Published : 06 Jun 2017 10:33 AM
Last Updated : 06 Jun 2017 10:33 AM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 18: அதிக நாள் வேலைசெய்தால் தொழில் வளருமா?

தொழில் தொடங்குவோரில் சிலர் மட்டுமே பெரிய அளவில் விஸ்வரூபமெடுப்பதும், பலர் சாதாரண நிலையில் இருப்பதும், பெரும்பான்மையினர் அழிவதும் இயற்கை. இதனால்தான் என்று குறிப்பிட்டு ஒரே ஒரு காரணத்தைச் சொல்ல முடியாவிட்டாலும், இதற்குப் பல்வேறு தளங்களில் விளக்கினாலும் மறுக்க முடியாத முதல் காரணம் ஒன்று உண்டு. அது முதலாளியின் இலக்கு நோக்கிய பார்வை.

அடுத்த கட்டம்தான் பிரச்சினை

நம் வாழ்க்கையில் கேட்டது கிடைக்காதது மட்டும் சோகமல்ல. கேட்டது கிடைத்து, பின் கேட்டது மிகக் குறைவானது என்று உணர்ந்துகொள்தல் பெரும் சோகம். புதுமைப்பித்தன் கதையில் வருவதுபோல் திடீரென்று கடவுள் வந்து பக்கத்தில் உட்கார்ந்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், இங்கு நம் கதையில் “வரம் தருகிறேன். உடனே கேள். நேரமாச்சு. புறப்படணும்!” என்று அரக்கப்பரக்கக் கேட்கிறார். பெரிதாக யோசிக்காமல் உடனே கேட்க தயாராக இருக்கிறீர்களா? ஆம், என்றால் அட்டகாசம். அடுத்த கேள்வி, வரம் கிடைத்த பின் கடவுள் கிளம்பிவிடுவார். “சே! இப்படிக் கேட்டிருக்கலாமே, அதைக் கேட்டிருக்கலாமே” என்று புலம்ப மாட்டீர்கள் என்று உத்தரவாதம் உண்டா?

பலரின் பிரச்சினை இதுதான். “இந்தத் தொழிலில் நல்ல காசு. எப்படியும் மாசம் இரண்டு லட்சம் நிக்கும்!” என்று இறங்கியவர்கள் பல ஆண்டுகளாக இரண்டு, மூன்று என்று ஊசலாடிக்கொண்டிருந்தால் அது வளர்ச்சியே அல்ல. ஆனால், தொழில் தொடங்குமுன் வைத்த இலக்கை அடைந்ததால் ஒரு திருப்தி நிலைவருவது சாத்தியமே. அடுத்து, இலக்கு பலருக்குக் கை கூடுவதில்லை. அவர்களின் சிந்தனை, செயல், உணர்வு மூன்றும் முதல் இலக்கிலேயே தங்கிவிடுகின்றன. அதற்கு மேல் போக முடிவதில்லை.

பல தொழில்களில் ஆரம்ப காலத்தில் பிரச்சினை இருப்பதில்லை. புதிய உத்வேகம், லட்சிய வெறி, வயது, நிரூபிக்க வேண்டிய கட்டாயம், கடன் என எல்லாம் சேர்ந்து உயர வைக்கும். அடுத்த கட்டம்தான் பிரச்சினை. கடன் முடிந்து தொழில் ஸ்திரப்பட்டு வாழ்க்கை சீராகும்போது தொய்வு ஏற்படலாம்.

பெரிதாக வளர விடாது

முதலாளியின் தேடல் முக்கியம் தொழிலில். எவ்வளவு உயரம் செல்ல வேண்டும் என்கிற ஆசைதான் எல்லாச் செயல்களுக்கும் வித்து. அது முதலிலேயே பெரிதாக இருந்தால் இடைக்காலத் தொய்வு வராது. 100 மீட்டர் ஓடுவதற்கும் மாரத்தான் ஓடுவதற்கும் வெவ்வேறு பயிற்சிகள் தேவை இல்லையா? அது போலதான் இதுவும்.

