Published : 11 Apr 2017 11:17 AM
Last Updated : 11 Apr 2017 11:17 AM

பிரக்ஸிட் 1.0 தெரியுமா உங்களுக்கு?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் நிகழ்வு பெரும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், பிரிட்டன் பிரதமர் தெரெஸா மே தன் கைவசம் என்னென்ன யோசனைகளை வைத்திருந்தாலும் ஐரோப்பியக் கண்டத்திலிருந்து பிரிட்டன் முதல் முறை பிரிந்தபோது நிகழ்ந்த பேரழிவு அளவுக்கு அவை ஏற்படுத்தாது என்றே நம்பலாம்.

பிரம்மாண்டமான அருவிகளும், பிற்பாடு, பெருவெள்ளமும் பிரிட்டனை எப்படி பிரான்ஸிலிருந்து துண்டித்தன என்பதைப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது. இந்தத் துண்டிப்பின் காரணமாக பிரிட்டன் தீவுகளும் அகழி போன்ற ஆங்கிலக் கால்வாயும் உருவாயின.

உடைக்கப்படாமல் இருந்திருந்தால்!

“ நில அமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகள் காரணமாக பிரிட்டன் ஒரு தீவானது” என்று சஞ்சீவ் குப்தா கூறுகிறார். இவர் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் நில அறிவியல் (Earth Science) பேராசிரியராக இருக்கிறார். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரையின் இணை ஆசிரியரும்கூட.

“இந்த நிகழ்வுகளெல்லாம் நடக்காமல் போயிருந்தால் பிரிட்டனின் வரலாறே முற்றிலும் வேறாக இருந்திருக்கக்கூடும்” என்றும் அவர் சொல்கிறார். பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் இருந்த நிலமுகடு (ridge) உடைக்கப்படாமல் இருந்திருந்தால் வடக்கு பிரான்ஸுடன் இணைந்தே பிரிட்டன் இருந்திருக்கும். அதன் மூலம் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் எளிதில் உறவு கொண்டிருந்திருக்க முடியும்.

‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. குப்தாவும் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த அவரது சகாக்களும் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், ஆங்கிலக் கால்வாயின் தரைப்பகுதி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றைத் தற்போதைய ஆய்வு கணக்கிலெடுத்துக்கொண்டது. மேலும், கடலில் டோவர் நீரிணைக்கு அடியில் உள்ள நிலப்பரப்புக்கென்று துல்லியமாக உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து எப்படிப் பிரிந்தது என்ற புதிர் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.

குழிகளுக்கு காரணம் என்ன?

சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன், பிரான்ஸுடன் கிட்டத்தட்ட 32 கி.மீ. நீளம் கொண்டிருந்த சுண்ணாம்புப் பாறையால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு புறத்தில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் ஏராளமான பனிப்பாறைகள் இருந்தன. தற்போதைய வடக்குக் கடல் வரைக்கும் அந்த ஏரியின் பனிப்பாளம் நீண்டிருந்தது. “மலைக்க வைக்கும் ஒரு நிலப்பரப்பாக அது இருந்திருக்கும்” என்கிறார் குப்தா. சிறு சிறு ஆறுகள் இல்லாமல் போயிருந்தால் ஆங்கிலக் கால்வாயே வறண்டுதான் காணப்பட்டிருக்கும்; அப்படி இருந்திருந்தால் சுற்றியுள்ள நிலப்பரப்பு அப்போது மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்திருக்கும். ஆனால், பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்ததாலோ வேறு ஏதோ காரணத்தாலோ அணையைப் போன்ற முகட்டுக்கு மேல் நீரோட்டம் பொங்கி வழிந்தது.

“அப்படி நீர் வழிந்து வீழ்ந்த அருவிகள் உருவாக்கிய பெரிய குழிகள் அரிப்புக்குள்ளாகி படிவுப் பாறையானதை (bedrock) கண்டறிந்தோம்” என்றார் குப்தா.

இப்படிப் படிவுகள் நிரம்பிய குழிகள் மிகவும் பெரியவை. 140 மீட்டர் ஆழமும் 4 கி.மீ. விட்டமும் கொண்ட குழிகள்கூட இருக்கின்றன. அந்த நிலப்பரப்பின் குறுக்கே வரிசையாக இந்தக் குழிகள் அமைந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழிகள் காரணமாக சுரங்க ரயில் பாதைத் திட்டத்துக்கான தடங்களை மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது. எனினும், இந்தக் குழிகளுக்கெல்லாம் காரணம் அருவி நீர் கொட்டியதுதான் என்பதை முதன்முறையாகத் தெளிவான உதாரணங்களுடன் இந்தப் புதிய ஆய்வு விளக்குகிறது.

தொடர்ந்து நீரால் அரிக்கப்பட்டதால் அணைபோன்ற பாறை முகட்டில் கணிசமான சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதுவரை தேக்கப்பட்டிருந்த ஏரி நீர் பாய ஆரம்பித்துப் பள்ளத்தாக்குகள் உருவாகக் காரணமாயின. அது மட்டுமல்ல இன்னும் நிறைய விஷயங்களும் உண்டு.

ஊழிப் பெருவெள்ளம்

புதிய தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. முன்பு பாறை முகடு இருந்த இடத்திலிருந்து இன்று ஆங்கிலக் கால்வாய் இருக்கும் இடம் வரை நீளும் பள்ளத்தாக்கு அது. அருவிகள் உருவாக்கிய குழிகள், மற்ற பள்ளத்தாக்குகள் ஊடாக அந்தப் பெரிய பள்ளத்தாக்கு நீள்கிறது. ஊழிப் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதை, இது உறுதிசெய்கிறது என்கிறார் குப்தா. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “நீரோட்டத்தில் காணப்பட்ட மற்ற ஏரிகளிலிருந்து வந்த வெள்ளமாக அது இருக்கலாம்” என்கிறார் குப்தா. இந்தப் பெருவெள்ளத்தால் ஆங்கிலக் கால்வாயின் மையப்பகுதி சுரண்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து டோவர் நீரிணையைத் திறந்துவிட்டன என்கிறார் குப்தா.

- தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x