Published : 13 Jun 2017 08:50 AM
Last Updated : 13 Jun 2017 08:50 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 19: மருத்துவமனைக்கு வழிகாட்டிய துரித உணவகம்!

மெக்டொனால்ட்ஸ் என்றாலே துரித உணவைப் பிரபலப்படுத்திய நிறுவனம் என்று எல்லோருக்கும் தெரியும். துரித உணவு பற்றிக் கடும் விமர்சனங்களைக் கொண்டுள்ள நான், அவர்களின் உற்பத்தி மற்றும் தொழில் சார்ந்த வழிமுறைகளைப் படித்தபோதும் பெரிதாக மதிக்கவில்லை. ஆனால், சி.கே. பிரகலாதின் ‘Fortune at the Bottom of the Pyramid’ படித்தபோது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மெக்டொனால்ட்ஸின் தொழில் வழிமுறையைப் பின்பற்றித்தான் விஸ்வரூபமெடுத்தது எனத் தெரியவந்தது. அப்படி என்ன பிரமாதமாகச் செய்கிறார்கள் என்று ஆராய்ந்தேன்.

வேகமும் வேண்டும் தரமும் வேண்டும்!

ஒரு உற்பத்தி வேலையைச் சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்க அந்த வேலையைத் துண்டு துண்டாக வெட்ட வேண்டும். பின் ஒவ்வொன்றையும் செய்யத் தனித்தனித் திறமைகள் என்ன என்று தெளிவாக அறிய வேண்டும். அந்தத் திறன்களை அதற்கான மனிதர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். ஒரு சங்கிலித் தொடர் போல அனைவரும் இணைந்து இடைவெளி இல்லாமல், பிசகில்லாமல் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு துண்டு வேலையையும் தனித்தனியாக வேகமாகச் செய்ய வழி செய்ய வேண்டும்.

அனைவரும் சேர்ந்து முடிக்க ஏதுவான கள வடிவமைப்பும் மனித ஆற்றல் நிர்வாகமும் தேவை. இது நடந்தவுடன் எங்கெல்லாம் நேரத்தைக் குறைக்க முடியும் என்பதை அறிந்து தொடர்ந்து குறைந்த நேரத்தில் செய்ய முயல வேண்டும். கடைசியில் கிடைக்கும் சிறந்த வழிமுறை நிறுவனமயமாக்கப்படும்.

“இதில் என்ன ஆச்சரியம்? ஹென்றி ஃபோர்டு செய்ததுதானே? அதே உற்பத்தி முறைதானே?” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், ஒரு சின்ன உணவகம் இதைத் தானாகச் செய்ததுதான் சிறப்பு. ஆர்டர் கிடைத்தவுடன் இத்தனை நிமிடங்களில் ஹாம்பர்கர் சப்ளை செய்யப்படும் என்றால், அதைத் தயார் செய்ய எப்படித் தங்களைச் சீரமைக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள்.

ஒரு விளையாட்டு மைதானத்தில் சாக்பீஸில் கோடுகள் கிழித்துச் சதுரம் சதுரமாகப் பணியிடங்கள் உருவாக்கி, மெல்ல மெல்ல ஆட்களையும், வேலையையும், சதுரத்தையும் நெருக்கி நெருக்கி அவர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைகிறார்கள். பின் இடைவிடாத வேகப் பயிற்சி முக்கியமானது. தரமும் பாதிக்கக் கூடாது. ஹாம்பர்கர்கள் ஒரே சுவையுடன் இருக்க வேண்டும். அப்படி என்றால் அனைத்துத் தொழில் வழிமுறைகளையும் முதலிலேயே தீர்மானிக்க வேண்டும்.

இவ்வளவு நீள - அகலத்தில் கறி, இத்தனை சொட்டு சாஸ், இத்தனை நொடிகளில் அடுக்குதல் என அனைத்தும் இயந்திரங்கள் செய்வதுபோல தரப்படுத்துகிறது. இப்படித்தான் துரித உணவை, ஒரே சுவையுடன் தயார் செய்தார்கள். இதே வழிமுறையைப் பின்பற்றித்தான் குறைந்த ஆட்களுடன் நிறைய கண் சிகிச்சைகள் செய்து சாதித்தது அரவிந்த் கண் மருத்துவமனை என்று மெக்டொனால்ட்ஸ் முறையைச் சிலாகிக்கிறார் சி.கே.பிரகலாத். ஆனால், இவ்வளவு சிறப்பாகத் தொடங்கிய கடை ஒற்றைக் கிளையாகவேதான் செயல்பட்டது.

