Last Updated : 18 Apr, 2017 11:59 AM

 

Published : 18 Apr 2017 11:59 AM
Last Updated : 18 Apr 2017 11:59 AM

துறை அறிமுகம்: பட்டை தீட்டும் விளையாட்டு விடுதிகள்

பி.வி.சிந்துவின் பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியல் முன்னேற்றமும், தொடர் வெற்றியும் உற்சாகமூட்டுகின்றன. அவரைப் போன்றே விளையாட்டில் ஆர்வமுள்ள தம் வீட்டுப் பிள்ளைகளும் ஜொலிக்க வேண்டுமென்பது பல பெற்றோரின் கனவாக இத்தருணத்தில் எழுந்து மறையும். ஆர்வமுள்ள பள்ளி மாணவ மாணவியருக்குப் படிப்போடு கூடிய விளையாட்டுப் பயிற்சி, ஊட்ட உணவு, உபகரணங்கள் எனச் சகல வசதிகளுடன் உதவ அரசாங்கம் காத்திருக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இன்மையால், தமிழகத்தில் பரவலாக இயங்கும் விளையாட்டு விடுதிகள் குறித்த தெளிவு இல்லை.

அனைவருக்கும் தரமான பயிற்சி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு எனப் பல்வேறு வசதிகள், பயிற்சிகள் அடங்கிய விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் 28 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள், 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் உள்ளன.

விளையாட்டில் ஆர்வமுள்ள, அடிப்படை உடல் திறனுள்ள மாணவ மாணவியருக்கு அவர்களின் கல்வி சூழலுக்குப் பங்கமின்றித் தரமான பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்க ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கவனிப்பு, தேசியச் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு என அனைத்தும் அரசு செலவில் இங்கு அளிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிளப்புகளில் கிடைக்கும் வசதிகளுக்கு நிகரான வாய்ப்பும் பயிற்சியும் இங்கு அரசுப் பள்ளியில் படிக்கும் பொருளாதார வசதியற்ற, கிராமப்புற மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

விளையாட்டு விடுதிகள்

தொடக்கத்தில் அந்தந்தப் பகுதியில் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகளில் ஒரு சிலவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்டத் தலைநகர்களில் இந்த விளையாட்டு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இவை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் செயல்படும் இவற்றில், பள்ளி மாணவ, மாணவியருக்கு எனத் தனித்தனி விளையாட்டு விடுதிகள் உண்டு.

மாணவிகளுக்கானவை ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

பிரத்தியேக வசதிகள், பயிற்சிகள்

தனித்துவ விளையாட்டுப் பயிற்சிகளோடு, ஒட்டுமொத்த உடல் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளும் இங்குக் கிடைக்கும். உணவுக்காக மட்டுமே பள்ளி மாணவர் ஒருவருக்குத் தினசரி ரூ.250 ஒதுக்கப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தையும் விளையாட்டு விடுதியில் தங்கியபடி அருகிலுள்ள பள்ளியில் சேர்ந்து பயின்றவாறு பெறலாம். காலை, மாலை ஓய்வு நேரத்திலும், விடுமுறை தினத்திலுமாகப் பள்ளிப் படிப்புக்கு இடையூறு இன்றி விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் அதற்கெனச் சிறப்பு பயிற்சிகள், போக்குவரத்து, உணவு மற்றும் வழிகாட்டுதல்களையும் செலவின்றிப் பெறலாம்.

“விளையாட்டு விடுதி மாணவர்களுக்குத் தினந்தோறும் 2.30 மணி நேரம் துறை சார்ந்த விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விடுமுறை தினங்களிலும் இவை தொடரும். 4 மாதங்களுக்கு ஒருமுறை விளையாட்டுத் திறன்கள் ஆய்வு செய்யப்படும். வருடாந்திரம் நடைபெறும் உடற்திறன் தேர்வில் போதிய வளர்ச்சி இல்லை என்றால் அவருடைய வாய்ப்பு, திறமையுள்ள மற்றொரு மாணவருக்குச் சென்றுவிடும். வாய்ப்பைத் தவறவிடாத பயன்படுத்திக்கொள்ளும் மாணவ மாணவியருக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விரும்பிய உயர் கல்வியும் வேலைவாய்ப்பும் உறுதி” என்கிறார் திருச்சி அரசு உதவி பெறும் பள்ளியொன்றில் உடற்கல்வி இயக்குநரான முனைவர் பி.சுவாமிநாதன்.

