Last Updated : 15 Sep, 2015 12:16 PM

 

Published : 15 Sep 2015 12:16 PM
Last Updated : 15 Sep 2015 12:16 PM

தமிழுக்குள் விக்கிப்பீடியாவை நுழையுங்கள்!

இணையத்தில் தகவல்களைத் தேடும் எவரும் செய்யும் முதல் ‘க்ளிக்’ விக்கிப்பீடியாதான். அறிவுப் புரட்சியின் குறியீடாக அது மாறிவருகிறது. அது லாப நோக்கு இல்லாமல், பலரால் கூட்டாகத் தொகுக்கப்படும், பல மொழிகளில் உள்ள இணையக் கலைக்களஞ்சியம்.

வரும் காலங்களில் மாணவர்களையும், விக்கிப்பீடியாவையும் பிரிக்க முடியாது. அவர்களின் கல்விக்கும், அறிவுத் திறன்களின் தோழனாக அது மாறியுள்ளது. பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் ஆரம்பித்து கல்லூரிகளில் செய்யும் புராஜெக்ட்கள் வரை மாணவர்கள் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள்.

2001 -முதல் செயல்படும் விக்கிப்பீடியா உலகம் முழுவதும் 280 மொழிகளில் இயங்குகிறது. இந்தியாவில் 22 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்குகிறது. 2003 முதல் செயல்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 68, 925 தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் 49 லட்சம் கட்டுரைகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதனால், தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த தற்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

சமீபத்தில், விக்கிப்பீடியாவும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து சென்னையில் ‘தமிழ் விக்கிப்பீடியா பங்கேற்பு: தேவையும் திறன்களும்’ என்னும் கருத்தரங்கை நடத்தினர். இதில், தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.

மாணவர்களும் விக்கிப்பீடியாவும்

உலகம் முழுவதும் 70 நாடுகளில் ‘கல்வியில் விக்கிப்பீடியா’ என்னும் திட்டத்தின் மூலம் மாணவர்கள் எழுதுவதை ஊக்கப்படுத்துகிறது விக்கிப்பீடியா. “இந்தத் திட்டத்தை இந்தியாவில் பெரிய அளவில் செயல்படுத்த முயல்கிறோம். தற்போது, பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்கள் பங்களிப்பதைத் தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுத்திவருகிறது.

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் புராஜக்ட்டின் ஒரு பகுதியாக விக்கிப்பீடியாவுக்கான தமிழ் மென்பொருள்களை உருவாக்குகிறார்கள். மாணவர்களுக்கான போட்டிகளையும் ஆண்டுதோறும் நடத்த உள்ளோம்” என்கிறார் இந்தியாவுக்கான விக்கிமீடியா நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அ.ரவிசங்கர்.

ஏன் பங்களிக்க வேண்டும்?

தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்கள் பங்களிப்பதால் அவர்களுடைய தன்னம்பிக்கை உயரும். அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கிறது. ‘தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை' என்பார் பாரதிதாசன். தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொண்டு செய்வதும் தமிழ்த் தொண்டுதான் என்கிறார் ரவிசங்கர்.  கர்சன் என்னும் மாணவர் 2013-ல் விக்கிப்பீடியா நடத்திய ‘உலகளாவிய தமிழ்க் கட்டுரை போட்டி’களில் கலந்துகொண்டார்.

அதற்குப் பிறகு, தொடர்ந்து விக்கிப்பீடியாவில் எழுதத்தொடங்கினார். அவர் ‘பிலிப்பைன்ஸ்’ பற்றிய கட்டுரையை 70 பக்கங்களுக்குத் தொகுத்திருக்கிறார். இந்தக் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் சிறந்த கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இப்படி மாணவர்கள் பலரும் முன்வந்து பங்களித்தால், தமிழ் விக்கிப்பீடியாவை விரைவாக மேம்படுத்த முடியும் என்றும் ரவிசங்கர் சொல்கிறார்.