சிலநேரம், தனி மனிதரின் அதீத உழைப்பால் தொய்வு வரவும், தொழிலின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமலும் போய்விடும்.

முதலாளியாக இயங்க முடியவில்லை

இதை நானே என் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன். நிறுவனப் பயிற்சியாளராகத் தொழில் ஆரம்பித்தபோது இது தெரியவில்லை. கட்டணத்தை உயர்த்துவதும், அதிக நாட்கள் வேலை செய்வதும்தான் தொழில் வளர்ச்சி என்று நினைத்தேன். அதனால் நிறைய வேலை செய்தேன். நல்ல பெயருடன், மிகச் சிறந்த கட்டணத்தில்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், ஒரு தேக்க நிலை தெரிய ஆரம்பித்தது.

நிறைய நாட்கள் வேலை வேண்டும் என்றால் கட்டணத்தை ஏற்ற முடியாது. கட்டணத்தை ஏற்றினால் நிறைய நிறுவனங்களுக்கு வேலை செய்வது கடினம். இது என் தொழிலின் பெரிய சவாலாக இருந்தது. Volume ஆ அல்லது Value ஆ என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை. தவிர என் உழைப்பை, என் ஆரோக்கியத்தை, என் நேரத்தை மட்டுமே நம்பியிருந்தது தொழில். நான் தரத்தையும் விலையையும் கூட்டி அதற்கு உகந்த நிறுவனங்களுக்கு மட்டும் என இயங்க ஆரம்பித்தேன். அப்போதும் ஒரு freelancer போல இயங்க முடிந்ததே தவிர ஒரு நிறுவன முதலாளியாக இயங்க முடியவில்லை. பிறகு பல ஆலோசகர்களை உருவாக்கி எப்படி என் தொழில் முறையை மாற்றினேன் என்பது தனிக்கதை.

பதில் இருந்தால்தான் வளர்ச்சி

பல ஆலோசகர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களின் நிலை இதுதான். ஒரு உயரத்தில் முட்டி நிற்கும். தனி மனித உழைப்பைத் தின்று தீர்க்கும். காரணம் scaling நம் designலேயே இல்லை. நாம் நேரடியாக இல்லாவிட்டாலும் நம் தொழிலைச் செயல்படவைக்க முடியுமா? காலத்தின் இடத்தில் கட்டுப்பாடின்றித் தொழில் பெருக முடியுமா? நம் உழைப்பு மட்டுமின்றி மற்றவர்கள் உழைப்பில் தொழில் வளர்க்க முடியுமா? சந்தையில் வாய்ப்பு உள்ளவரை இந்த நிறுவனத்தை வளர்த்துக்கொண்டே போக முடியுமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் உள்ளதா? இருந்தால் மட்டும்தான் விஸ்வரூப வளர்ச்சி. முதலாளியின் இலக்கு பெரிதாக இருந்தால் இந்தக் கேள்விகளை முதலிலேயே கேட்டுவிடுவார்கள். சின்ன வளர்ச்சியில் திருப்தி அடைய மாட்டார்கள். இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை மாற்றுவார்கள்.

பிரமாதமான ஹாம்பர்கர் செய்து துரிதமாக விற்கும் மெக்டானல்ட் சகோதரர்கள்தான் துரித உணவின் பிதாமகன்கள். ஆனால், ஒரு கடையைத் தாண்டி வளர முடியவில்லை. ஒரு கடையைப் பன்னாட்டு நிறுவனமாக மாற்றியவர் ரே க்ரோக். ஒரு ஊரில் மட்டும் தெரிந்த கடையை உலகம் முழுதும் கிளை பரவச்செய்தார் அவர்.

எப்படிச் செய்தார்? சொல்கிறேன்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x