Last Updated : 11 Aug, 2015 12:31 PM

 

Published : 11 Aug 2015 12:31 PM
Last Updated : 11 Aug 2015 12:31 PM

லெட்சுமிநரசு: கவனம் பெறாத முன்னோடி சுதந்திரப் போராளி

தோட்டம் என்று முன்பு அழைக்கப்பட்ட இடத்துக்கும் பெரம்பூர் பாரக்ஸ் சாலைக்கும் இடையே சதலு தெரு என்றொரு தெரு இருக்கிறது. அதன் கஜுலு சித்லூ செட்டியாரின் பெயரிலிருந்துதான் அந்தத் தெருவுக்கு அந்தப் பெயர் வந்தது. அவரும் அந்தப் பகுதியில்தான் வாழ்ந்திருக்கக் கூடும். இண்டிகோ சாயத் தொழில் மற்றும் ஜவுளித் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர் அவர். அடைந்த உயரம் காரணமாக மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் இந்தியர் அவர்தான் என்ற தகவலே அவருடைய தொழிலில் அவர் அடைந்திருந்த உச்சத்தை நமக்குப் புலப்படுத்தும்.

1836-ல் மெட்ராஸ் சேம்பர் உருவாக்கப்பட்டது. இதற்காக பின்னி மில்லில் ஒரு கூட்டம் நடைபெற்றது. (அப்போதைய) மெட்ராஸில் இருந்த முன்னணி பிரிட்டிஷ் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் போன்றவற்றிலிருந்து 18 ஐரோப்பியர்களைக் கொண்டு இந்த சேம்பர் உருவாக்கப்பட்டது. அப்போதைய ஆளுநர் சர் ஃபிரெடெரிக் ஆடம் வேறொரு யோசனையைத் தெரிவித்தார்.

வணிகத் துறை சாராத ஐரோப்பியர்களையும் இந்த அமைப்பில் இணைத்துக் கொள்ளலாம் என்றார் அவர். “சென்னை மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் பெருவணிகர்களையும் இந்த அமைப்பில் சேர்த்தால் நான் மகிழ்வேன்” என்றும் அவர் தெரிவித்தார். சர் ஃபிரடெரிக் கருத்து தெரிவித்த சில நாட்களுக்குள் சித்லூ செட்டி அந்த அமைப்பின் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அடுத்த ஆண்டு, சி, திரூசாமி என்பவர் இந்த அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆனாலும், கஜ்லூ சித்லூ செட்டியைவிட வணிகத்தில் பிரகாசித்து 19-ம் நூற்றாண்டின் முற்பாதியில் மிக முக்கியமான தொழிலதிபர்களுள் ஒருவராக விளங்கியது அவருடைய மகன் கஜுலு லட்சுமிநரசு செட்டிதான். மெட்ராஸ் மாகாணத்தைத் தாண்டியும் அவர் பிரபலமானதற்கு வணிகத்தைவிட முக்கியமான காரணங்கள் சமூகப் பணிகளும் அரசியல் செயல்பாடுகளும்தான்.

தனது அரசியல் செயல்பாடுகளுக்காக தனது தொழில் நலன்களை லட்சுமிநரசு இழந்திருக்கிறார். ‘மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்’ என்ற அமைப்பை 1852-ல் நிறுவியதுதான் அவரது அரசியல் செயல்பாடுகளில் முதலாவது. அநேகமாக இந்தியாவின் முதல் அரசியல் அமைப்பு அதுவாகத்தான் இருக்கும். சில ஆண்டுகள் கழித்து, தள்ளாடிக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையை வாங்கி ‘த மெட்ராஸ் கிரசென்ட்’ என்று அதற்குப் பெயரிட்டார்.

1854-ம் ஆண்டிலிருந்து வாரம் இருமுறை இதழாக அது வெளிவர ஆரம்பித்தது. மிஷனரிகளின் ‘தி ரெக்கார்டு’ என்ற பத்திரிகைக்கு எதிர்க் குரலாக ‘தி கிரசென்ட்’ பத்திரிகை வெளிவந்தது. அதற்கும் முன்னதாக, தமிழில் அவர் ஒரு இதழை ஆரம்பித்து நடத்தினார். மிஷனரிகள் குறித்து ‘மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷ’னும் லட்சுமிநரசுவும் கொண்டிருந்த கருத்துக்களின் வெளிப்பாட்டுக் களமாக அந்தத் தமிழ் இதழ் இருந்தது.

அரசுப் பள்ளிகளில் பைபிளை அறிமுகப் படுத்துவதைத் தடுப்பதில் அவரும் வழக்கறிஞர் ஜான் புருஸ் நார்ட்டனும் வெற்றி கண்டனர்.

புலனாய்வு இதழியலில் ‘தி கிரசென்ட்’ ஒரு முன்னோடி. இந்த இதழின் மூலம் பிரிட்டிஷ் நாடாளுமன்ற எதிர்க் கட்சியைச் சேர்ந்த டேன்பி சேமோரை லட்சுமிநரசு இந்தியாவுக்கு வரச் செய்தார். உள்ளூர் விவசாயிகளை நிலபிரபுக்கள் எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பதை சேமோர் கண்டார். சேமோரை அழைத்துக்கொண்டுபோய் எல்லா அவலங்களையும் லட்சுமிநரசு காண்பித்தபோது நிலபிரபுக்களின் அட்டூழியங்களைக் கண்டு சேமோர் அதிர்ந்துபோனார். இதுகுறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கீழவையில் கடுமையான கேள்விகளை சேமோர் எழுப்பினார். அதன் விளைவாக ‘சித்ரவதை குறித்த கமிஷன்’ 1854-ல் அமைக்கப்பட்டது. நிலைமையை மேம்படுத்த அந்த கமிஷனின் அறிக்கைகள் அதிகம் உதவவில்லை என்றாலும் தொழிலாளர்களின் நாயகனாய் லட்சுமிநரசு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்தது.

‘தி கிரசென்ட்’ இதழ் வெளியிட்ட புலனாய்வு கட்டுரைகள், செய்திகளின் பின்னணியில் அரசாங்கத்துக்குள் ஒரு கையாள் இருப்பதை கவர்னர் கண்டறிந்தார். அந்தக் கையாள் மூலமாக ‘தி கிரசென்ட்’ இதழுக்கு ரகசியத் தகவல்கள் கசிவது தெரிந்ததும் அரசும் பிரிட்டிஷ்காரர்களும் அந்த இதழுக்கு விளம்பரம் தருவதை நிறுத்திக்கொண்டார்கள். அந்த இதழை மூட வேண்டியதாக ஆயிற்று. உடனடியாக லட்சுமிநரசு ‘தி ரைஸிங் சன்’ என்ற இதழை ஆரம்பித்தார். அதன் மூலமாக எண்ணற்ற செயல்பாடுகளை மேற்கொண்டார்.

1863-ல் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினராகலெட்சுமிநரசு ஆனார். இந்தச் சிறப்பைப் பெற்ற இரண்டாவது இந்தியர்அவர். அதே ஆண்டு அவரது இதழும் முடிவுக்கு வந்தது.

- தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானதை
|சுருக்கமாகத் தமிழாக்கியவர்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x