பேசுபவரும் பேசாதவரும்

ரே க்ரோக் ஒரு விற்பனைச் சிப்பந்தி. தற்செயலாக மெக்டொனால்ட்ஸில் சாப்பிட்டபோது அதன் சிறப்பை உணர்கிறார். பின் வலிய அதன் முதலாளிகளை விருந்துக்கு அழைத்து மெக்டொனால்ட்ஸின் கதையைக் கேட்கிறார். அவர்களின் நுட்பமான வழிமுறைகள், சேவைத் தரம், விற்பனை விவரங்கள் என அனைத்தையும் அறிகிறார்.

“இதை இப்படி நடத்தக் கூடாது. நடத்தினால் இது வளராது. உங்கள் உழைப்பால் மட்டுமே இது வளர முடியாது. இது அமெரிக்கா முழுவதும் கிளை பரப்ப வேண்டிய நிறுவனம். நான் செய்து காட்டுகிறேன்!” என்று உள்ளே நுழைகிறார்.

எல்லா இடங்களிலும் உற்பத்தியாளருக்கும் விற்பனையாளருக்கும் ஏழாம் பொருத்தம். உற்பத்தியாளர் உற்பத்தி விலையைக் குறைக்க வேலைசெய்வார். விற்பனையாளர் பொருளாய் விற்க நிறைய செலவு செய்யச் சொல்வார். உற்பத்தியாளர் பேச மாட்டார். விற்பனையாளர் நிறையப் பேசுவார். மெக்டொனால்ட்ஸ் கதையும் இப்படித்தான் ஆரம்பித்தது.

கருத்து வேறுபாடுகளுக்கு அசரவில்லை

முகமை வழங்குதல் (franchise) செய்வதுதான் ஒரே வழி என்றார் ரே க்ரோக். ஒரு சின்ன ஒப்பந்தத்துடன் உள்ளே நுழைந்தவர் ஒவ்வொரு ஃப்ரான்சைஸாக வளர்க்கிறார். ஒரு கடையின் வெற்றியை நகல் எடுத்து மாகாணம் மாகாணமாய் அதை விரிவடையச்செய்கிறார். தங்க வளைவுகளை லோகோ ஆக்குகிறார். அமெரிக்கா உணவருந்தும் இடம் எனச் சிலாகிக்கிறார்.

முதலாளிகளையும் மீறி scaling செய்ய வசதியாய் சில முடிவுகள்எடுக்கிறார். கருத்து வேறுபாடுகள் வருகின்றன. க்ரோக் அசரவில்லை. மலிவு விலையில் இடத்தை வாங்கி ஃப்ரான்சைஸை அங்கு வாடகைக்கு வைக்கிறார். கடை செழிக்க இவர் சொத்து மதிப்பும் ஏறுகிறது. “நீ ஒரு கடைதான் வைத்திருந்தாய். அதைப் பல கிளைகள் கொண்ட விஸ்வரூப நிறுவனமாய் மாற்றியது நான்தான்!” என்று உரிமை கொண்டாடுகிறார். மெக்டொனால்ட்ஸ் என்றால் ரே க்ரோக் என்று சொல்லும் அளவுக்கு நிறுவனத்துக்கும் தனக்கும் branding செய்கிறார். இன்று உங்கள் வீட்டருகில் அதன் கிளை வர காரணம் ரே க்ரோக்.

மெக்டொனால்ட்ஸ் எனக்கு ஆகாது. ரே க்ரோக்கை நம்பிக்கைத் துரோகி என்றும் சொல்லலாம். ஆனால், ஒரு தொழில் விஸ்வரூபமெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு வகையில் உலகுக்கு அவர் சொல்லிக்கொடுத்தார். ஃப்ரான்சைஸ் ஒன்றுதான் வழியா என்று என்னைக் கேட்டால், அதுவும் ஒரு வழி என்றுதான் சொல்வேன். பின் வேறு என்ன வழி? இருக்கிறது தொழில்நுட்பம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x