தமிழ் மொழியைப் பயன்படுத்தும் வசதியிருக்கும் இணையதளங்களைத் தமிழிலேயே பயன்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும். அப்படியில்லாவிட்டால், இணையத்தில் கணினித் தமிழ் பயன்பாட்டைப் பரவலாக்குவது கடினமாகிவிடும் என்று சொல்லும் ரவிசங்கர், “உதாரணத்துக்கு, பேஸ்புக், ஜிமெயில் போன்ற தளங்களை இப்போது தமிழில் பயன்படுத்த முடியும்.

ஆனால், பெரும்பாலானோர் தமிழில் பயன்படுத்துவதில்லை. பயனர்களின் எண்ணிக்கை குறைந்தால், அந்தக் குறிப்பிட்ட மொழி வசதியை நிறுவனங்கள் நிறுத்திவிடுவதற்கான அபாயம் இருக்கிறது. இந்தப் போக்கு எந்த மொழிக்கும் நல்லதல்ல. அதனால், மாணவர்கள் பெரும்பாலும் இணையத்தில் சொந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும். அந்த மொழியில் தகவல்களை மேம்படுத்த முன்வர வேண்டும்” என்கிறார் அவர்.

என்ன பங்களிக்கலாம்?

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பல்வேறு விதங்களில் பங்களிக்க முடியும். எழுதுவதில் ஆர்வம் இருப்பவர்கள் புதிய கட்டுரைகளை எழுதலாம். நீங்கள் எழுதப்போகும் தலைப்பு தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது. ஏற்கெனவே எழுதியிருக்கும் கட்டுரைகளில் மேலும் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தலாம். ஆனால், நீங்கள் எழுதும் தகவல்களுக்குப் போதிய சான்றுகள் இருக்க வேண்டியது அவசியம்.

சொல்வளத்துடன் இருப்பவர்கள் ‘தமிழ் விக்சனரி’யில் (Wiktionary) புதிய சொற்களைச் சேர்க்கலாம். ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் இருப்பவர்கள் விக்கிப்பீடியா பொதுவகத்தில் (Wikimedia Commons) தாங்கள் எடுத்த ஒளிப் படத்தைக் பகிர்ந்துகொள்ளலாம். இதில் அந்தப் படத்தை அனைவரும் பயன்படுத்த உரிமையளிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், அந்தப் படம் உங்களுடையதுதான் என்பதற்கான பதிவுகளை யாரும் மாற்ற முடியாது.

அதேமாதிரி, ஒலிப்பதிவுகள், காணொளிகளையும் விக்கிப்பீடியாவில் பதிவேற்ற முடியும். உதாரணமாக, நீங்கள் குறும்படம் எடுத்தால், அதை விக்கிப்பீடியா பொதுவகத்தில் பகிர்ந்துகொள்ள முடியும். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு அந்தக் குறும்படத்தை மேம்படுத்த முடியும். அந்தப் படத்தை மற்றவர்களும் பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும்.

இது மட்டுமல்லாமல், ‘விக்கி செய்திகள், ‘விக்கி மூலம், ‘விக்கி நூல்கள், ‘விக்கி மேற்கோள், ‘விக்கி தரவு’ எனப் பல்வேறு விதங்களில் உங்கள் ஆர்வத்துக்கு ஏற்றபடி விக்கிப்பீடியாவில் பங்களிக்க முடியும்.

பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போது தான் அறிவின் நோக்கம் நிறைவேறு கிறது. தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பது எட்டுக் கோடி தமிழ் மக்களோடு தகவலறிவைத் தமிழில் பகிர்வதற்கான சிறந்த வழி.

தமிழ் விக்கிப்பீடியர்களோடு இணைந்துகொள்ள; >https://www.facebook.com/groups/TamilWikipedians/ எனும் முகநூல் குழுமத்தில் சேரலாம்.

கட்டுரை எழுத, ( >https://ta.wikipedia.org/s/ae), படங்கள், ஒலிப்பதிவுகளைச் சேர்க்க ( >https://commons.wikimedia.org/), புதிய சொற்களைச் சேர்க்க ( >https://ta.wiktionary.org/s/2en) எனும் சுட்டிகளின் வழியாக விக்கிபீடியாவுக்குள் நுழையுங்கள். தமிழுக்குள் விக்கிப்பீடியாவை நுழையுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x