன்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்காகத் தயாராகும்போதே நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அர்ஜுனுக்கு இருந்தது. ஆனால், அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்துத் தமிழக அளவில் முதல் மாணவராக வருவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. இனி சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்புகிறார். 26-வது ரேங்க் பெற்றிருப்பதால் அவரது ஆசை எளிதாக நிறைவேறும்.

விருப்பப்படி படிக்கலாம்

அர்ஜுன் பரத்தைச் சாதனை மாணவர் ஆக்கிய தேசியத் திறந்தநிலைப் பள்ளி கல்வி நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் பி.ரவி கூறுகையில், “பொதுவாகவே திறந்தநிலைக் கல்வித் திட்டம் என்றாலே கல்வித் தரம் குறைவாக இருக்கும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். அதேபோல பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள்தான் இதுபோன்று திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் சேருவார்கள் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது. தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கல்வி நிறுவனம். தேசியக் கல்வித் திட்டம் -2005 (National Curriculum Framework-2005) வழிகாட்டி நெறிமுறைகளின்படி உருவான பாடத்திட்டம் இங்கே பின்பற்றப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையானது இது. தரமான கல்வியை விருப்பப்படி படிக்கும் முறைதான் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை. இதில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை அவர்களே தேர்வுசெய்துகொள்ளலாம்” என்கிறார்.

சுதந்திரமான தேர்வு முறை

திறந்தநிலைக் கல்வித் திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்திலும் தேர்வு எழுதும் வசதியும் (On Demand Exam-ODE) உண்டு. பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய இரண்டு பாடங்களையும் உள்ளடக்கியதுதான் இதில் பிளஸ் டூ பொதுத்தேர்வு.

சுயமாகப் பாடங்களைப் படிக்கக்கூடிய வகையிலான புத்தகங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. “இதில் அனைத்துப் பாடங்களையும் ஒரே நேரத்தில் எழுத வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பாடமாகவோ இரண்டு பாடங்களாகவோகூட எழுதிக்கொள்ளலாம். தற்போது ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ள அர்ஜுன் 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் வந்தார். 10-ம் வகுப்புவரை பள்ளி மாணவராக இருந்த அவர், சுதந்திரமாகப் படிக்க விரும்புவதாகச் சொன்னார். தேசியத் திறந்தநிலைக் கல்வித் திட்டம் குறித்து அவரிடம் எடுத்துச்சொன்னோம். நம்பிக்கையோடு சேர்ந்து படித்தார்” என்கிறார் ரவி.

தரமான பாடத்திட்டம், விருப்பமான பாடங்களைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு, விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக்கொள்ளும் வசதி இப்படிப் பல்வேறு வசதிகள் இருந்தும் தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வி முறை குறித்துத் தமிழக மாணவர்கள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரைதான் இதில் சேருகிறார்கள்.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு, அடுத்துப் பொறியியல் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்று கல்விச்சூழல் மாறிவரும் நிலையில், தேசியத் திறந்தநிலைப் பள்ளிக் கல்வித் திட்டமானது வருங்காலத்தில் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று உறுதிபடக் கூறுகிறார் ரவி.

Keywords
More In
Please Wait while comments are loading...
This article is closed for comments.
Please Email the Editor