படிப்பு பாதிக்குமா?

இத்தனை வசதிகள் இருந்தும் பெற்றோர் மத்தியில் விளையாட்டு விடுதிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குத் தயக்கம் தென்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் அறியாமையே என்கிறார், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நல அலுவலரான ராமசுப்பிரமணிய ராஜா. “விளையாட்டு பயிற்சிகளால் ஒழுங்கு, உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு ஆகியவை மேம்படும். இவை அனைத்தும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளிலும் எதிரொளிக்கும்.

ஏனைய மாணவர்களுக்கான கவனச் சிதறல், சோம்பல் ஆகியவை இன்றி விளையாட்டு மாணவர்கள் படிப்பிலும் ஜொலிப்பார்கள்” என்றவர், பெரம்பலூரில் செயல்படும் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் அவற்றுக்கான உதாரண மாணவிகளை அடையாளம் காட்டினார்.

அந்த மாணவிகளில் ஒருவரான கமலி, பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். தேசிய அளவிலான போட்டிகள்வரை பங்கேற்றிருக்கும் கமலி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மாணவராக மதிப்பெண்களை அள்ளி உள்ளார். கமலியின் தந்தையான கோகுலகிருஷ்ணன், அருகிலிருக்கும் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயி. “எனக்கு நாலு மகள்கள். மொத்தக் குடும்பமும் ரெண்டு மாடுகளை நம்பி ஜீவிக்குது.

கமலி முன்னாடி படிச்ச பள்ளியோட விளையாட்டு வாத்தியார்தான் விளையாட்டு விடுதி பத்தி சொல்லி எட்டாம் வகுப்புல சேர்த்துவிட்டார். எனக்கு விவரம் போதாது. எல்லாம் இலவசமா கிடைக்குதுன்னு மகளைச் சேர்த்துவிட்டேன். இப்போ அவளுக்குப் பிடிச்ச விளையாட்டோட, படிப்பிலேயும் முன்னைவிட நல்லா தேறி வரதால சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் கமலியோட தங்கச்சியையும் அதே விடுதியில் சேர்த்துவிட்டிருக்கேன். புள்ளைங்க படிப்பு விளையாட்டுன்னு அசத்துறாங்க” என்கிறார் மகிழ்ச்சியாக.

எப்படிச் சேர்வது?

பொதுத்தேர்வுக்கான 10 மற்றும் பிளஸ் 2 தவிர்த்து ஏனைய வகுப்புகளில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளை இங்குச் சேர்க்கலாம். மாவட்ட மற்றும் மாநில அளவில் என இரண்டு கட்டங்களாகத் தேர்வு நடைபெறும். முதற்கட்ட உடல் தகுதித் தேர்வு மாவட்ட அளவில் நடைபெறும்.

# உயரமான மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

# தேர்வானவர்கள் மாநில அளவிலான தேர்வை எதிர்கொள்வார்கள்.

# இறுதியில் கலந்தாய்வின் வாயிலாக, விளையாட்டு விடுதி சேர்க்கை உறுதி செய்யப்படும்.

# சேர்க்கை விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்தளத்தில் தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகள், அங்குப் பயிற்சியளிக்கப்படும் விளையாட்டுகள், தொடர்பு எண்கள் உட்படப் பல்வேறு அவசியத் தகவல்களையும் பெறலாம்.

நழுவ விடக் கூடாத வாய்ப்பு

அஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரிலோ மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மாவட்ட அளவிலான தேர்வு மே 2 முதல் 4 வரையிலான நாட்களில் நடைபெறும். முடிவில் கலந்தாய்வுக்குத் தகுதி பெறுவோரின் பட்டியல் விளையாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்திலும் பார்வைக்கு வைக்கப்படும்.

மனிதவளம் மிக்க தேசத்தில் பி.வி.சிந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக, தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளும் பங்களிக்கக் காத்திருக்கின்றன. பயன்படுத்திக்கொள்வது நமது கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x