Last Updated : 09 Jun, 2015 12:50 PM

 

Published : 09 Jun 2015 12:50 PM
Last Updated : 09 Jun 2015 12:50 PM

மாநிலங்களை அறிவோம்: மேகங்களின் தாயகம்- மேகாலயா

புதிய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் இங்கே வசித்துள்ளனர். காசி, காரோ மலைகளில் அதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூர்வகுடி மக்களான காசி, ஜெய்ன்தியாஸ் மற்றும் காரோ பழங்குடியினரின் சுயாட்சிப் பகுதிகளாக இவை இருந்தன. பின்னர் 19-வது நூற்றாண்டில்தான் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ஆங்கிலேயர் அசாமுடன் மேகாலயாவை 1835-ல் இணைத்தனர்.

மாநில அந்தஸ்து

நாடு விடுதலை அடைந்தபோது இன்றைய மேகாலயா அசாமுக்கு உள்ளேயே இரண்டு மாவட்டங்களாக இணைந்து இருந்தது. தனியாக ‘மலை மாநிலம்’ அமைக்கக் கோரி 1960-ல் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969-ல் கொண்டுவரப்பட்டது. அசாமில் இருந்து பிரிந்து தன்னாட்சி பெற்ற பிரதேசமாக மேகாலயா 1970 ஏப்.2-ல் உதயமானது.

வடகிழக்கு மாநிலங்களின் மறுசீரமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் 1971-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மேகாலயா தனி மாநில அந்தஸ்தை 1972 ஜனவரி 21-ல் பெற்றது. வடகிழக்கின் 7 சகோதரிகள் என வர்ணிக்கப்படுகிற ஏழு மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்றானது.

தெற்கிலும் மேற்கிலும் வங்கதேச நாடும் மற்ற பகுதிகளில் அசாம் மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. வங்கதேசத்துக்கும் மேகாலயாவுக்கும் இடையே 440 கி.மீ. தூரத்துக்கு எல்லை அமைந்துள்ளது. மேகாலயாவின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் காடுகள்தான்.

கிறிஸ்தவர்கள்

மக்கள் தொகை 29.64 லட்சம். எழுத்தறிவு 75.48 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மூன்று மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்குள்ள மக்களில் 70.25 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். இந்து மதத்தை 13.27 சதவீதம் பேரும் இஸ்லாமை 4.27 சதவீதம் பேரும் மற்ற மதங்களை 11.90 சதவீதம் பேரும் பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

ஆங்கிலம் அலுவல் மொழியாகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. மக்களால் பேசப்படும் மொழிகளில் முக்கியமானவை காசி, காரோ. காசி மொழியில் பயன்படுத்தப்படும் அனேக வார்த்தைகள் இந்தோ – ஆரிய, நேபாள, வங்க, அசாமிய மொழிகளில் இருந்து தருவிக்கப்பட்டவை. காரோ மொழி கோச், போடோ மொழியின் நெருக்கமான வடிவமாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, பினார், பியாட், நேபாளி மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.

தாய் வழி சமூகம்

மேகாலாயாவின் மண்ணின் மைந்தர்களாக, காசிஸ், ஜெய்ன் தியாஸ், காரோ இன மக்கள் உள்ளனர். இவர்களின் பண்பாடு தனித்துவமானது. பண்டைக்காலச் சமூக முறையான தாய்வழிச் சமூகத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த இனக் குழுக்களை டேவிட் ராய் என்பவர் ஆய்வு செய்துள்ளார். ‘‘இந்தச் சமூகத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆண் இருக்கிறான். குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திர மாகப் பெண் இருக்கிறார்’’ என்கிறார் அவர்.

சொத்துகளைப் பெண்களே நிர்வகிக்க வேண்டும். அவர்களே வயதான பெற்றோர்களையும் மணமுடிக்காதவர் களையும் பாதுகாக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பிறக்காத வீடுகளில் தத்து எடுப்பதும் அல்லது மருமகளாக வரும் பெண்களிடத்தில் குடும்பத்தின் பொறுப்புகளை ஒப்படைப்பதும் இவர்களின் சமூகக் கட்டமைப்பாக உள்ளது. தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு மேகாலயாவில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

வேளாண்மை

வேளாண்மையில் 80 சதவீத மக்கள் ஈடுபடுகின்றனர். நெல், சோளம் முதன்மை பயிர்களாக உள்ளன.

உருளை, இஞ்சி, மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கொய்யா, வாழை, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்கள், தேயிலை, முந்திரி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், தக்காளி, கோதுமை, காளான் ஆகியவை மேகாலயாவின் முக்கியமான பயிர்கள்.

மேகாலயாவில் அதிக எண்ணிக்கையிலான ஆறுகள் உள்ளன. நிலக்கரி, சுண்ணாம்பு, கிரானைட், களிமண் உள்ளிட்ட தாதுக்கள் நிரம்பிய பூமியாக மேகாலயா உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் வளம்பெற உதவுகிறது. இங்கே விளையும் மஞ்சள் உலகில் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள்

நடனங்களால் தங்களைத் தனித்துவ மிக்கவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் காசி இன மக்கள். பாம் கானா, சா சக், மைன்சியம், செங்குத், ஸ்நெம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்.

ஜெய்ன்தியாஸ் இன மக்கள்

மனிதன் – கலாச்சாரம் – இயற்கை ஆகியவற்றின் சமநிலையைப் பராமரிக்கும் வகையிலான விழாக்களையே கொண்டாடு

கின்றனர். இதில் சமூக இணக்கமும் ஒற்றுமையை வலியுறுத்தும்படியான அம்சங்களும் மேலோங்கி இருக்கும். புலித்திருவிழா, பாம் பலார், பாம் தோ, ராங் பிலிகான், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் இவர்களுக்கானவை.

காரோ மக்களின் முக்கியமான பண்டிகை டென் பிளஸ்ஸியா, வாங்கலா, ரோங்குச்சு கலா, ஜமங் சாய் உள்ளிட்ட 15 வகைத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

இவர்களின் பழங்குடிப் பண்பாட்டின்மீது கிறிஸ்துவம் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை மூன்று இன மக்களும் பொதுவானதாகக் கொண்டாடுகின்றர்.

சுற்றுலா தேசம்

சுருள் சுருளாய் மேகக் கூட்டங்கள் தவழும் பள்ளத்தாக்குகள், எங்கும் பசுமை, முடிவுறா மலைத்தொடர்கள், நீர் வீழ்ச்சி, அடர்த்தியான காடுகள் என்று உலகைக் கவரும் சுற்றுலா வளத்தைக் கொண்டது மேகாலயா. நோகாளிகை அருவி, ஸ்வீட் அருவி, வேர்ட்ஸ் வேக், லேடி ஹைதரி பூங்கா, இயற்கையாகவே அமைந்த சுண்ணாம்புப் பாறை, மண் குகைகள் உள்ளிட்டவை பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.

மேகாலயா என்றால் மேகங்களின் தாயகம் என்கிறது சமஸ்கிருதம். மேகங்களைப் போர்த்தியபடி படர்ந்து கிடக்கும் இந்தப் பசுமைப் பிரதேசம் இயற்கை வாசம் செய்யும் தேசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x