Last Updated : 16 May, 2017 10:07 AM

 

Published : 16 May 2017 10:07 AM
Last Updated : 16 May 2017 10:07 AM

பிளாஸ்டிக் பிரச்சினைக்கு ஒரு தூரத்து ஒளி

பொதுவாகத் தென்படும் பூச்சியொன்றின் தோற்றுவளரிகள் (லார்வா) பிளாஸ்டிக்கைச் செரிக்கக்கூடிய விசித்திர இயல்பைப் பெற்றிருக்கின்றன என்பதை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் மிக மோசமான மாசுக்களில் ஒன்றான பிளாஸ்டிக் மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போவதை இந்தக் கண்டுபிடிப்பு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது.

மெழுகுப் புழு (Wax worm) என்ற ஒருவகைக் கம்பளிப்புழுவை மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்துவார்கள். இந்தப் புழு தேன்மெழுகை உண்ணக்கூடியது என்பதால் மெழுகுப் புழு என்ற பெயர் இதற்கு வந்தது. இந்தப் புழு பாலித்தீனின் வேதிப் பிணைப்புகளை எளிதில் உடைக்கக்கூடியதாக இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஸ்பானிய தேசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஃபெதெரிக்கா பெர்தோக்கீனி என்ற அறிவியலாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூச்சிகளின் விசித்திர இயல்புகளைத் தற்செயலாகக் கண்டறிந்தார். பெர்தோக்கீனியின் மனைவி தொழில்முறை சாராத தேனீ வளர்ப்பாளர். தேனடைகளிலிருந்து பலமுறை புழுக்களைக் களைந்து ஒரு பிளாஸ்டிக் பையில் அவற்றைப் போட ஆரம்பித்தார்.

கூடிய விரைவிலேயே அந்தப் புழுக்களெல்லாம் பிளாஸ்டிக்கை உண்ண ஆரம்பிக்க, பைகளில் துளைகள் விழ ஆரம்பித்தன. இதைக் கண்டதும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சகாக்களான பாவ்லோ பாம்பெல்லியையும் கிறிஸ்டோபர் ஜே. ஹவ்வையும் தொடர்புகொண்டார்கள். சமீபத்தில் ‘கரண்ட் பயாலஜி’ என்ற ஆய்விதழில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில், அந்தப் புழுக்களால் பிளாஸ்டிக்கை எப்படிச் செரிக்க முடிகிறது என்பதைக் குறித்து கண்டுபிடித்ததை விளக்கியுள்ளார்கள்.

இந்தப் புழுக்களெல்லாம் பிளாஸ்டிக்கின் வேதிப் பிணைப்பைச் சிதைக்கின்றனவா அல்லது வெறுமனே பிளாஸ்டிக்கைச் சிறிய துணுக்குகளாக மட்டும் உடைக்கின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்று ஒரு பேட்டியில் ஹவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விக்குப் பதில் கண்டுபிடிப்பதற்காகத் தோற்றுவளரிகளை அரைத்து பிளாஸ்டிக்கின் மேல் தடவினார்கள். அப்படிச் செய்ததன் மூலம், பூச்சிகளின் உள்ளிருக்கும் வேதிப்பொருட்களோ வேதிப்பொருள் கலவைகளோதான் பிளாஸ்டிக் சிதைப்புக்குக் காரணமாகின்றன என்பதைக் கண்டறிய முடிந்தது.

“ஏதோ நொதிகள்தான் (என்ஸைம்) இதற்குக் காரணம் என்று நினைக்கிறோம்” என்றார் ஹவ். இந்த நொதிகளைப் புழுக்கள் உற்பத்தி செய்கின்றனவா, அல்லது புழுக்களின் வயிற்றில் இருக்கும் பாக்டீரியா உற்பத்திசெய்கின்றனவா என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை” என்றார் ஹவ்.

பிளாஸ்டிக் மூலக்கூறுகளின் மையத்தில் உள்ள கரிம அணுக்களை அந்த புதிரான ஒரு நொதியோ அல்லது பல நொதிகளோதான் உடைத்துச் சிறிய மூலக்கூறுகளாக ஆக்குகின்றன என்கிறார் ஹவ். அந்தச் சிறிய மூலக்கூறுகளைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை என்றாலும், அவற்றை மறுசுழற்சி செய்வது மிக எளிதானது என்று தெரிகிறது.

அடுத்ததாக, வேதிப் பிணைப்புகளை உடைக்கும் வினைகளைத் சரியாகக் கண்டறியும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபடுவார்கள். இதற்காகப் புழுக்களின் வயிற்றிலிருந்து பெறப்பட்டவற்றைத் தனித்தனி வேதிப்பொருட்களாகப் பிரிக்க முயல்வார்கள். இந்த வேதிவினைக்குக் காரணமான நொதியை அவர்களால் பிரித்தெடுக்க முடிந்தால், அதற்கு அடிப்படையான மரபணுவை (ஜீன்) பிரித்தெடுத்து அதை பாக்டீரியாவுக்குள் செலுத்த முடியும். புழுக்களை வளர்ப்பதைவிட இது எளிது. இதன் தொடர்ச்சியாக உயிரித்தொழில்நுட்பச் செயல்பாட்டுக்கு அடிப்படையாக பாக்டீரியாவைப் பயன்படுத்த முடியும் என்று ஹவ் கூறுகிறார்.

ஆயினும், இந்தப் பரிசோதனைகளுக்கு வெற்றி கிடைக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்றும் ஹவ் எச்சரிக்கிறார்.

“ஆறு மாத காலத்துக்குள் இந்த உலகத்தின் பிளாஸ்டிக் பிரச்சினைக்கு எங்களால் தீர்வு கண்டுவிட முடியாது. ஆகவே, தீர்வுதான் சில மாதங்களில் கிடைக்கப்போகிறதே என்று எல்லோரும் சரமாரியாக பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தித் தூக்கியெறிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார் ஹவ்.

- நியூயார்க் டைம்ஸ்,
சுருக்கமாகத் தமிழில்: தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x